அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்!”

“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்!”

பேரா.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்!”

மிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல்லார் மாளிகையின் உச்சியில், ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற வாசகம் ஒளிவீசுகிறது. ஆனால், எடுபிடி அரசு என்ற ஏகடியத்துக்குள்ளான எடப்பாடி பழனிசாமியாரின் அரசு, தமிழகத்துக்குத் தலைகுனிவுகளையே தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

திராவிட இயக்கத்தின் ஆணிவேராம் தந்தை பெரியார், தனது இயக்கத்துக்குச் சுயமரியாதை இயக்கம் என்ற பெயரையே முதலில் சூட்டியிருந்தார். சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமை உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளை எல்லாம் மத்திய அரசிடம் மண்டிபோட்டு அடகு வைத்திருக்கின்ற இந்த மெளன சாமிகளின் ஆட்சியில், மக்கள் நலன் மயானச் சிதையில் தகனமாகிவிட்டது. அடிக்கடி ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், அவர் எதிர்த்த மத்திய பி.ஜே.பி அரசின் திட்டங்களை எல்லாம், செந்தமிழ் நாட்டுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர். ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் தார்மிக உரிமை, தற்போதுள்ள அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்குத் துளியும் கிடையாது.

“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்!”

கிராமப்புற மற்றும் நடுத்தர ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவில் மண்ணை அள்ளிப்போடும் ‘நீட்’ தேர்வை, ஜெயலலிதா அடியோடு மறுத்தார்; ஆவேசமாய் எதிர்த்தார். அவர் பெயரைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள் மாணவ உயிர்களைப் பலிகொடுக்கும் மாபாதகத்தைச் செய்தார்கள். இப்போது, நீட் தேர்வு பயிற்சி மையங்களை நடத்துவதாகப் பசப்பு வார்த்தை பேசுகிறது பழனிசாமி அரசு. தமிழகத்தின் விவசாய மண்டலத்தையே பாழ்படுத்தி, பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தார் ஜெயலலிதா. பி.ஜே.பி சங் பரிவாரங்கள் தவிர்த்த அனைத்துக் கட்சிகளும், சமுதாய இயக்கங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துக் களமாடி வருவதுடன், காவிரி படுகைப் பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றன. ஆனால், ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமம் கொள்கையின் கீழ் (Hydrocarbon Exploration and Licensing Policy (HELP) காவிரி படுகைப் பகுதியில், வேதாந்தா நிறுவனத்துக்கும், சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிமத்தை மத்திய பி.ஜே.பி அரசு வழங்கியுள்ளது. இந்த அபாயத் திட்டத்துக்கு, தமிழக அரசு மௌன சம்மதம் வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காகப் போராடிய மக்கள்மீது காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டு, 13 உயிர்கள் பலியாக பழனிசாமியின் அரசே காரணமாக இருந்தது. மராட்டியத்திலும், குஜராத்திலும் துரத்தப்பட்டதுபோல, ‘தமிழகத்தில் தாமிர உருக்காலைக்கு அனுமதி இல்லை’ என்று கொள்கை முடிவு எடுத்திருந்தால், மறுபடியும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு போடும் மாபாதகம் நடந்திருக்காது.

“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்!”

ஒகி புயல் குமரி மாவட்டத்தைக் குமுறி அழவைத்தபோது, தமிழக அரசு நடந்த விதம் வெட்கித் தலைகுனியும்படி இருந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருக்காகப் பறக்கும் ராணுவ ஹெலிகாப்டர், அப்போது கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடுவதற்காகப் பறக்கவில்லை. ‘மோடியா... இந்த லேடியா...’ என்று நெஞ்சுரத்தோடு பி.ஜே.பி-யை எதிர்கொண்டவர் ஜெயலலிதா. ஆனால் இவர்களோ, மோடியின் காலடியில் முழுச் சரணாகதி அடைந்து மானத்தையும், நாணத்தையும் துறந்து, ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர். ஐந்து மாநிலங்களில் பி.ஜே.பி-யின் தோல்வியை மறைக்கப் ‘படுதா’ போடும் வேலையை பழனிசாமி செய்துவருகிறார். ஆடிட்டர் குருமூர்த்தி இவர்களை ‘ஆண்மையற்றவர்கள்’ என்று கேவலமாக விமர்சித்தாலும், அமைதியாக இருப்பார்கள். ஆனால், மக்கள் நலனுக்காகப் போராடுபவர்கள்மீது வழக்கு தொடுப்பார்கள், துப்பாக்கிச்சூடும் நடத்துவார்கள். இந்த அவலநிலை மாற வேண்டுமென்றால், சமூகநீதி, சமத்துவம் காக்கும் மக்களாட்சி மலரவேண்டும்.

‘சின்னச்சின்ன கோபங்களைச் சேர்த்து வையுங்கள், நாளை அது ஒரு பெரிய புரட்சிக்குப் பயன்படும்’ என்பார் ரஷ்யத் தலைவர் லெனின். தமிழக மக்கள் பெரிய பெரிய கோபங்களைச் சேர்த்து வைத்துள்ளனர். அந்தக் கோபம், ஆட்சி மாற்றமாக மலரும் நாள் மிக அருகில் உள்ளது.

தொகுப்பு: த.கதிரவன்