Published:Updated:

`30 நாள் டெட்லைன்... புறக்கணிக்கப்பட்ட எடப்பாடி!’ - மோடியின் தமிழக வியூகம் என்ன?

தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸ் அணிக்கு 40 இடங்களும் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் மோடியின் எண்ணம். அதை நோக்கித்தான் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

`30 நாள் டெட்லைன்... புறக்கணிக்கப்பட்ட எடப்பாடி!’ - மோடியின் தமிழக வியூகம் என்ன?
`30 நாள் டெட்லைன்... புறக்கணிக்கப்பட்ட எடப்பாடி!’ - மோடியின் தமிழக வியூகம் என்ன?

பிரதமர் மோடியின் தமிழகப் பயணத்தை மையமாக வைத்து கூட்டணிக் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர் தமிழக பா.ஜ.க தலைவர்கள். `அ.தி.மு.க கூட்டணியை மோடியும் விரும்பவில்லை என்பதை பா.ஜ.க-வினர் உணரவில்லை. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியிலும் இது எதிரொலித்தது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உரையைத் தொடங்கினார். அவரது வருகையின்போது, எந்த இடத்திலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. தேவேந்திரகுல வேளாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்றவர், முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தை மட்டும் பேசிவிட்டுக் கேரளா கிளம்பிவிட்டார். அவரது வருகையின் மூலம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளதாக உற்சாகப்படுகின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்.

இந்தத் `திடீர்' உற்சாகம் பற்றி நம்மிடம் பேசிய டெல்லி பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ``எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, கூட்டணி தொடர்பாக எந்த சிக்னலையும் கொடுக்கவில்லை. `இங்கு ஒரு கூட்டணி அமையாதா?' எனத் தமிழிசை, பொன்னார், வானதி ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமையும் எனச் சிலர் தகவல்களைக் கசிய விடுகின்றனர். உண்மையில், தமிழக வருகையில் அ.தி.மு.க பிரதிநிதிகளை பிரதமர், ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எய்ம்ஸ் தொடக்கவிழா தொடர்பான மத்திய அரசின் விளம்பரத்தில் மோடி படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறவில்லை. இதே இடத்தில் சந்திரபாபு நாயுடுவோ, சந்திரசேகர ராவ் ஆகியோர் அரசியல்ரீதியாக மோதல் வெடித்திருக்கும். இதிலிருந்தே அ.தி.மு.க கூட்டணியை மோடி விரும்பவில்லை என்பதை இவர்கள் உணரவில்லை" என விவரித்தவர், 

``எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் டெல்லி பா.ஜ.க வட்டாரம் கண்டுகொள்ளவில்லை. இதே கருத்தில் மத்திய அமைச்சர்கள் சிலரும் உள்ளனர். அ.தி.மு.க-வோடு கூட்டணியை அமைக்க விரும்பாதபட்சத்தில், தமிழ்நாட்டில் பிரமாண்ட கூட்டணி எனத் தமிழகத் தலைவர்கள் பேசி வருகின்றனர். எய்ம்ஸ் விழாவில், அ.தி.மு.க அரசைப் புகழ்ந்து பேசுவதற்கு இவர்கள் ஏற்பாடு செய்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏனென்றால், இன்னும் இங்கு கூட்டணி எதுவும் முடிவாகவில்லை. `அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்தால் 40 தொகுதிகளும் கைவிட்டுப் போய்விடும்' என டெல்லித் தலைவர்கள் நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸ் அணிக்கு 40 இடங்களும் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதை நோக்கித்தான் தங்களுடைய கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். 

அதன் ஒருகட்டமாக, திருவாரூரில் தேர்தல் நடத்தினால், `தி.மு.க, காங்கிரஸ் வாக்குகளை தினகரன் பிரிப்பார், அண்ணா தி.மு.க மூன்றாவது இடத்துக்குப் போய்விடும். தி.மு.க பக்கம் போகக் கூடிய வாக்குகள் உடையும்' என நினைத்தார்கள். இதை அறிந்து காங்கிரஸ் மற்றும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மூலமாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க வைத்து முறியடித்துவிட்டார் ஸ்டாலின். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குப் போவதாக இருந்திருந்தால், திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்திருக்க மாட்டார்கள். டெல்லியின் மனநிலை இதுதான். மத்திய உளவுத்துறை ரிப்போர்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு தமிழக நிலைமைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார் மோடி. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தமிழக அரசியல் சூழல்களை தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு வரும் வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்" என்றார் நிதானமாக. 

பா.ஜ.க கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``கூட்டணி தொடர்பாக பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி வேண்டாம் என 80 சதவிகித தொண்டர்கள் கூறுவதால், அவர்களின் கருத்துப்படியே செல்லலாம் என்ற முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எம்.பி-க்களும் இதே கருத்தில் உறுதியாக உள்ளனர். 1`தொண்டர்களின் விருப்பத்தின்படி சென்றால், தினகரனுக்கு 5 சதவீத வாக்குகளும் தனக்கு 35 சதவீத வாக்குகளும் வந்து சேரும்' என நினைக்கிறார் முதல்வர். இதைப் பற்றிப் பேசியவர், `பா.ஜ.க-வை நாம் எதிர்த்தால், தினகரன் பூஜ்ஜியமாகிவிடுவார். நாம் கூட்டணிக்குள் செல்ல விரும்பாததால்தான் அவர் மாற்றிப் பேசுகிறார்' எனக் கூறினார். பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்களும், `பா.ஜ.க கூட்டணி வேண்டாம்' எனக் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பன்னீர்செல்வம் குறுக்குசால் ஓட்டிக் கொண்டிருக்கிறார். `பெரும்பான்மைத் தொண்டர்களின் முடிவுக்கு ஏற்ப முடிவெடுப்போம்' என்ற முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் உறுதியாக.