Published:Updated:

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?
பிரீமியம் ஸ்டோரி
அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

படங்கள்: அ.குரூஸ்தனம்

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

படங்கள்: அ.குரூஸ்தனம்

Published:Updated:
அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?
பிரீமியம் ஸ்டோரி
அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

`ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்ற அறிஞர் அண்ணாவின் கேள்விக்கு, ஆயுசு அறுபது. ஆனால், இன்னமும் ஆட்டுத்தாடிகளுடன் மல்லுக்கட்டி வருகிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள். புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை வாசலுக்கு முன்பு தர்ணா செய்துகொண்டிருக்கிறார் மாநில முதல்வர் நாராயணசாமி. அங்கேயே சாப்பிட்டு, இரவில் அங்கேயே படுத்து நாராயணசாமி தன் போராட்டத்தைத் தொடர்கிறார்.  டெல்லியில், அதிகாரிகளை நியமிக்கக்கூட வழியில்லாமல் அல்லாடிவருகிறார் அர்விந்த் கெஜ்ரிவால். தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர் என்பதால் நாராயணசாமியைச் சந்தித்து ஆதரவும் தெரிவித்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். 

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

‘தேசங்களின் தேசம்’ எனப்படும் இந்தியாவை அடக்கி ஆள்வதற்கு, ஆளுநர்கள் எனும் ஏற்பாட்டை அமல்படுத்தி னார்கள் ஆங்கிலேயர்கள். பெரும்பாலும், இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே ஆளுநர் பொறுப்புக்கு வந்தார்கள். மாகாணங்களைக் கண்காணிக்கும் கவர்னர்கள் ஆங்கிலேயருக்கு அவசியப்பட்டி ருக்கலாம். ஆனால், காலனிய ஆட்சியை முறியடித்து மக்களாட்சி மலர்ந்த பிறகும் மாநிலங்களைக் கண்காணிக்க ஆளுநர்கள் ஏன் என்ற கேள்வியில் நியாயம் இல்லாமலில்லை.

புதுச்சேரியிலும் டெல்லி யிலும் மட்டும், ஏன் `ஆளுநர் - முதல்வர்’ பஞ்சாயத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவில் இப்போது ஏழு யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. பிரெஞ்சு ஆளுகைக்குக் கீழ் இருந்த புதுச்சேரி, 1962-ம்  ஆண்டுவாக்கில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. டையூ - டாமன், தாத்ரா - நகர் ஹவேலி போன்றவை, அதே காலகட்டத்தில் போர்ச்சுக்கீசியரிடமிருந்து பெறப்பட்டன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது, சண்டிகர். பஞ்சாபிலிருந்து ஹரியானா பிரிந்தபோது, சண்டிகர் யாருக்கு என்பதில் பிரச்னை வந்தது. இறுதியில், சண்டிகர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அந்தமான் - நிக்கோபரும், லட்சத்தீவுகளும் நிலவியல் ரீதியாக இந்தியாவிலிருந்து தள்ளியிருப்பவை. அந்த அடிப்படையில், இரண்டு தீவுகளுமே யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டன. இவை அனைத்தும், மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் என்பது, பொதுவரையறை. தாத்ரா - நகர் ஹவேலி, லட்சத்தீவுகள், டையூ டாமன், சண்டிகர் ஆகியவற்றை, ஆட்சிப்பணி அதிகாரிகள் நிர்வகிக்கிறார்கள். புதுச்சேரி, டெல்லி, அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் துணைநிலை ஆளுநர்கள் `ஆள்கிறார்கள்.’

புதுச்சேரியும் டெல்லியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர்களைக் கொண்டுள்ளன. தனக்கென்று தனிச் சட்டமன்றங்களை வைத்துள்ளன. மாநிலமாகவும் இல்லாமல், யூனியன் பிரதேசமாகவும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் சிக்கியிருக்கின்றன இரண்டு பகுதிகளும். ``மத்திய அரசின் பிரதிநிதியான எங்களுக்குத்தான் அதிகாரம்” என்கிறார்கள் ஆளுநர்கள், “மக்கள் தேர்ந்தெடுத்த எங்களுக்கே அதிகாரம்” என்கிறார்கள் முதல்வர்கள். இந்தப் பஞ்சாயத்தை, நீதிமன்றத்தால்கூட முழுவதுமாகத் தீர்த்துவைக்க முடியவில்லை. ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில், இருவேறு தீர்ப்புகளையே வழங்க முடிந்தது நீதிபதிகளால். நிலைமை இப்படியிருக்க, நிர்க்கதியில் நிற்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 மாநில சபாநாயகருக்கே தெரியாமல், நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்ததும், ‘சுத்தத்தைக் கடைப்பிடிக்காத கிராமங்களுக்கு இனிமேல் அரிசி, பருப்பு கிடையாது’ என்று அறிவித்ததும், மக்களாட்சியின் அடிப்படையையே தகர்க்கும் நடவடிக்கைகள். அந்த மாநிலத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத ஒருவர், அந்த மாநில மக்களைக் கட்டுப்படுத்துவது, மக்களின் அடிப்படை உரிமைகள்மீதான நேரடிப்போர். டெல்லியிலும் அதே கதைதான். அனில் பைஜலோடு சண்டையிடவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அப்புறம் எப்படி மக்கள்பணி ஆற்றுவார் மனிதர்?

