Published:Updated:

`இரண்டே வாரம்தான் அவகாசம்!' - ஆளுநர் பிரம்மாஸ்திரத்தால் பதறும் எடப்பாடி பழனிசாமி

`ஓரளவுக்குத்தான் அவர்களை எதிர்க்க முடியும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஆட்சியை நடத்த வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வோடு தி.மு.க சேர்ந்து கொண்டு ஆட்சியைக் கவிழ்த்துவிடக் கூடாது' என அச்சப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி.

`இரண்டே வாரம்தான் அவகாசம்!' - ஆளுநர் பிரம்மாஸ்திரத்தால் பதறும் எடப்பாடி பழனிசாமி
`இரண்டே வாரம்தான் அவகாசம்!' - ஆளுநர் பிரம்மாஸ்திரத்தால் பதறும் எடப்பாடி பழனிசாமி

`அ.தி.மு.க-வோடு கூட்டணி அமையும்' எனத் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். `நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பா.ஜ.க-வின் தயவு தேவைப்படலாம் என்பதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ச்சியான வழக்குகளால் ஆட்சிக்கான ஆபத்தும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க, வி.சி.க, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த அணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. தம்பிதுரையின் தொடர்ச்சியான விமர்சனங்களால் பா.ஜ.க தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். தமிழிசை, பொன்னார் ஆகியோர் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததும் கூட்டணி விஷயங்களை உறுதிப்படுத்துவது போல் அமைந்தன. ஆனால், இதுதொடர்பாக ஆளும்கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை. `பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்' எனக் கூறிவிட்டார் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை. இதன் தொடர்ச்சியாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, ஆளும்தரப்பிடம் உற்சாகமான மனநிலையைக் காட்டவில்லை. 

`கூட்டணி அமையுமா?' என்ற கேள்வியை தமிழக பா.ஜ.கவின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடி சொல்வதைத்தான் தமிழக ஆட்சியாளர்கள் கேட்டு வருகின்றனர். சசிகலாவுக்கு எதிராகப் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது, தலைமைக் கழகத்திலிருந்து சசிகலா படத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கியது, மீண்டும் பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இணைத்தது, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்தது என இவை அனைத்துக்கும் பா.ஜ.க-தான் பின்புலமாக இருந்தது. டெல்லி சொன்னதன் அடிப்படையில் 8 வழிச் சாலை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் எனப் பல விஷயங்களை முன்னெடுத்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு மோடியைத்தான் இவர்கள் பிக்பாஸாகப் பார்க்கின்றனர். எனவே, கூட்டணிக்கு மறுப்பு சொல்வதற்கான வாய்ப்புகளே இல்லை" என விவரித்தவர், 

``இதில், நுட்பமான சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. கொடநாடு எஸ்டேட் கொலைகள் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்த மனுவை சி.பி.ஐ-க்கு ஆளுநர் அனுப்பிவிட்டாலே, இந்த அரசுக்கு நெருக்கடிகள் வரத் தொடங்கிவிடும். இந்த வழக்கிலிருந்து ஆளும்கட்சியால் தப்பிக்க முடியாது. தவிர, இந்த அரசை பயமுறுத்தக் கூடிய வழக்குகளின் பட்டியல் மிக நீளம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பெங்களூருவில் எடப்பாடி பழனிசாமி மகன் சிக்கினார். பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், ராமமோகன ராவ், சேகர் ரெட்டி, தங்கமணி ஆகியோர் மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளில் பலவற்றை சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் ஏஜென்சிகள் விசாரித்து வருகின்றன. இந்த வழக்குகளின் மீது தேர்தல் காலத்திலும் நடவடிக்கை எடுக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. இந்த வழக்குகளுக்கு எதிராக அ.தி.மு.க அரசால் எதையும் செய்ய முடியாது. கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்துத்தான் ஆக வேண்டும். அதேநேரம், ரஜினிக்காக டெல்லித் தலைமை காத்திருப்பது உண்மைதான். ஆனால், அமித் ஷா முயற்சிக்கு ரஜினி சிக்னல் கொடுப்பாரா என்பதும் சந்தேகம்தான். 

இரட்டை இலைக்கான அடிப்படை வாக்குகளை மையமாக வைத்து, பிரமாண்டமான அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையில் பா.ஜ.க வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதுவும் 40 முதல் 50 இடங்களில் பெரும்பான்மைக்கான வாய்ப்பு குறையலாம். `இந்தத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும்' என அரசியல் நோக்கர்கள் பேசி வருகின்றனர். இதை உணர்ந்து பல மாநிலங்களில் வலிமையான கூட்டணியை உருவாக்கும் பணிகளில் தேசியத் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகும் பா.ஜ.க-வின் தயவு அ.தி.மு.க-வுக்குத் தேவை. இதை அ.தி.மு.க தலைமையும் உணர்ந்திருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கூட்டணி விஷயங்கள் முடிவுக்கு வந்துவிடும்" என்றார் விரிவாக. 

`பா.ஜ.க நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு சரிதானா?' என்ற கேள்வியை அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``கூட்டணி அமைய வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, `இந்த விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். தேர்தல் நேரத்தில் முடிவு எடுத்துக்கொள்ளலாம்' எனத் தயக்கம் காட்டி வருகிறார். கூட்டணிக்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் அளவுக்கு இருக்கின்றன. வழக்குகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இப்போதும் டெல்லி எங்களை விட்டுவைக்கவில்லை. வழக்குக்கு மேல் வழக்கு போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர்களால் கூட்டணியையே இறுதி செய்ய முடியவில்லை. பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அதிக எண்ணிக்கையிலான இடங்களை பா.ஜ.க வெல்லலாம். 

`பா.ஜ.க-வோடு சேராமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்' எனக் கழக நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜ.க வந்துவிட்டால், அ.தி.மு.க ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டுவிடும். பா.ஜ.க-வின் நேரடி எதிரியாக மாறுவதற்கு எடப்பாடி விரும்பவில்லை. `ஓரளவுக்குத்தான் அவர்களை எங்களால் எதிர்க்க முடியும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஆட்சியை நடத்த வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வோடு தி.மு.க சேர்ந்து கொண்டு ஆட்சியைக் கவிழ்த்துவிடக் கூடாது. சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதுதான் எடப்பாடியின் மனநிலையாக இருக்கிறது. தற்போது பொதுமக்களிடம் நிலவும் அதிருப்தியை சரிக்கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் ஆட்சியைக் காப்பாற்றுவதுதான் முக்கியமானதாக இருக்கிறது" என்றார் எதார்த்தத்தை பிரதிபலித்தபடி.