Published:Updated:

‘என்ன ஓர் அபூர்வமான கண்டுபிடிப்பு!’ - அமித் ஷாவை கலாய்த்த ஸ்டாலின்

‘என்ன ஓர் அபூர்வமான கண்டுபிடிப்பு!’ - அமித் ஷாவை கலாய்த்த ஸ்டாலின்
‘என்ன ஓர் அபூர்வமான கண்டுபிடிப்பு!’ - அமித் ஷாவை கலாய்த்த ஸ்டாலின்

அறிவாலயத்திற்கு அடுத்து, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை, அவரது குருகுலமான ஈரோட்டில், ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞருக்கும் ஈரோட்டிற்கும் உள்ள தொடர்பு, கலைஞர் சிலையைத் திறந்துவைத்த தருணம் என நெகிழ்ச்சியாக ஆரம்பித்த ஸ்டாலின் பேச்சு, மத்திய மாநில அரசுகளைப் பற்றிப் பேசும்போது அனலாகக் கொதித்தது.   

கலைஞர் சிலையை திறந்துவைத்துப் பேசிய ஸ்டாலின், “சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு சிலை அமைத்த பின், அடுத்தபடியாக பெரியார் பிறந்த, கருணாநிதி சமூகப் போராளியாக உருவான, அவரது குருகுலமான ஈரோட்டில்தான் சிலை அமைக்கப்பட வேண்டுமென முடிவுசெய்தோம். அடுத்ததாக, அண்ணா பிறந்த காஞ்சி, கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திருச்சி, மற்றும் சேலம், பாளையங்கோட்டை, திருவாரூர் ஆகிய இடங்கள் எனத் தமிழகம் முழுவதும் கலைஞருக்கு சிலை அமைக்க இருக்கிறோம். இதற்கிடையே நான் இன்னொரு போர்க்களத்தை சந்திக்கவேண்டியிருக்கிறது.

பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இருக்கிறார்கள். அதோடு, 21 தொகுதிகளுக்குமான மினி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கலைஞர் சிலையைப் பார்த்துச் சொல்கிறேன், நிச்சயமாக வரவிருக்கின்ற தேர்தல்களில் தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறது. தேர்தல் நெருங்குவதால் மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றித் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. அப்படியான நாடகங்களில் ஒன்றுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்ச்சியும்” என எடுத்த எடுப்பிலேயே சூடானார்.

தொடர்ந்தவர், “நாடு முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், அவற்றில் பலவற்றிற்கு நிதியே ஒதுக்கீடு செய்யவில்லை. ஒரு திட்டத்தை அறிவித்து, அடிக்கல் நாட்டினால் மட்டும் அந்தத் திட்டம் நிறைவேறிவிடுமா. எனவே, மத்திய நிதிநிலை அறிக்கையில் மதுரையில் அமைக்கப்பட இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மோடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. அறிவித்த உடன் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் தெரிவித்திருக்கிறார். அக்கறையும் ஆர்வமும் இருந்தால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியும்.

பெட்ரோல் - டீசல் - சிலிண்டர் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரி, கஜா புயலுக்கு நிதி வழங்காதது என மோடியின் ஆட்சியில் எந்தச் சாதனையும் இல்லை. வேதனைகள் மட்டுமே உள்ளன. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ‘எதிர்க்கட்சி அணி வெற்றிபெற்றால், திங்களன்று மாயாவதி, செவ்வாய் அகிலேஷ்யாதவ், புதன் மம்தா, வியாழன் சரத்பவார், வெள்ளி தேவகவுடா, சனிக்கிழமை ஸ்டாலின் என ஒவ்வொரு நாளும் ஒருவர் பிரதமராக இருப்பார்’ என்று தெரிவித்துள்ளார். ‘நான் சனிக்கிழமை பிரதமராம்!’. இதை நான் சொல்லலை, அமித்ஷா சொல்கிறார். அவரது இந்த அபூர்வமான கண்டுபிடிப்பு மூலம், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சிதான் மத்தியில் அமையும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். எங்கள் கூட்டணியில் நாங்களாவது ஒவ்வொரு நாளைக்குப் பிரதமராக இருப்போம். ஆனா, உங்க பிரதமர் மோடி தான் இந்தியாவுலயே இருக்கிறதில்லையே” என பா.ஜ.க-வை வெளுத்துவாங்கினார்.

அ.தி.மு.க-வை நோக்கி அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தவர், “உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒன்றை நடத்திப் பல லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததாகச் சொல்கின்றனர். ஆனால், அவற்றைப் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார்கள். தொழிலதிபர்களிடம் 25 முதல் 50 சதவிகிதம் வரை கமிஷன் கேட்டால், யார்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவார்கள். மத்தியில் கார்ப்பரேட் ஆட்சியும், மாநிலத்தில் பினாமிகள் ஆட்சியும்தான் நடந்துவருகின்றன. இந்த ஆட்சி கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல, ஐந்து கொலை பழனிசாமி தலைமையில் நடக்கும் கொலைகார ஆட்சியாகும். இந்த இரு ஆட்சியையும் வீழ்த்த ஜனநாயகக் களத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்.

கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துறைசார்ந்த முக்கியப் பிரமுகர்களைக்கொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினோம். ஆனால், தமிழக முதல்வராக இருந்தபோது மறைந்த ஜெயலலிதாவிற்கு இதுவரை ஒரு இரங்கல் கூட்டம், ஒரு புகழஞ்சலியைக்கூட அ.தி.மு.க  -வினர் நடத்தவில்லை. ஜெயலலிதாவின் மரணமே மர்மமாக உள்ளது. ஜெயலலிதாவுக்கும், தலைவர் கலைஞருக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மர்மமான முறையில் இறந்தவர் முதல்வர் என்பதால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த அடுத்த விநாடியே, அவரது மரணம்குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது உறுதி, சத்தியம். கொடநாட்டில் நடந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கொலைக் குற்றவாளியாக சிறைக்குச் செல்லப்போகிறார்” என அதிரடித்தார்.