
மிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா! - கூட்டணி குஸ்தி

“மெட்ரோ ரயிலில் வந்துகொண்டே இருக்கிறேன். உம் அலுவலக வாசல் வரை வந்து இறங்கப்போகிறேன். சூடாக ஒரு ஃபில்டர் காபி கலந்து வையும்” என்று கழுகாரிடமிருந்து வந்த ‘வாட்ஸ் அப்’ செய்தி சிணுங்கியது. காபியைக் கலக்கி முடிப்பதற்குள் சிறகுகள் சடசடக்க வந்தமர்ந்தார் கழுகார்.
‘‘ஓ... மெட்ரோ ரயிலில் ஒரு நாள் முழுக்க இலவசமாகப் பயணிக்கலாம் என்றதும் தொற்றிக்கொண்டு வந்துவிட்டீரோ!’’ என்று சிரித்துக்கொண்டே நாம் கேட்க, முறைப்பைப் பதிலாகத் தந்த கழுகார், ‘’சென்னையில் திட்டமிடப்பட்ட முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. திருப்பூரில் இருந்து மோடி அதைத் தொடங்கியும் வைத்துவிட்டார். சென்னை மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, கட்டணமில்லாப் பயணத்தை அறிவித்தனர். அதை இலவசம் என்று கிண்டலடிக்கிறீரே’’ என்று சொல்லிவிட்டு, விடுவிடுவெனச் செய்திக்குள் புகுந்தார்.
“மோடி தமிழகத்துக்கு வரும் முன்பே, கூட்டணி பற்றி முடிவு எடுத்திருக்க வேண்டும். அது முடியாததில், பி.ஜே.பி-க்காரர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். முக்கியக் காரணம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை!’’
“ஆளுங்கட்சி தலைமையால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லையா?’’
‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கோவை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம், தனிப்பட்ட முறையில் பேசுவதற்காக, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காத்திருந்தார் தம்பிதுரை. ஆனால், அவரைப் பார்க்காமலேயே பிரதமர் மோடி டெல்லிக்குப் பறந்துவிட்டார். இதில், தம்பிதுரை அப்செட் என்கிறார்கள்.”
“அதனால்தான் மறுநாள் நடந்த பட்ஜெட் உரையில், ‘மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் தோல்வியடைந்துவிட்டன’ என்று விளாசினாரா? கூட்டணி முடிவாகி விட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, ரூபாய் நோட்டின் நிறத்தை மாற்றியதைத் தவிர வேறு எதையும் பி.ஜே.பி அரசு செய்யவில்லை என்றெல்லாம் தம்பிதுரை பேசினால், தேர்தலை எப்படி இணைந்து எதிர்கொள்வார்களாம்?”
‘‘நல்ல கேள்விதான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படியே பி.ஜே.பி-க்கு எதிராக தம்பிதுரை பேசுவதாகப் பலரும் சொல்கிறார்கள். ஒருபக்கம் இப்படிப் பேசுபவர், அப்புறம் எதற்கு பிரதமரைப் பார்க்க மூன்று மணி நேரம் காத்திருந்தார் என்பது யாருக்குமே புரியவில்லை!

எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏன் பி.ஜே.பி எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறது?”
“பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கை ஓங்கும் என்றும் முதல்வர் நினைக்கலாம். கடைசி நேரத்தில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு, ஜெயலலிதா போன்று ஒரு தைரியமான தலைவராக உருவெடுக்கும் முயற்சியாகவும் இருக்கலாம். ஆனால், பி.ஜே.பி-யின் விருப்பத்துக்கு மாறாக அவரால் நடக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.’’
‘‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’
‘‘திருப்பூர் அரசு விழா முடிந்தபிறகு அரங்கேறிய காட்சிதான், எடப்பாடி பழனிசாமி தரப்பைப் பீதியடைய வைத்திருக்கிறது என்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துடன் பேசிக்கொண்டே, பிரதமருடன் பன்னீர்செல்வமும் சென்றுவிட்டார். ஆனால், எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் முதல்வர் பழனிசாமி சில நொடிகள் பரிதவித்து நின்றார். பிறகு, சபாநாயகர் தனபால்தான் வேறொரு வழியாக அவரை அழைத்துச் சென்றார். பிரதமரும் பன்னீர்செல்வமும் பத்து நிமிடங்கள் தனியே பேசியிருக்கிறார்கள்.’’
