அலசல்
சமூகம்
Published:Updated:

“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்!’’

“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்!’’

ரூபா ஐ.பி.எஸ். சிறப்புப் பேட்டி

தேர்தல் நெருங்கும் நிலையில், சசிகலாவைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிறையின் விதிகளை சசிகலா மீறியது குறித்த விசாரணை அறிக்கை, அதைச் சந்தேகத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தச் சூழலில், சசிகலாவின் சிறை விதிமீறல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரியான (ஊர்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி) ரூபாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

“சசிகலாவை சிறையில் முதல்முறையாகப் பார்த்தது எப்போது, அப்போது அவரிடம் என்ன பேசினீர்கள்?”

“முதல்முறை பார்த்தபோது எதுவும் பேசவில்லை. இரண்டாவது முறை சென்றபோது பேசினேன். என்னிடம் கன்னடத்தில்தான் பேசினார். சமீபகாலமாக கன்னடம், யோகா கற்றுவருவதாகத் தெரிவித்தார். மற்ற கைதிகளைப் போலத்தான் அவரையும் பார்த்தேன்.” 

“விதிகளை மீறி சசிகலாவுக்கு என்ன மாதிரியான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன?”

“நான்கைந்து அறைகளை ஒருவருக்கே கொடுத்திருந்தார்கள். பலர் இருக்க வேண்டிய இடத்தில் இருவர் மட்டுமே இருந்தனர். சமையல் பொருள்களும் அங்கு இருந்தன.”

“வெறும் 18 நாள்களில், இதை எப்படிக் கண்டுபிடித்து, நிரூபித்தீர்கள்?”

“சசிகலா பையை எடுத்துக்கொண்டு வருவதுபோல் இருக்கும் வீடியோவை நான் எடுக்கவில்லை. எனக்குச் சிலர் கொடுத்தார்கள். அதைப் பார்த்த பிறகுதான், சசிகலாவுக்கு வசதிகள் செய்துகொடுப்பது தெரியவந்தது. அதன் பிறகு சில படங்களை எடுத்து, வைத்திருந்தேன். அதைத்தான் விசாரணை கமிட்டியில் கொடுத்தேன். அவர்களும் அதை உண்மை என்று சொல்லியிருக்கிறார்கள்.”

“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்!’’

“சிறையில் சசிகலா கஷ்டப்படுவதாகச் சொல்கிறார்களே... உண்மையா?”

“அப்படியெல்லாம் தெரியவில்லை. சசிகலா காலையில் நடைப்பயிற்சி செய்வார். பேப்பர் படிப்பார். அதன் பிறகு டி.வி பார்ப்பார். அவ்வளவுதான்.”

“சிறையில் சசிகலா ஊதுபத்தி செய்வதாகச் சொல்லப்பட்டதே?”

“அதுவும் தவறு. சிறையில் இப்போதுதான் பெண்கள் சுயதொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. எதுவுமே தெரியாமல், சசிகலா ஊதுபத்தி தயாரிக்கிறார் என்று எழுதிவிட்டார்கள்.”

“நன்னடத்தை அடிப்படையில் சசிகலா முன்கூட்டியே வெளியில் வர வாய்ப்பு இருக்கிறதா?”

“அதை, இப்போது இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள்தான் முடிவுசெய்ய வேண்டும்.”

“சசிகலாவுக்கு சிறையில் அச்சுறுத்தல் இருக்கிறதா... அதனால்தான் கூடுதல் அறைகள் கொடுத்தார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டதே?”

“நான் பணியில் இருந்தபோது எந்த அச்சுறுத்தலும் இருந்ததாகத் தெரியவில்லை. சசிகலா இருக்கும் இடத்தில் எப்போதுமே காவலர்கள் இருப்பார்கள். பரப்பன அக்ரஹார சிறையில் விசாரணைக் கைதிகள் மட்டும் நான்காயிரம் பேர் உள்ளனர். தண்டனைக் கைதிகளாக ஆண்கள் ஆயிரம் பேரும், பெண்கள் நூறு பேரும் உள்ளனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வசதிகள் ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்படுவது சிறைத்துறை விதிகளை மீறுவதாகும்.”

“சிறையைவிட்டு சசிகலா எங்கே சென்றார், ஷாப்பிங் போனது உண்மையா?”

“அது எனக்குத் தெரியாது. எனக்குக் கிடைத்த வீடியோவைப் பார்த்துதான் நானே தெரிந்துகொண்டேன்.  அவர் எங்குசென்றார், எப்படிச் சென்றார் என்பதை விசாரிக்க வேண்டும் என்றுதான் என் அறிக்கையில் தெரிவித்தேன். அதற்குள் என்னைப் பணிமாற்றம் செய்துவிட்டார்கள்.”

“ ‘சிறை விதிமுறைக்கு உட்பட்டுத்தான் வண்ண உடைகளை அணிகிறேன்’ என்று வினய்குமார் விசாரணையில் சசிகலா தெரிவித்திருக்கிறாரே?”

“கர்நாடக சிறைத்துறை சட்டத்தின்படி, தண்டனைக் கைதிகள் கண்டிப்பாக வெள்ளை உடைதான் அணிய வேண்டும். விசாரணைக் கைதிகளில் சிலர் வண்ண உடை அணியலாம்.”

“ஏ கிளாஸ் சிறையில் இருப்பவர்கள் வண்ண உடை அணியலாமா?”

“கர்நாடக மாநிலச் சிறைத் துறை கையேட்டில் ‘ஏ- கிளாஸ்’ வகுப்பு  இல்லை. ஏ-1 வகுப்புதான் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காகக் கைதானவர்களுக்கு மட்டும்தான் இந்த வசதி. உதாரணமாக, மகாத்மா காந்தி அவர்கள் இந்த நாட்டுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார் அல்லவா... அப்படிப்பட்டவர் களுக்காகதான் இந்த ஏ-1 சிறை. எனவே, சிறைத்துறை கையேடு சொல்வதை வைத்துப் பார்த்தாலும், நீதிமன்ற உத்தரவை வைத்துப் பார்த்தாலும் சசிகலாவுக்கு ஏ-1 சிறை கிடையாது.”

“உங்கள் மீது மானநஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கிறதே?”

“அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நான் சொன்ன உண்மை இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நான் இந்த வழக்கை எதிர்கொள்ளக் கூடாது என்றுதான் ஓய்வுபெற்ற அதிகாரி வினய்குமாரின் அறிக்கையை எனக்குக் கொடுக்கவில்லை. போராடித்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அதைப் பெற்றேன். எனவே, எது நடந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொள்வேன்.”

“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்!’’

“சசிகலா விவகாரத்தில் மிரட்டல் எதுவும் வந்ததா?”

“மிரட்டல்கள் இல்லாமலா... அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், சசிகலா விஷயத்துக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து எனக்கு வாழ்த்துக் கடிதங்கள் குவிகின்றன. அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. நூற்றுக்கணக்கான கடிதங்களைக் கைப்பட எழுதி பலரும் வாழ்த்தியது, மகிழ்ச்சி அளிக்கிறது. இவை எல்லாம் என்னை மேன்மேலும் நேர்மையுடனும் துணிச்சலுடனும் செயல்படத் தூண்டுகின்றன. கர்நாடகத்திலிருந்துகூட எனக்கு இந்த மாதிரிக் கடிதங்கள் வரவில்லை.”

“சிறையில் நிறையப் பிரச்னைகள் இருக்கும்போது, நீங்கள் சசிகலா குறித்து மட்டுமே பேசுவதாகச் சொல்கிறார்களே?”

“நீங்கள் சசிகலா குறித்துக் கேட்டால், சசிகலா தொடர்பான விஷயங்களைத்தானே பேச முடியும். என் அறிக்கையில் சசிகலா குறித்து இரண்டு விஷயங்கள் மட்டுமே சொல்லியிருந்தேன். சிறைக்குள் கஞ்சா புழக்கம் இருப்பதையும், கைதிகள் வசதிகள் குறித்தும் சொல்லியிருந்தேன். அவை வெளியே வராததற்கு நானா காரணம்?”

“மீடியா வெளிச்சத்துக்காகத்தான் இதையெல்லாம் நீங்கள் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?”

(சிரிக்கிறார்) “இதை அறிக்கையாக என் மேலதிகாரியிடம் கொடுத்ததும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு எனக்குப் பரிசாகப் பணிமாறுதல் கிடைத்தது. ஒரே வருடத்தில் மூன்று இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டேன். நான் ஏன் இதையெல்லாம் பப்ளிசிட்டிக்காக செய்ய வேண்டும்? கல்லூரி காலத்தில் மாடலிங் செய்தேன். இப்போது ஐ.பி.எஸ் ஆக இருக்கிறேன். இவை இரண்டையும் தொடர்புப்படுத்திப் பேசுகிறார்கள். மாடலிங் செய்வது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அது ஒன்றும் தவறும் கிடையாது. ஆனால், அதை கொலைக் குற்றத்துக்குச் சமமாகப் பேசுகிறார்கள். என்னைக் குற்றம் சொல்பவர்கள் முதலில் அவர்களின் தகுதி குறித்தும், நேர்மை குறித்தும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.”
 
“உங்கள் மீது விமர்சனங்களை வைப்பவர்கள், நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாகவும் சொல்கிறார்களே?”

“ஒரு பொறுப்பான குடிமகளாக அரசியலைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். அரசியல் எனக்குப் பிடிக்கும். அவ்வளவுதான். இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.”

“லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் நீங்கள் சொன்னது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும்?”

“இந்தப் பிரச்னையை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. எனவே, இதுகுறித்து விரிவாகப் பேச முடியாது. ஆனால், சசிகலா தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு பிரச்னைதான்.  இதை, தமிழக போலீஸ்தான் கையாள வேண்டும். பார்ப்போம்.

- இ.லோகேஷ்வரி
படம்: ஜெ.வேங்கட்ராஜ்