Published:Updated:

தொலைந்துபோன பணமும் குலைந்துபோன மனமும்! - கண்ணீர் விட முடியாமல் தவிக்கும் ஒரு தலைவரின் கதை

தொலைந்துபோன பணமும் குலைந்துபோன மனமும்! - கண்ணீர் விட முடியாமல் தவிக்கும் ஒரு தலைவரின் கதை
தொலைந்துபோன பணமும் குலைந்துபோன மனமும்! - கண்ணீர் விட முடியாமல் தவிக்கும் ஒரு தலைவரின் கதை

கோடிப் பேர் தன்னை ‘டிவி’யில் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தும், பொதுவெளியில் தியானம் செய்து, தமிழகத்தையே அசரடித்த அசாத்தியத் திறன் படைத்த தர்மயுத்தத் தலைவர் அவர். ஆனால், ‘சிசிடிவி’ கண்காணிப்பு இருந்தும், தனது வீட்டுக்குள் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் நொந்துபோயிருக்கிறார். 

சிறிய பொறுப்பிலிருந்து பெரிய நாற்காலியில் அமரும் அரிய வாய்ப்பைப் பெற்ற அவருக்கு, இப்போது எல்லாமே ‘அது ஒரு அழகிய நிலாக்காலம், கனவினில் தினம் தினம் உலாப்போகும்’ என்பதைப் போலாகிவிட்டது. கடந்த சில மாதங்களாக, கடும் மன உளைச்சலில் தவிக்கும் அவருக்கு நிகழ்காலத்தின் இயலாமையும் எதிர்காலம் பற்றிய அச்சமும் வாட்டி வதைக்கிறது. இப்போது தனது அறைக்குள்ளேயே நடந்த திருட்டு, இந்த பயத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.

இதுபற்றி அவருக்கு நெருக்கமான சிலர் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். ‘‘ஏற்கெனவே, ‘பசையுள்ள துறைகளை ஏன் கேட்டுப் பெறவில்லை?’ என்று அவருடைய மகன்கள், தினமும் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். அப்போதெல்லாம் எந்தப் பதிலும் சொல்லாமல், அமைதியாகக் கடந்துபோய்விடுகிறார் அவர். மகன்களுக்கு மாதந்தோறும் அவர் பெரிய தொகையைக் கொடுக்கிறார். அவர்களும் இவரது பெயரை வைத்து, பல்வேறு விவகாரங்களில் சம்பாதிக்கிறார்கள். ஆனாலும், போதுமென்ற மனம் அவர்களுக்கு வரவில்லை. எப்போது பார்த்தாலும், அவரிடம் எதற்காவது பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள்.

எவ்வளவு காலம் இந்தப் பதவியும் இருக்குமென்று தெரியாத நிலையில், இதுவரை தன் மகளுக்குப் பெரிதாகச் செய்யவில்லை என்ற கவலையும் அவருக்கு நிறைய இருக்கிறது. அவருக்காகவே, சில கோடிகளை, அவர் தனது அறையில் தனியாகச் சேமித்து வைத்திருக்கிறார். அந்தப் பணம்தான் இப்போது மாயமாகிவிட்டது. வீட்டிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தும், திருடன் சிக்கவில்லை. தன் அறையில் நுழைந்து பணத்தை எடுக்கும் துணிச்சல், வேறு யாருக்கும் வராது என்று திடமாக நம்புகிறார் அவர்.
தனது குடும்பத்திலுள்ள யாரோ ஒருவரே, அந்தப் பணத்தை எடுத்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார். பணம் களவு போனது பற்றி போலீஸில் சொன்னால், பல சிக்கல்கள் வரும். எப்படியும் எதிரணிக்குத் தகவல் போகும். அந்தப் பணத்துக்கான ‘சோர்ஸ்’ என்ன என்றும் தோண்ட ஆரம்பிப்பார்கள். அதனால், யாரிடமும் புகார் சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருக்கிறார். இப்போது, அவரின் மகளும் தன் கணவர் செய்யும் தொழில் அபிவிருத்திக்காகப் பணம் கேட்டு, அன்புத்தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

அதனால், என்ன செய்வதென்று தெரியாமல், தன் நண்பர்களிடம் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரே நாளில், மாபெரும் தலைவனாக உருவெடுத்த அவர், தன் குடும்பத்துக்காகத்தான், தன் கெளரவத்தை விட்டுக்கொடுத்து, இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் கடும் நெருக்கடி தரப்படுகிறது. இப்போது குடும்பத்துக்குள்ளும் பலவிதமான பிரச்னைகள் விஸ்வரூபமெடுப்பதில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உருக்குலைந்து கொண்டிருக்கிறார். இதை அவர்கள் குடும்பத்தினராவது உணர்ந்து கொள்ளாமலிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்’’ என்றனர்.

திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான் இது என்றாலும், வலி வலிதானே!