Published:Updated:

“எடப்பாடியின் சிரிப்பும்... மோடியின் இறுக்கமும்!” - பஞ்சாயத்தில் இறங்கிய பி.ஜே.பி

பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதிப்பதைவிடத் தனித்து களம் இறங்கி கௌரவமான வாக்குகளைப் பெறலாம் என்கிற எண்ணமே இப்போது கட்சிக்குள் மேலோங்கிவிட்டது.

“எடப்பாடியின் சிரிப்பும்... மோடியின்  இறுக்கமும்!” - பஞ்சாயத்தில் இறங்கிய பி.ஜே.பி
“எடப்பாடியின் சிரிப்பும்... மோடியின் இறுக்கமும்!” - பஞ்சாயத்தில் இறங்கிய பி.ஜே.பி

அ.தி.மு.க. - பி.ஜே.பி. இடையே கூட்டணி இருக்குமா... இருக்காதா என்ற கேள்விக்கு இதுவரை விடைகிடைக்காத நிலையில், பிரதமர் மோடி வருகைக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் உள்ள பி.ஜே.பி. எதிர்ப்பு தலைவர்களைச் சரிக்கட்டும் வேலையில் டெல்லி பி.ஜே.பி. தலைமை இறங்கியுள்ளது. 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொள்ள வந்த மோடியை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு, கூட்டணி விஷயத்தில் ஒரு முடிவு வந்துவிடும் என்று சொல்லிவந்த தமிழக பி.ஜே.பி-யினர், இந்தச் சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தச் சந்திப்பில் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற வருத்தம் இப்போது பி.ஜே.பி-யினரிடம் தெரிகிறது. 

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அ.தி.மு.க எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர், பி.ஜே.பி-யினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் டெல்லி பி.ஜே.பி மேலிடத்தின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல், ஆட்சியை நடத்தும் எடப்பாடியும், டெல்லி சொல்வதுவே சித்தம் என்ற போக்கில் அவருடைய செயல்பாடுகள் இருந்தன. பி.ஜே.பி தரப்புக்குப் பணிந்துபோவதை கட்சியின் அடிமட்டத் தொண்டன்கூட விரும்பவில்லை என்கிற விஷயம் அ.தி.மு.க-வின் தலைவர்களுக்குப் புரியாமல் இருந்தது. புரியாமல் இருந்தார்களா அல்லது புரிந்துகொண்டே காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்களா என்று நிர்வாகிகள் தவித்து வந்தனர். இதற்கான விடையை, மறைமுகமாக மோடியிடம் உணர்த்தியுள்ளார் எடப்பாடி.

அ.தி.மு.க-வின் அதிகாரமிக்க தலைவராகத் தன்னை நிலைநாட்டிக்கொள்ள இதைவிட ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்கிற மனநிலை மதுரைக்கு வரும் முன்பே எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், விமான நிலையத்தில் மோடியை வரவேற்றவர் பணிவைக் காட்டியபோதும், பதற்றம் அடையவில்லை. நிகழ்ச்சியிலும் அ.தி.மு.க வேறு, பி.ஜே.பி வேறு என்கிற கருத்தை பி.ஜே.பி-யினர் உணரும்வகையிலேயே எடப்பாடியின் நடவடிக்கை இருந்தது. அதன்பிறகு, மோடியை வழியனுப்ப விமான நிலையத்துக்கு அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சென்றனர். 

10 நிமிடங்கள் மதுரை விமான நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. `கோ பேக் மோடி' என்ற எதிர்ப்பினால் ஏற்கெனவே மோடிக்கு வருத்தம் இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் அதைப் பயன்படுத்தும் தந்திரம் மோடிக்கு எளிதானது. அந்த வாய்ப்பு மதுரை விமான நிலையத்தில் வந்தது. தமிழக அரசு குறித்து சில விஷயங்களை எடப்பாடி தரப்பு மோடியின் காதுக்குக்  கொண்டுசென்றனர். மோடியின் பேச்சு, கூட்டணி விஷயத்துக்குச் சென்றுள்ளது. தனது டிரேட் மார்க் சிரிப்புடனேயே மோடியிடம், ``கூட்டணி விஷயத்தில் எங்கள் கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சிக்குள் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்தும் பலமாக எதிரொலிக்கிறது. அவர்களையும் சரி செய்ய வேண்டும். கூட்டணி இல்லை என்றாலும் தேர்தலுக்குப் பிறகு எங்கள் ஆதரவு உங்களுக்குக் கண்டிப்பாக உண்டு” என்று பட்டும்படாமல் எடப்பாடி சொல்லியுள்ளார். பணிவும், பவ்யமும் அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவிடம் கற்றுக்கொண்ட பாடம். அதைக் காட்டியே தன்னிடம் கூட்டணி இல்லை என்பதைச் சூசகமாகச் சொல்லவருகிறார் எடப்பாடி என்பதை உணர்ந்த மோடியின் முகம் இறுகியுள்ளது. ``சரி முடிவுபண்ணிச் சொல்லுங்கள்” என்கிற ரீதியில் கருத்துச் சொல்லிவிட்டு விறுவிறு என விமானத்துக்குச் சென்றுவிட்டார், மோடி. ஆனால், எடப்பாடி சொன்ன தகவல், டெல்லி பி.ஜே.பி. மேலிடத்துக்குத் தெரிந்துள்ளது. 

கூட்டணி விஷயத்தில் யாரிடமும் நேரடியாக மோடி பேசியதில்லை. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு சேனல்கள் வழியாகவே இந்தப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அந்த வகையில், அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய தரப்புக்கு இந்தத் தகவல் தெரிந்துள்ளது. அ.தி.மு.க-வில் யாரெல்லாம் பி.ஜே.பி. எதிர்ப்பு மனநிலையில் உள்ளார்கள் என்று விசாரித்துள்ளார்கள். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ. செம்மலை, கட்சியிலிருந்து நீக்கபட்ட கே.சி.பழனிசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் பட்டியல் அவர்கள் கைக்குக் கிடைத்துள்ளது. 

தம்பிதுரையைச் சரிக்கட்டும் வேலையில் ஏற்கெனவே பி.ஜே.பி -தரப்பில் இறங்கிவிட்டார்கள். பிறரிடம் டெல்லியிலிருந்தே பேச ஆரம்பித்துள்ளார்கள். ``பி.ஜே.பி-யைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் என்ன சிக்கல்” என்று சில பாய்ன்ட்ஸ்களைக் கேட்டுவருகிறார்கள். அவர்களிடம், பி.ஜே.பி கூட்டணிக்கு வந்தால் என்ன நன்மை என்பதையும் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வேலைகள் ஆரம்பித்துவிடும், அதற்குள் நமக்குள் கூட்டணி பேரத்தை முடித்து தேர்தல் வேலையை ஆரம்பித்துவிடவேண்டும்” என்று அப்போது நாசுக்காகச் சொல்லியுள்ளார்கள். எடப்பாடியின் அரசியல் இந்த முறை ஒர்க் அவுட் ஆகிவிட்டது. ``எடப்பாடியின் சிரிப்பு இத்தனை நாள்கள் மோடியை மகிழ்வித்துவந்தது. அதே சிரிப்பு, இப்போது மோடியை உஷ்ணப்படுத்திவிட்டது” என்ற கமென்ட் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள். 

அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், ``பத்து நாள்களுக்கு முன்புவரை பி.ஜே.பி-யுடன் கூட்டணி என்பதை உறுதியாக நம்பினோம். ஆனால், கட்சிக்குள்ளும் பொதுவெளியிலும் இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு இருப்பதை உணர்ந்துகொண்டோம். குறிப்பாக, வட இந்திய செய்தி சேனல்கள்கூட இந்தக் கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறாது என்று தெரிவித்தது. பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதிப்பதைவிட தனித்து களம் இறங்கி கௌரவமான வாக்குகளைப் பெறலாம் என்கிற எண்ணமே இப்போது கட்சிக்குள் மேலோங்கிவிட்டது” என்றார்.

``அ.தி.மு.க ஒன்றும் அடிமைக் கட்சி இல்லை” என்பதை எடப்பாடி தனது பாணியில் உணர்த்தியுள்ளார் என்கிறார்கள், அ.தி.மு.க-வினர்.