Published:Updated:

ஓட்டல்களுக்கான ஆடம்பர வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு!

ஓட்டல்களுக்கான ஆடம்பர வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு!
ஓட்டல்களுக்கான ஆடம்பர வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு!
ஓட்டல்களுக்கான ஆடம்பர வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு!

சென்னை: ஓட்டல்கள் ஆடம்பர வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு 199 ரூபாயிலிருந்து  499 ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர வரிச் சட்டத்தின் கீழ், தற்போது ஓட்டல்களில் வாடகைக்கு விடப்படும் அறைகளின் கட்டணம் 199 ரூபாய் வரையில்  இருந்தால் வரி விலக்கும், 200 ரூபாய் முதல் 499 ரூபாய் வரையில் இருந்தால்  5 விழுக்காடு வரியும், 500 ரூபாய் முதல் 999 ரூபாய் வரையில் இருந்தால் 10 விழுக்காடு வரியும், 1000 ரூபாய் மற்றும் அதற்கு மேலிருந்தால் 12.5 விழுக்காடு வரியும்  ஆடம்பர வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஆடம்பர வரி விலக்கிற்கான வாடகை உச்சவரம்பு 199 ரூபாய் என்பதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. இந்தக் கோரிக்கையினை ஏற்று, ஆடம்பர வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு 199 ரூபாயிலிருந்து  499 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால் 500 ரூபாய்க்கு கீழ்  வாடகை உள்ள அறைகளை வாடகைக்கு எடுக்கும் சாதாரண, நடுத்தர மக்கள் பயன்பெறுவர்.

அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் வணிகவரித் துறை அலுவலகங்கள் பெரும்பாலும் வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருவதால் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, 2011-2012 ஆம் ஆண்டில்  34 அலுவலகங்களுக்கும், 2012-2013 ஆம் ஆண்டில் 16 அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டில் வாள் வச்ச கோஷ்டம், தேவகோட்டை, சிதம்பரம், ஆற்காடு, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய
7 இடங்களில் இயங்கி வரும் 9 வணிகவரி அலுவலகங்களுக்கு 10 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.

##~~##
இந்தக் கட்டடங்களில் "தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை-2012"ன் நோக்கங்களின்படி சூரிய சக்தியினைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மேற்கூரைகள் பொருத்தப்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில்  பாதுகாக்கப்பட்டு வரும் ஆவணங்கள் நிரந்தரமான பதிவுறுக்கள் என்பதால், அவற்றை தீ விபத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். எனவே, அனைத்து அலுவலகங்களுக்கும் தீ விபத்து தடுப்பு  உபகரணங்களான  தீ தடுப்பான்கள், தீ தடுப்பு வாளிகள், மின் இணைப்பு முறிப்பான்கள், அலுமினிய ஏணிகள் ஆகியவை வழங்கப்படும் என்பதையும், இவற்றைப் பயன்படுத்த பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என்பதையும் இதற்காக 4 கோடியே 78 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.