Published:Updated:

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

Published:Updated:
ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

ளபதியாக இருந்த ஸ்டாலின், தலைவரானபிறகு அவருடைய நடவடிக்கைகள் அப்படியே மாறிவிட்டன. மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சிப்பதில் வேகம், கட்சிக்காரர்கள் சிலர் தவறான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுப்பதில் காட்டும் தீவிரம், சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் தன்மை என்று பல மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. தந்தை கருணாநிதி இருந்தவரை தலைமையின் வழிகாட்டுதலிலும் நிழலிலும் வளர்ந்தவர் ஸ்டாலின். தலைவர் ஆனபிறகு அவரின் நிழல்களாக, நிகழ்காலப் பயணிகளாக இருப்பவர்கள் இவர்கள்.    

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

துர்கா  (தலைவருக்குத் தலைவி)

மருமகளாக கோபாலபுரம் வீட்டிற்குள் இவர் வந்த சில நாள்களில், ‘மிசா’ கைதியாக சிறைக்குள் சென்ற ஸ்டாலின், பல சித்திரவதைகளை அனுபவித்து, ‘அரசியல்வாதியாக’ வெளியே வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஸ்டாலினுக்குப் பக்கபலம் என்றால் அது துர்கா ஸ்டாலின்தான். மனைவியாக மட்டுமல்ல, ஸ்டாலினின் பொதுவாழ்க்கைத் துணையாகவும் இருக்கிறார். ஸ்டாலினின்  ஆத்மார்த்த மருத்துவரும் இவரே. ஸ்டாலின் எந்த நேரத்திற்கு என்ன சாப்பிடவேண்டும், எந்த மாத்திரையை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என அனைத்தையும் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதில் கவனம் செலுத்துவார் துர்கா. கருணாநிதி  இருக்கும்போது, அறிவாலயத்துக்கே அவருக்குத் தேவையான சூப், தண்ணீர் உள்ளிட்டவை கோபாலபுரத்திலிருந்து வந்துவிடும். பதினொரு மணிக்குக் காய்கறி சூப், மாலையில் குடிக்கும் காபி என அனைத்தும் அறிவாலயத்துக்கு வருவது கோபாலபுரத்திலிருந்துதான்.

மாமனாரைக் கவனித்துக்கொள்வ தைப்போல், கணவரையும் கவனித்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுபவர் துர்கா. பெரும்பாலும் ஸ்டாலின் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்டால் கணவருடனே பயணிக்க விரும்புவார். ஸ்டாலினின் கோபப்பார்வைக்குள் சிக்கியவர்கள், துர்கா மனதைக் கரைத்துக் கட்சிக்குள் கரைசேர்ந்த கதைகள் ஏராளம். கட்சி நிர்வாகத்தில் இவரைப் பிடித்தால் பதவிக்கு வந்துவிடலாம் என்ற நிலை உருவாகியிருப்பது ஒரு பெரிய மைனஸ். கட்சிக்குத் தலைவராக ஸ்டாலின் இருந்தாலும், ஸ்டாலினுக்குத் தலைவியாக இருப்பது என்னவோ துர்காதான்.

சபரீசன் (மீண்டும் ஒரு மனசாட்சி)

கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரின் மருமகன் முரசொலி மாறன்.  இப்போது ஸ்டாலினின் மனசாட்சியாக மாறியிருக்கிறார் சபரீசன். தி.மு.க-வில் எந்தப் பொறுப்பும் இல்லாமலே சகல செல்வாக்குடன் விளங்குகிறார் சபரீசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேச்சைவிடச் செயல் முக்கியம் என்பதில் நம்பிக்கை கொண்ட சபரீசன்தான் ஸ்டாலினின் அரசியல் அசைவுகளைத் தீர்மானிக்கிறார். இப்போதைய தி.மு.க-வின் அணுகுமுறைகள் அனைத்தும் சபரீசன் பார்வைக்குச் செல்லாமல் நடப்பதில்லை. சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வின் பிரசாரத் திட்டங்கள் மக்கள் மத்தியிலும் சமூகவலைதளங்களிலும் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்காக, பல்துறை நிபுணர்களைக் கொண்டு ‘ஒன்மேன்குரூப்’ என்னும் குழுவை ஆரம்பித்தவர் சபரீசன். சுருக்கமாக ஓ.எம்.ஜி.

