அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கமல், தேவை தெளிவான அரசியல் பாதை!

கமல், தேவை தெளிவான அரசியல் பாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
கமல், தேவை தெளிவான அரசியல் பாதை!

படம்: ஜி.வெங்கட்ராம்

கமல், தேவை தெளிவான அரசியல் பாதை!

‘அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?’ என்று ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து, பல ஆண்டுகளாகத் தமிழர்களிடையே உரையாடல்கள் நிகழ்ந்தன. ஆனால், கமல்ஹாசனையும் அரசியலையும் மக்கள் தொடர்புப்படுத்திப் பார்த்ததே இல்லை. கமலுக்கும் அப்படியொரு எண்ணம் இருந்தது என்பதும் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்பதும் பலரும் எதிர்பார்க்காதது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் தத்தளிப்புகள், அதிகாரத்துக்கான மோதல்கள், வெற்றிடத்தைப் பயன்படுத்தத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகள், பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமைச்சர்கள் ஆடும் ஆடுபுலி ஆட்டங்கள்... கலையுலகப் பிரமுகர்களின் அரசியல் பிரவேசங்கள் என்று பல நிகழ்வுகள் அவர் இறப்புக்குப் பிறகு நிகழ்கின்றன. அதில் ஒன்றாகத்தான் கமல்ஹாசனின் அரசியல் வருகையை நாம் எடுத்துக்கொள்ள முடியும். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துக் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்டது. 2018, பிப்ரவரி 21-ம் தேதி மதுரை, ஒத்தக்கடையில் பிரமாண்டமான நிகழ்வாகத் தனது கட்சித் தொடக்க விழாவை நடத்தி அரசியல் பிரவேசம் செய்தார் கமல்.

அரசியலில் ‘நீங்க நல்லவரா... கெட்டவரா?’ என்று இவ்வளவு சீக்கிரம் அவரைக் கேட்டுவிட முடியாதுதான். ஆனால், அப்துல் கலாம் வீட்டிலிருந்து அவர் தொடங்கிய அரசியல் பயணத்தைத் தொகுத்துப் பார்ப்போமானால், அரசியல்வாதியாக கமல் நின்று கொண்டிருக்கும் இடம், அவர் போக வேண்டிய தூரம் ஆகியவற்றை ஓரளவு கணிக்க முடியும். கமலின் அரசியல் பிரவேசம், அதிகாரபூர்வமாக கலாம் வீட்டில்தான் ஆரம்பித்திருக்கலாம். ஆனால், அதன் ஊற்று ட்விட்டரிலிருந்தே தொடங்கியது. கட்சிகள்மீதான தனது விமர்சனங்களை கமல், முதன்முதலில் ட்விட்டரிலிருந்துதான் தொடங்கினார். கட்சியாக உருவெடுத்த பின்பு, இப்போது கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பது வரை வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

கமல், தேவை தெளிவான அரசியல் பாதை!

கிராம சபைக் கூட்டங்களில் கமல்ஹாசன் பங்கேற்பதற்கான ஆர்வத்தைப் பார்க்கிறபோது, ‘மக்களின் தேவைகளை அடிப்படையில் இருந்து புரிந்துகொள்ள விரும்புகிறார்’ என்று தெரிகிறது. அதேசமயம் மற்ற விஷயங்களையும் முன்னிறுத்தும் விதமாக கமல், எத்தனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார் கமல்? மக்கள் செல்வாக்கு இருந்தும் பெருந்திரளான ஒரு கூட்டத்தைக் கூட்டி, அவரால் ஏன் மக்கள் நலனுக்கான ஒரு போராட்டத்தையோ, பேரணியையோ நடத்த முடியவில்லை? கட்சிகளையும் தலைவர்களையும் விமர்சிப்பதில் கமலுக்கு இருக்கும் வெளிப்படைத் தன்மையை, பாரபட்சத்தை நிச்சயம் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கட்சியை, ஓர் இயக்கத்தை முன்னிறுத்துகிற இடத்துக்கு வந்துவிட்ட பிறகு கமல், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து அவர்களின் பஞ்சாயத்தைத் தீர்த்து வைப்பவராகத் தொடர்ந்ததை, அரசியலைக் கவனிக்கும் தமிழர்கள் ரசிக்கவில்லை. கமல், நிச்சயம் மக்கள் நலனுக்கு எதிரான அரசியல் தலைவர் அல்ல; ஆனால், அவர் எந்த அரசியல் தலைவரின் கொள்கையின் வழி தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

கட்சி தொடக்க விழாவில், நீதிக்கட்சியை தன்னுடைய முன்னுதாரணமாக கமல் குறிப்பிட்டார். ‘நீதிக்கட்சி சமூகத்துக்குச் சொன்ன நல்ல அறிவுரைகளை எடுத்துக் கையாண்டு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவேன்’ என்றார். நீதிக்கட்சியின் அடிப்படையே உயர்சாதி ஆதிக்க எதிர்ப்பு. அதை கமல் எந்த அளவுக்கு உள்வாங்கி வெளிப்படுத்த இருக்கிறார்?

ராகுல் காந்தி, பினராயி விஜயன், குமாரசாமி, மம்தா பானர்ஜி, நல்லகண்ணு, பொன்.ராதாகிருஷ்ணன், டி.என்.சேஷன் என்று பலரைச் சந்தித்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, அங்கிருந்த நிபுணர்களைச் சந்தித்தும் தமிழகத் தேவைகளை விவாதித்தார். இன்னும் அவருடைய அரசியல் சார்பு தெளிவற்ற தாகவே இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. விரைவில் கமல், தன்னுடைய தெளிவான அரசியல்  பாதையை முடிவுசெய்ய வேண்டும்.விரைவில் சொல்லுங்கள் கமல்ஹாசன்!

- தமிழ்ப்பிரபா