Published:Updated:

`கூட்டணி வைத்தால் 21 தொகுதிகளுக்கும் ஆபத்து!’ - எடப்பாடிக்குச் சொல்லப்பட்ட 10 விஷயங்கள்

தேர்தலில் கூட்டணி வைத்தால் `லேடியா... மோடியா?’ என்ற போட்டியில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த 6 சதவிகித கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும். 

`கூட்டணி வைத்தால் 21 தொகுதிகளுக்கும் ஆபத்து!’ - எடப்பாடிக்குச் சொல்லப்பட்ட 10 விஷயங்கள்
`கூட்டணி வைத்தால் 21 தொகுதிகளுக்கும் ஆபத்து!’ - எடப்பாடிக்குச் சொல்லப்பட்ட 10 விஷயங்கள்

பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வரிந்துகட்டுவதைக் கண்டு அதிர்ந்துபோய் இருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை. `கூட்டணியை அமைக்காமல் இருப்பதில் என்னென்ன லாபம் என்பது குறித்து முதல்வருக்கு விரிவான அறிக்கை அளித்துள்ளனர் அவரது நல விரும்பிகள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் துக்ளக் வார இதழின் 49-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ``பா.ஜ.க அறிமுகப்படுத்தும் அனைத்துமே தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் பா.ஜ.க உள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாகக் காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி அமைப்பது அவசியம்’’ எனக் கூறியிருந்தார்.

ஆடிட்டரின் இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ``பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான் இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க கொள்கை உள்ள கட்சி. பா.ஜ.க-வைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது’’ என விமர்சித்திருந்தார். இதே கருத்தை வலியுறுத்திய அமைச்சர் ஜெயக்குமார், ``கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பினாலும், இணைத்துக்கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும். அதுதான் முக்கியம். ஒருமித்த கருத்து அவசியம்’’ எனக் கூறியிருந்தார்.

தம்பிதுரை வழியில் அமைச்சர்களும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசி வருவதை, தமிழக பா.ஜ.க நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதே முரண்பாடு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் எதிரொலித்தது. எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி இந்த விழாவை பா.ஜ.க நடத்தவில்லை. மோடியும் கடுகடுவென முகத்தை வைத்தபடியே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். `பா.ஜ.க கூட்டணி தேவையா, இல்லையா...’ என்பதில் அ.தி.மு.க-வுக்குள் இருவேறு கருத்துகள் வலம் வருகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி தனிப்பெரும் தலைவராக உயர்ந்துவிட வேண்டும் எனக் கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. `ஜெயலலிதா பாணியில் பா.ஜ.க-வை நிராகரித்தால் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வாக்குவங்கியை நிரூபிக்க முடியும்’ என்பதுதான் அவரது எண்ண ஓட்டமாக இருக்கிறது. 

அதற்கேற்ப, ஏன் வேண்டாம் பா.ஜ.க கூட்டணி என்பதை விவரித்து எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு 10 விஷயங்களைக் கொண்டு சென்றுள்ளனர் அவரது ஆலோசகர்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் பின்வருமாறு: 

1. பா.ஜ.க-வைக் கூட்டணி வைக்காமல் கையாள்வதே சரியான வியூகமாக இருக்க முடியும். அவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், தேர்தலில் கூட்டணி வைத்தால் `லேடியா... மோடியா?’ என்ற போட்டியில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த 6 சதவிகித கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும். 

2. அப்படியே கூட்டணி வைத்தால், ஆட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலையும் இது பாதிக்கும். 

3. கூட்டணிக்குள் மோடி தலைமையை ஏற்பதால் உங்களுடைய லீடர்ஷிப் தன்மையை அது பாதிக்கும். 

4. எதிர்காலத்தில் மோடி தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க வளரும். இது உங்களுடைய தலைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். 

5. பா.ஜ.க-வைக் கூட்டணி இல்லாமல் எதிர்கொண்டால், சந்திரசேகர ராவைப்போல கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளையும் இந்துத்துவ வாக்குகளையும் பெற முடியும். காங்கிரஸ் அணியைத் தோற்கடிக்க நினைக்கும் இந்துக்களின் வாக்குகள், கூட்டணி இல்லாமலேயே அ.தி.மு.க-வுக்கு வந்து சேரும். 

6. பா.ஜ.க-வுடன் கூட்டணி எனப் பேசப்படுவதற்கே அ.தி.மு.க எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்கள் தலைமையில் வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்கும் வரையில் கட்சியை ஒற்றுமையாகக் கொண்டு செல்வதே நல்லது. 

7. வாஜ்பாய் தலைமையில் கூட்டணி வைத்தபோது, சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் விழுந்தன. காரணம், மதச்சார்பற்ற தன்மை என்ற அடிப்படையில் அவை கிடைத்தன. இப்போது ஆட்சியில் இருக்கும் மோடி தலைமைக்கு இந்த இமேஜ் இல்லை. சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் எதிராகத்தான் போகும். 

8. மாநில உரிமை, தமிழர் நலனுக்கு எதிரான நிலையில் பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் இருக்கின்றன. இருகட்சிக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே சரியானது. 

9. அனைத்தையும்விட மிக முக்கியமானது, உங்களை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக டெல்லி பா.ஜ.க நடத்தவில்லை. 

10. 2004 தேர்தலில் ஏற்பட்ட விளைவை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற அனைத்துக் கட்சிகளையும்விட மோடி எதிர்ப்பாளராக மாறி, பின்னர் தேவைக்கு ஏற்ப உங்கள் பலத்தின்படி மத்தியில் ஆளப்போகின்ற கட்சியை ஆதரிக்கலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.