 டெல்லிக்குச் சென்று ராகுலைச் சந்திப்பதாக இருந்தாலும் சரி, சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு வரும் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பாக  இருந்தாலும் சரி ஸ்டாலின், தன்பக்கத்தில் வைத்துக்கொள்ளும் நம்பிக்கைநாயகன்  மருமகன் சபரீசன்தான். மொழி ஆளுமையும், நிர்வாகத்திறனும் இவரின் கூடுதல் தகுதிகள். எதிர்காலத்தில் டெல்லியில் தி.மு.க-வின் முகமாக ஜொலிக்கும் வாய்ப்பு சபரீசனுக்கு இருக்கிறது  என்கிறார்கள். பணிவும், பப்ளிசிட்டி விரும்பாத குணமும் இவருடைய தனி ஸ்டைல். உதயநிதியின் நண்பராக இருந்து மருமகனாக மாறியவர்.  தி.மு.க-வுடன் யார் கூட்டணி அமைக்க வேண்டுமென்றாலும், அவர்கள் சந்திக்கும் முதல் நபர் சபரீசன். சபரீசனின் அதிரடியால் சில சங்கடங்களும் கட்சிக்கு ஏற்பட்டுள்ளன என்பதுதான் மைனஸ் பாயின்ட்.

உதயநிதி (கழகத்தின் கதாநாயகன்)

கருணாநிதி குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக வரும் வாய்ப்புள்ளவர். அரசியலில் நேரடியாக எந்தப் பொறுப்புக்கும் வராமல் இருந்தாலும் ஸ்டாலினைச் சுற்றி நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் கதாநாயகன் இவர்.
 
ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகள் மருமகனின் ஆலோசனைக்குப் பிறகே அமலுக்கு வரும் என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், மருமகனைத் தாண்டி மகனின் செல்வாக்கு கட்சிக்குள் வலுவாகத்தான் இருக்கிறது. தி.மு.க-வின் கஜானாவாகக் கருதப்படும் முரசொலி அறக்கட்டளை இவர் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் இவர் ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருப்பார் என்பதை அறிந்துகொள்ளலாம். ஸ்டாலின் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் களத்தில் இறங்கி, உடன்பிறப்புகளிடம் நெருக்கம் காட்டுகிறார் உதயநிதி. ‘நான் இதையெல்லாம் விரும்பவில்லை’ என்று உதயநிதி சொன்னாலும், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக போஸ்டர்கள் அதிகம் ஒட்டப்படுவது உதயநிதிக்குத்தான். ரசிகர்மன்ற நிர்வாகிகளிடம் முகம் சிரித்துப் பேசுவதும், கட்சி நிர்வாகிகளிடம் முகஸ்துதிக்குப் பேசுவதும் நிதியின் மைனஸ்.

சுனில்  (மாஸ்டர் மைன்ட்)

ஸ்டாலினுக்கு மட்டுமல்ல இன்றைய தி.மு.க- வுக்கும் மாஸ்டர் மைண்டு இவர். சபரீசன் மூலம் ஸ்டாலினுக்கு அறிமுகமான தொழில்நுட்ப வல்லுநர். இன்று தி.மு.க-வினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும் உற்றுக்கவனிக்கும் ஓ.எம்.ஜி குழு இவர் தலைமையில்தான் செயல்படுகிறது.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ திட்டம் முதல் இப்போது தி.மு.க-வினர் நடத்திவரும் ஊராட்சி சபைக் கூட்டம் வரை ஓ.எம்.ஜி குழுமத்தின்  சிந்தனையில் உதித்த திட்டங்கள்தாம். ஸ்டாலினின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் சுனிலின் ஆலோசனை கண்டிப்பாக இருக்கும்.ஸ்டாலினின் கொல்கத்தாப் பயணத்தில் அவருடன் சென்றவர் சுனில். ஆழ்வார்பேட்டை ஸ்டாலினின் இல்லத்தில் செயல்படும் மினி ஆபீஸில் ஸ்டாலினின் மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டு வருகிறார்.

இவருக்குக் கீழ் பணியாற்றும் நாகா, ஸ்டாலினின் அறிக்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சமூக வலைதளங்களைத் தி.மு.க தரப்பு லாகவமாகக் கையாண்டது. அதற்குக் காரணமான தி.மு.க-வின் ஐ.டி விங். அதற்கு மூளையாக இருந்தவர் சுனில்.

