Published:Updated:

போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில், போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 200-க்கும் மேற்ப்பட்ட அமைப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் என நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்டோர் கைது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய இந்தத் தீவிரமான போராட்டத்தால் அரசுப் பணிகள் முற்றுலும் முடங்கிப் போனது. அதேபோன்று ஆசியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதித்த நிலையில், ஆசிரியர்கள் மட்டுமாவது பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனாலும் செவி மடுக்காத ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் ஒரு முடிவுக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை நேற்றுகாலை ( 30.1.2019) 9 மணிக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கிடையாது என்றும் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர். 96 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அரசின் தொடர் அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த அமைப்புக்குப் பலவகையிலும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் போராட்டத்தைக் கைவிடுவதா? தொடர்வதா? என்ற நிலையில் தற்போது உயர்மட்ட குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

இது குறித்து அமைப்பைச் சேர்ந்த மாயவன் பேசுகையில், ``ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர் மட்டக் குழுக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் 150 -க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதுவரை நடந்த போராட்டம் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி முதலமைச்சர், நாளைக்குள் பணிக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.