“என்ன பேசினார்கள் என்று ஏதாவது விஷயம் வெளியே வந்ததா?”
‘‘பேச்சின் சாராம்சம் பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன. பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்வது குறித்துக் குழப்பத்தில் இருந்த பன்னீர், தற்போது தெளிவாகிவிட்டாராம். ஆனால், அ.தி.மு.க-வில் இருக்கும் முக்கியமான சிலரும், அவருடன் சேர்ந்தவர்களும்தான் தடை போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்த விஷயம் குறித்துப் பற்ற வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கொடநாடு விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இதுபற்றியெல்லாம் மேற்கொண்டு பேசுவதற்காக மோடி நேரம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறுகிறார்கள். விரைவில் பன்னீர் தரப்பு டெல்லிக்குப் பறக்கக்கூடும்.’’
“இதனால் யாருக்கு என்ன லாபம்?”
“எத்தனையே விஷயங்கள் இருக்கிறதே சாதிக்க! ‘பன்னீர் மட்டுமல்லாமல், இன்னும் பலரும்கூட பி.ஜே.பி கூட்டணிக்கு ஆசைப்படவே செய்கிறார்கள். தமிழக அமைச்சரவையி இருக்கும் பெரும்பாலானவர்களின் போன் உரையாடல்கள் உள்ளிட்ட பல விஷயங்களும் மத்திய உளவுத்துறை மூலமாக டெல்லிக்குச் சென்றுகொண்டே இருக்கின்றன. வருமானவரித் துறையும் ஏகப்பட்ட ஆவணங்களைத் திரட்டிக் கொடுத்துள்ளது.
பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க ஆசைப்படாமல் இருக்க முடியுமா?’’
‘‘சரி, பா.ம.க இந்தக் கூட்டணிக்குள் வருமா, வராதா?’’
“நிதி நெருக்கடி காரணமாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். அப்பா தரப்புக்கு அ.தி.மு.க மீது ஆசை, வாரிசு தரப்புக்கு தி.மு.க-வுடன் கை குலுக்க விருப்பமாம். ஆனால், அ.தி.மு.க தரப்புதான் இவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளையும், இன்ன பிற தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரம், தி.மு.க-வின் முக்கிய வாரிசு தரப்பிலிருந்தும், கடந்த வாரம் அன்புமணி தரப்பினரைத் தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.’’
‘‘என்னவாம்?”
‘‘கூட்டணிக்கு வந்தால், ‘மூன்று தொகுதிகள் மட்டும் தர முடியும்; வேறு தேவைகளை நிறைவேற்றித் தர வாய்ப்பே இல்லை’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம். பிறகுதான், அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையை பா.ம.க வேகப்படுத்தியுள்ளது என்கிறார்கள்.’’
‘‘விடுதலைச் சிறுத்தைச் சீற ஆரம்பித்துவிட்டதே?’’
‘‘ஆம், திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் தொடர்வது சந்தேகம்தான். தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலரும், விடுதலைச் சிறுத்தைகள் இருப்பதால் நமக்கு பிற சமூக வாக்குகள் விழாமல் போகிறது என்று சமூக ரீதியான வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களுடன் ஸ்டாலினிடம் எடுத்து வைத்திருக்கிறார்களாம். நாடார், தேவர், கவுண்டர், வன்னியர் என நான்கு தரப்பு வாக்குவங்கிகள் சிதறிவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதனால், பா.ம.க-வை உள்ளே இழுத்துக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகளை வெளியே அனுப்பிவிடலாம் என்று வாதிட்டிருக்கிறார்கள்!’’
‘‘இது கூட்டணி தர்மம் இல்லையே...”
‘‘இதை அறிந்துதான், ‘பா.ம.க இடம் பெறும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம். நான் சிதம்பரத்தில் போட்டியிடுவேன்’ என்று திருமாவளவன் அதிரடியாகப் பேட்டி அளித்துத் தெறிக்கவிட்டிருக் கிறார். மேலும், ‘இத்தனை நாள்கள் எங்களைக் கூட்டணியில் வைத்திருந்துவிட்டு, தி.மு.க-வைத் தினந்தோறும் திட்டிக்கொண்டிருந்த பா.ம.க-வுக்காக எங்கள் கட்சியைக் கடைசி நேரத்தில் காவு கொடுக்கப் பார்க்கிறார்களா?’ என்று திருமா ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிவிட்டாராம். இந்தக் குழப்பங்கள் எல்லாம் நடக்கும்போதே திருமா தரப்பை டி.டி.வி. தினகரன் தரப்பு அணுகி, பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் சமீபத்தில் பதவி மாற்றப்பட்ட கதர் சட்டைப் பிரமுகர் ஒருவரையும் சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து, தி.மு.க தலைமை கொஞ்சம் கலங்கிப்போய்தான் இருக்கிறதாம்.”
‘‘தி.மு.க-வுடன் த.மா.க-வும் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் செய்தி கசிகிறதே?’’
‘‘தி.மு.க-வில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் காகக் குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழு எதுவும் பேசவில்லை. ஒருபுறம் சபரீசன் ஆட்களும், மறுபுறம் உதயநிதி தரப்பினரும் சில கட்சிகளின் நிர்வாகிகளை, நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருக் கிறார்கள். இரு குழுக்கள் பேசி முடித்த பின்பே, அதிகாரப்பூர்வக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குமாம். இப்படித்தான், த.மா.கா-வுடனும் வாரிசு அணி பேசியுள்ளது.’’
‘‘த.மா.கா தரப்பு ரியாக்ஷன் என்னவோ?’’
‘‘வாரிசு தரப்புடன் நாம் பேச வேண்டாம் என்று சொன்ன ஜி.கே.வாசன், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் மூலம் பேசினாராம். தி.மு.க தரப்பில் அவரிடம் பேசியவர்கள், ‘உங்கள் கட்சிக்கு தமிழகத்தில் என்ன கட்டமைப்பு உள்ளது? கூட்டணிக்கு வந்தால், ஒரு சீட் தரலாம்’ என்று ஆரம்பித்தார்களாம். உடனே இடைமறித்த யுவராஜ் தரப்பு, ‘உங்கள் கூட்டணியில் இப்போது உள்ள கட்சிகளுக்கு எல்லாம் என்ன கட்டமைப்பு இருக்கிறதோ அதே கட்டமைப்பு எங்களுக்கும் உள்ளது” என்று கடுப்படித்த யுவராஜ், ஒருகட்டத்தில் எழுந்து வந்துவிட்டாராம்.”
‘அப்புறம்...”
‘‘இந்தத் தகவல் ஜி.கே. வாசனுக்கு தெரிந்ததும், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் அ.தி.மு.க-வுடன் பேசியுள்ளார். அங்கே பச்சை சிக்னல் காட்டியிருக்கிறார்களாம். ஆக, அ.தி.மு.க கூட்டணிக்குச் செல்லவே வாய்ப்புகள் அதிகம்!’’ என்ற கழுகார், சிறகு விரித்துப் பறந்தார்.
படங்கள்: எம்.விஜயகுமார், தி.குமரகுருபரன்

மணமக்களுக்கு டெல்லி அழைப்பு!
ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும் பிரபலத் தொழில் அதிபர் வணங்காமுடி மகன் விசாகனுக்கும் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ‘அரசியல் வேறு நட்பு வேறு’ என்பதை இந்தத் திருமணம் மூலம் ரஜினி நிரூபித்துவிட்டார் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் என்று அனைத்து கட்சியினரும் ஆஜர். ‘‘பிரதமர் மோடியைப் பெரிதாக எதிர்பார்த்தார்கள். ஆனால், தேவையில்லாத சர்ச்சை வந்துவிடும் என்று கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார் மோடி. என்றாலும், மணமக்களுக்குத் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னவர், டெல்லி இல்லத்துக்கு விருந்துக்கும் அழைத்துள்ளார்’’ என்கிறார்கள்.