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

மாநில சுயாட்சிக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் தமிழ்நாட்டிலோ, `ஆய்வு’ எனும் பெயரில் ஆளுநர் போடும் ஆட்டங்கள் அத்துமீறிப் போகின்றன. ஜெயலலிதாமீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதியளித்த சென்னா ரெட்டியையும் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஜெயிலுக்குப்போகக் காத்திருந்த ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்த பாத்திமா பீவியையும் தமிழ்நாடு மறக்கவில்லை. இவர்களிலிருந்து மாறுபட்டு எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக இருக்கிறார் புரோகித். 

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

“வலுவான ஆட்சியாளர்கள் இருந்தால் ஆளுநர் அடங்கியிருப்பார்” என்று அறிஞர்  பெருமக்கள் சொல்வது உண்மையோ உண்மை. அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கும் மாநிலங்களில், பதவிப்பிரமாணம் செய்து வைப்பதும், பல்கலைக்கழகங்களில் பட்டம் கொடுப்பதும் மட்டுமே ஆளுநரின் பணிகளாக இருக்கின்றன. ஆய்வு நடத்துவதும், அதிகாரிகளுக்கு ஆணையிடுவதும் அவர்களின் பணியாக இருப்பதில்லை. ஆனால் தமிழக அரசோ மத்திய அரசுக்கு அடிமை அரசாக இருப்பதால், ஆளுநரைக் கேள்விகேட்கும் அதிகாரம் இல்லாதிருக்கிறது. ஆனால், நாராயணசாமியும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பழனிசாமியைப் போல் ‘ஆமாம் சாமி’ போடத் தயாராக இல்லை. அதனால்தான் ஆளுநர் - முதல்வர் போராட்டம் அங்கெல்லாம் நடக்கிறது.

ஆளுநரை வைத்து மாநிலங்களை ஆட்டிப்படைப்பதில், காங்கிரஸை விஞ்சுகிறது பி.ஜே.பி. அப்போது நம்பூதிரி பாட்டை நேரடியாக காங்கிரஸ் கட்டம் கட்டியது என்றால், இப்போது நாராயணசாமியை மறைமுகமாகக் கட்டம் கட்டுகிறது பி.ஜே.பி. அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் அலப்பறைகள், `மக்களாட்சி என்றால் என்ன விலை?’ என்று கேட்கின்றன. கர்நாடகாவில், பெரும்பான்மை பெற்ற மஜத - காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைத்ததிலேயே தெரிகிறதே அவ்வளவும். அந்த அத்துமீறலுக்குப் பிறகும், ஆளுநர் வஜூபாய் வாலா திரும்பப் பெறப்படவில்லை. ஏனென்றால், அதையொரு அத்துமீறலாகவே கருதமுடியாத அளவுக்குக் கொண்டுவந்து விட்டார்கள் நாட்டை.

கவனித்துப் பார்த்தால், வயோதிகத்தின் கடைசி வாசலில் இருக்கும் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சேவகம் செய்த அதிகாரிகளுமே அதிகம் ஆளுநராக வருகிறார்கள். குடியரசுத் தலைவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் உச்சநீதிமன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்த சதாசிவம், ஒரு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான பின்னணி, இன்றுவரை யாருக்கும் தெரியவில்லையே. இப்படிப்பட்டவர்கள்தாம் ஆளுநர் பதவிகளை ஆக்கிரமிக்கிறார்கள். அரசியலமைப்பைத் துணைக்கு வைத்துக்கொண்டு, ராஜ்பவனில் இருந்தபடியே ராஜ்ஜிய பரிபாலனமும் செய்கிறார்கள். அதுவும், மாற்றுக்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு `ஆளுநர்கள்’ வருவதில்லை, `மாமியார்கள்’ வருகிறார்கள். இதுவரைக்கும் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களில், கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் அரசியல்வாதிகள் என்கின்றன ஆய்வறிக்கைகள். அவர்களில் பலர், ஆளுநர் பதவிக்காலத்தை முடித்த கையோடு, மீண்டும் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள்.

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்துவதுதான் மக்களாட்சி’ என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்களுக்கே சம்பந்தமில்லாத ஆளுநர்கள் மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்குவது, ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி.

சக்திவேல் - படங்கள்: எஸ்.தேவராஜன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism