Published:Updated:

`வாக்குச்சாவடி அளவுக்குப் பலம் பொருந்தியவர்களாக நாங்கள் மாறி வருகிறோம்!’ - தமிழிசை

`வாக்குச்சாவடி அளவுக்குப் பலம் பொருந்தியவர்களாக நாங்கள் மாறி வருகிறோம்!’ - தமிழிசை
`வாக்குச்சாவடி அளவுக்குப் பலம் பொருந்தியவர்களாக நாங்கள் மாறி வருகிறோம்!’ - தமிழிசை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிப்ரவரி10-ம் தேதி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்தநிலையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள திடலில் இன்று கால்கோள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மோடியின் ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி. வாக்குச்சாவடி அளவுக்குப் பலம் பொருந்தியவர்களாக நாங்கள் மாறி வருகிறோம். அதனால்தான் `மீண்டும் மோடி வேண்டும் மோடி’ என்ற கருத்தை வலியுறுத்துகிறோம். நான்கரை ஆண்டுகளில் மோடியின் சாதனை அளப்பரியது. காங்கிரஸ் கட்சி மக்களிடத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா என யார் வந்தாலும் பிரதமர் மோடியை அசைத்துவிட முடியாது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அமைச்சரவையில் ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கத் தொடங்கும். எதிர்க்கட்சிகள் மாற்று சக்திகளைப் போராடத் தூண்டக்கூடாது. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தைக் கைவிட்டு, ஆசிரியர்கள் பணிக்குத் திரும்புவதே நல்லது. தி.மு.க-வின் ஸ்டாலின் நிலை தடுமாறிப் பேசி வருகிறார். ஆறுமுகசாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்கச் சொல்கிறார். எதைப் பேசுகிறோம் என்று அவருக்கே தெரியவில்லை’’ என்றார்.