Published:Updated:

முதல்வர் கூட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு... வெற்றி மாலையா, வெட்டி வேலையா?

"கேட்கச் சுவாரஸ்யமாக இருக்கிற இந்தக் கோடிகளின் பின்னால் இருக்கிற ஆபத்துகளையும் அரசு வெளிப்படையாக விவாதிப்பது நல்லது!"

முதல்வர் கூட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு... வெற்றி மாலையா, வெட்டி வேலையா?
முதல்வர் கூட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு... வெற்றி மாலையா, வெட்டி வேலையா?

சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெற்றி பெற்றிருக்கிறது என்றும், பல்வேறு பிரச்னைகளைத் திசைதிருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி அரசு போட்ட அவசர மேடை என்றும் இரு வேறு விதமான கருத்துகள் முட்டி மோதுகின்றன. 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி இரு தரப்பிலும் ஒவ்வோர் ஆளுமையுடன் பேசினோம். இந்த மாநாட்டைப் பற்றிய சிறப்பம்சங்களை முன்வைத்துப் பேச ஆரம்பித்தார், இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் தமிழகத் தலைவரான பொன்னுசாமி.

``உலக நாடுகளின் முதலீட்டை ஈர்ப்பதில், இந்திய மாநிலங்கள் அனைத்துமே போட்டி போட்டாலும், கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளத்தால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை பெற்றுவருகிறது. அண்மையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள `தமிழ்நாடு வணிக உதவிகள் சட்டம் மற்றும் விதிகள் - 2018' (Tamilnadu Business Facilitation Act & Rules - 2018), தொழில் தொடங்குவதற்கான முன் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்த்து, இன்னும் எளிதாக்கியிருக்கிறது.

அதாவது, `தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் பெரும் நிறுவனங்கள் அனுமதி கோரும் விண்ணப்பத்தை இணையம் வழியாகவே அனுப்பிவைத்து, ஒரு மாதத்துக்குள் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, சி.எம்.டி.ஏ உள்ளிட்ட 11 துறைகளின் ஒப்புதலையும் பெற்றுவிட முடியும். நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதற்கான விளக்கத்தை மனு அளித்த ஒரு வாரத்துக்குள்ளாகச் சம்பந்தப்பட்ட துறை கேட்டுப் பெற வேண்டும்" என இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இதில் கூடுதல் சிறப்பாக, குறுந்தொழில் முனைவோர்கள் முன் அனுமதி கோருவதற்கெனத் தனி இணையதள வசதியையும் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற கட்சியும்கூட, ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் பெரும் நிறுவனங்களோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்த விதிகளை மீறாமல், தாங்களும் தொடர்ந்து செயல்படுத்தி வருவதுதான் அது. நடந்து முடிந்த இந்த மாநாட்டில், குறுந்தொழில்களுக்கான முதலீட்டில் மட்டும் 33,000 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இன்னும்கூட 20,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்கிறார் பொன்னுசாமி பெருமையுடன்.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் பேசினோம். ``உலக முதலீட்டாளர் மாநாட்டில் இத்தனை ஆயிரம் கோடி முதலீடு என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர, அதில் அரசுக்குக் கிடைக்கக் கூடிய ஆதாயம் என்ன, என்ன மாதிரியான வரிவிலக்குகளை அந்த நிறுவனங்களுக்கு அளிக்கிறார்கள், என்ன ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார்கள், நிறுவனங்களால் உருவாகக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள். ஒரு கம்பெனி, `ஆயிரம் பேருக்கு நேரடியான வேலைவாய்ப்பு தந்திருக்கிறது' என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். அதேநேரத்தில் மறைமுக வேலைவாய்ப்பு என்பதற்கு நம்பகமான கணக்கு இருப்பது இல்லை. பிரபல கார் கம்பெனி சப் ஏஜென்ஸி மூலம் காருக்கான உதிரி பாகங்களைத் தயாரித்து வாங்குகிறது. கார் ஃபேக்டரி எனச் சொல்லப்படுகிற இடத்தில் அசெம்பிள் செய்யும் வேலை மட்டுமே நடக்கிறது. அங்கே நிரந்தரப் பணியாளர்கள் அல்லது நேரடிப் பணியாளர்கள் சில ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். மறைமுகப் பணியாளர்கள் என்பதற்குச் சரியான எண்ணிக்கை இல்லை. அதைத் தோராயமாக ஒரு லட்சம் பேருக்கு மறைமுக வேலை என்கிறார்கள். அவர்களுக்கு நேரடிப் பணியாளர்களுக்கான சம்பளமோ, சலுகைகளோ இருக்கப் போவதில்லை. 

மேற்குவங்கத்திலிருந்து குஜராத்துக்குப் போன டாடா கார் கம்பெனி பற்றி அறிந்திருப்போம். ஒரு ஊருக்குத் தொழிற்சாலை வந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும்தானே என்பதுதான் பலருடைய கருத்தாக இருந்தது. குஜராத், பொன்விளையும் பூமி ஆனது என்றார்கள். பத்து ஆண்டுகள் கழித்து இப்போது `குஜராத்தில் எவ்வளவு முறைகேடுகள் நடந்தன' எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு ஒரு புத்தகமே போட்டிருக்கிறார்கள். மானியம், வரித் தள்ளுபடி, சுற்றுச்சூழல் கேடு எனப் பல பாதிப்புகள் பற்றி யாரும் பேசுவதில்லை.

என்னை ஒரு ஸ்டீல் ஃபேக்ட்ரிக்கு அழைத்துச் சென்றார்கள். ஆயிரத்து ஐந்நூறு பேர் வேலை செய்துகொண்டிருந்த ஃபேக்ட்ரி அது. புதுப்பித்து இருப்பதாகச் சொல்லித்தான் எங்களுக்குச் சுற்றிக் காண்பித்தார்கள். பார்த்தால் முழுக்க மிஷின்கள். மேலே கண்ணாடி அறைக்குள் நூறு இன்ஜினீயர்கள் அதை மானிட்டர் செய்துகொண்டிருந்தார்கள். தொழிற்சாலை வந்தால் வேலைவாய்ப்பும் பெருகும் என எப்படிச் சொல்ல முடியும்? மிஷின்களால் எத்தனை பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்களோ, அவர்கள் ஊதியத்தில் பிடிக்கப்பட்ட வரிகளையாவது நிறுவனங்களிடம் பெறுவார்களா? ஆக, கேட்கச் சுவாரஸ்யமாக இருக்கிற இந்தக் கோடிகளின் பின்னால் இருக்கிற ஆபத்துகளையும் அரசு வெளிப்படையாக விவாதிப்பது நல்லது’’ என்றார்.