Published:Updated:

``ஊடகவியலாளர் முத்துக்குமாரின் தியாகம், தமிழக அரசியலை உலுக்கியது..!"- திருமுருகன் காந்தி

2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் தமிழீழத் தலைநகர் கிளிநொச்சி வீழ்த்தப்பட்டது. வாரக்கணக்கில் நடந்த அந்தப் போரில் நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 15,000 கையெறி குண்டுகள் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டதென்றால், எத்தனை தமிழர்களின் ரத்தத்தை அது குடித்திருக்கும். தண்ணீர் , உணவு , மருத்துவசதி இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது முல்லைத்தீவு. ஆங்கில பத்திரிகைகள் யாவும் இலங்கை அரசு போர் நடத்துவதை நியாயப்படுத்தின.

``ஊடகவியலாளர் முத்துக்குமாரின் தியாகம், தமிழக அரசியலை உலுக்கியது..!"- திருமுருகன் காந்தி
``ஊடகவியலாளர் முத்துக்குமாரின் தியாகம், தமிழக அரசியலை உலுக்கியது..!"- திருமுருகன் காந்தி

ரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைக்காக, தன்னுடைய இன்னுயிரை நீத்தார் `பெண்ணே நீ' இதழின் ஊடகவியலாளர் கு.முத்துக்குமார். அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தை இப்போது நாம் படித்தாலும் கண்களில் நீர் அரும்பும். அவரின் மரணம் தமிழகத்தை ஈழத்துக்கான போராட்டத்தை நோக்கி நகர்த்தியது. அவரின் தியாகத்திற்கும், இந்தி மொழிக்கு எதிராக தமிழைக் காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் முத்துக்குமாரின் நினைவு தினத்தன்று மே 17 இயக்கம் சார்பில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. `தனித் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனடியாக நடத்திடு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நடத்திடு' ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, பிரவீன்குமார், லெனா குமார், கொண்டல் ஆகியோர் உரையாற்றினார்கள்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், ``தமிழ் மொழியைக் காக்க உயிர்நீத்த மொழிப்போர் ஈகியருக்கும், தமிழீழ விடுதலைக்காக உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரன் முத்துக்குமாருக்கும் வீரவணக்கம் செலுத்த நாம் இங்கே கூடியிருக்கிறோம். முத்துக்குமாரின் மரணம், தமிழக அரசியலின் திசையைக் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முத்துக்குமாரின் கடிதம், தமிழக இளைஞர்களை இயக்க அரசியல் நோக்கிப் பயணிக்க வைத்தது. 2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் உச்சகட்டப் போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது, அங்குள்ள தமிழினத்தைக் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்தது இலங்கை அரசாங்கம். போர் நிறுத்தம் செய்ய தமிழ்நாடு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஏனெனில், தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பதவியில் இருந்தது.  ஆதரவை தி.மு.க. திரும்பப் பெற்றிருந்தால் அன்றைய போரில் இலங்கை அரசுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் ஆட்சியும் கலைந்திருக்கும், போர் நிறுத்தம் பெற்றிருக்கும். ஆனால், திரும்பப்பெறுவோம் என்ற வாக்குறுதியை மட்டும் அவ்வப்போது அளித்தார்களே தவிர, அவர்கள் அதைச் செய்யவில்லை.

2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் தமிழீழத் தலைநகர் கிளிநொச்சி வீழ்த்தப்பட்டது. வாரக்கணக்கில் நடந்த அந்தப் போரில் நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 15,000 கையெறி குண்டுகள் இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்டதென்றால், எத்தனை தமிழர்களின் ரத்தத்தை அது குடித்திருக்கும். தண்ணீர், உணவு, மருத்துவ வசதி இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது முல்லைத்தீவு. ஆங்கிலப் பத்திரிகைகள் யாவும் இலங்கை அரசு போர் நடத்துவதை நியாயப்படுத்தின. போரில் ஈழ மக்கள் சந்திக்கும் இன்னல்கள், வேதனைகள் குறித்தான எந்த விவரமும் இங்குள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தப்படாமலிருக்க சதி நடந்துகொண்டிருந்தது. தமிழை, தமிழ் மக்களைக் காப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், கள்ள மௌனம் சாதித்த நேரம். அத்தகைய கையறு நிலையில்தான் முத்துக்குமாரின் வீரமரணம் நிகழ்ந்தது. முத்துக்குமாரின் மரண சாசனம், தேர்தலில் அரசியலின் நாடகங்களையும், இந்தியா தமிழீழத்துக்கு இழைத்த துரோகத்தையும், சர்வதேச நாடுகளின் கூட்டுச்சதியையும், தமிழகத்தின் கையறு நிலையையும் அம்பலப்படுத்தியது. அதைத்தாண்டி அந்த அறைகூவல்தான் மாணவர்களையும், இளைஞர்களையும் அரசியல் நோக்கி அழைத்தது. அந்த முழக்கம்தான் முன்னிலையில் இருக்கும் இரு தேர்தல் அரசியல் கட்சிகள் மட்டுமே அரசியல் இல்லை என்று மக்களுக்குப் புரியவைத்தது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இயக்கங்களாய் நின்று மாணவர்கள், இளைஞர்கள் போராட்டக்களத்திற்கு வந்தார்கள். 

முத்துக்குமாரின் ஈகமும், மொழிப்போர் தியாகிகளின் ஈகமும் ஒன்றிணைத்துப் பார்க்கவேண்டியது. மொழிக்காக உலகிலேயே வேறெந்த இன மக்களும் தங்கள் உயிரை மாய்த்திருக்க வாய்ப்பில்லை.1937-ல் இந்தி மொழிக்கெதிராக தமிழைக் காக்க ஆரம்பித்த மொழிப்போர், 1965-ல் தீவிரமடைந்தது. இந்தியைத் திணிக்கத் துடித்த இந்திய அரசுக்கு எதிராக, அன்று மொழிப்போர் ஈகியர் செய்த தியாகம்தான், தமிழக அரசியலை மாற்றி எழுதியது. அதன்பின் முத்துக்குமாரின் ஈகம்தான், அத்தகைய எழுச்சியைத் தமிழர்களிடையே புகுத்தியது. காங்கிரஸ் அரசின் பத்தாண்டு கால வெறுப்பு அரசியலைத் தாங்காமல் பி.ஜே.பி-யை மக்கள் ஆட்சியில் அமர்த்தினர். அதன் விளைவை நாம் இப்போது காண்கிறோம். காங்கிரஸ் தமிழீழத்தை அழித்தது; பி.ஜே.பி. தமிழகத்தையே அழித்துவிடும். அதனால், இப்போது பி.ஜே.பி-க்கு மாற்று காங்கிரஸ் என்று மக்கள் நினைத்தால் வரலாற்றுப் பிழையை நாம் மீண்டும் செய்தவர்களாகி விடுவோம். ஆகவே, முத்துக்குமார் கற்றுக்கொடுத்த அரசியலைக் கொண்டு நாம் தமிழீழத்தையும், தமிழர்களை அழிக்கும் கட்சிகளுக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் கட்சிகளுக்கும் சரியான பாடம் கற்பிக்கவேண்டும்" என்றார்.