மூத்த நிர்வாகிகளின் கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்கும் இவர், இரண்டாம் மூன்றாம் கட்ட நிர்வாகிகளின் கருத்துகளைப் புறம்தள்ளுவது மைனஸ். ஸ்டாலினுக்கு நேர்மையாக இருந்தாலும் சில மூத்த நிர்வாகிகள் தங்கள் வலைக்குள் இவரை வளைக்கத் திட்டமிடுவது, இவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் என்பதைச் சொல்கிறது.

தினேஷ் (நிழல் )

ஸ்டாலினின் நிழலாக வரும் அவரின் உதவியாளர். புதிதாக திருமணமான இளைஞர்.இவரும் ஓ.எம்.ஜி.குழுமத்தில் பணியாற்றி அதிலிருந்து ஸ்டாலினின் உதவியாளராக புரமோஷன் பெற்றுள்ளார். அமைதியும், எதையும் லாகவமாகக் கையாளும் திறனும் இவரின் ப்ளஸ். ஸ்டாலினின் அப்பாய்ன்மென்ட், அவருடைய நிகழ்ச்சி நிரல் என எல்லாவற்றையும் கவனித்துக்கொள்பவர்.   

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

தமிழக அரசியல் தலைவர்களிலே ட்விட்டரில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் தலைவர் ஸ்டாலின்.அதன் பின்னணியில் இருப்பவர் தினேஷ். ஸ்டாலினின் பேச்சுகளை உடனுக்குடன் குறிப்பெடுத்து உடனடியாக ட்விட்டரில் பதிவேற்றி அதை ட்ரெண்டாக்கும் உத்தி தெரிந்தவர். அறிவாலயமாக இருந்தாலும் சரி, ஆழ்வார்பேட்டை இல்லமாக இருந்தாலும் சரி, தினேஷிடம் அனுமதி பெற்றே ஸ்டாலினைச் சந்திக்க முடியும்.

அறிவாலயத்தில் ஸ்டாலினின் முகங்கள்!

இந்த ஐந்து முகங்களைக் கடந்து அறிவாலயத்தில் ஸ்டாலினுக்குப் பின்புலமாகச் சில முகங்கள் உள்ளன. அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்திக்க நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவாலயத்திற்கு வருகிறார்கள். வருபவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தி சந்திப்பிற்கான காரணத்தை அறிந்து, அவர்களை ஸ்டாலினுடன் சந்திக்கவைக்கும் பணி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகனுடையது. அறிவாலயத்தில் உள்ள தலைவர் அறைக்குள் இவர் அனுமதி இருந்தால் மட்டுமே எட்டிப் பார்க்கக்கூட முடியும்.

அறிவாலயத்தின் முக்கியமான நிர்வாகிகள் ஜெயக்குமாரும் பத்மநாபனும். பதவி பைல் முதல் புகார் பைல் வரை ஸ்டாலினுக்கு எடுத்துக் கொடுப்பவர் ஜெயக்குமார்தான். பத்மநாபன், அறிவாலயத்தின் கணக்குவழக்குகளை அலசி, கச்சிதமாக ஸ்டாலினுக்கு அளிக்கும் கணக்காளர்.கருணாநிதியிடம் பெற்ற நம்பிக்கையை ஸ்டாலினிடமும் பெறும் உறுதியில் உள்ளனர் இந்த இரட்டையர்கள்.

 இவர்களைத் தாண்டி, கட்சிக்குள் நடக்கும் களேபரங்களும், சட்டச் சிக்கல்களும் ஸ்டாலின் காதுக்குச் சென்றால் ‘‘பாரதியைப் பார்த்துப் பேசிக்கொள்ளுங்கள்’’ என்பார் ஸ்டாலின். ஆனால், ‘பல புகார்களை சரிவர விசாரிக்காமல் காலம் தள்ளியே காலாவதியாக்கியவர்’ என்ற குற்றச்சாட்டும் ஆர்.எஸ்.பாரதிமீது உண்டு. ஆனாலும் ஸ்டாலின் இவர்மீது வைத்திருக்கும் உறுதியான நம்பிக்கை, பாரதியின் பலம்.

சண்முகநாதன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் என, கருணாநிதி தனக்கு நம்பிக்கையான ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டதைப்போல், இப்போது ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகளை வடிவமைப்பவர்களாக மேற்கண்டவர்களே இருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் ஸ்டாலின் இல்லை.

அ.சையது அபுதாஹிர்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism