Published:Updated:

`வைகைச்செல்வன் எங்களை வஞ்சிக்கிறார்!’ - கொதிக்கும் அ.தி.மு.க பேச்சாளர்கள்

தன்னை முன்னிலைப்படுத்தி தங்களை வஞ்சிப்பதாக, அ.தி.மு.க பிரசாரக் குழு தலைவர் வைகைச்செல்வன் மீது கட்சிப் பேச்சாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

`வைகைச்செல்வன் எங்களை வஞ்சிக்கிறார்!’ - கொதிக்கும் அ.தி.மு.க பேச்சாளர்கள்
`வைகைச்செல்வன் எங்களை வஞ்சிக்கிறார்!’ - கொதிக்கும் அ.தி.மு.க பேச்சாளர்கள்


இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 20 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்றக் கூட்டங்கள் நடைபெறுகிறது. அ.தி.மு.க பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வைகைச்செல்வன்தான் இப்பட்டிமன்றக் கூட்டங்களுக்கு நடுவராகப் பங்கேற்கிறார். இக்கூட்டங்களால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக அ.தி.மு.க பேச்சாளர்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய மூத்த பேச்சாளர் ஒருவர், ``இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நிர்மலா பெரியசாமி, நாஞ்சில் அன்பழகன் என்று 20 ஸ்டார் பேச்சாளர்களும் 1,100 மேடைப் பேச்சாளர்களும் அ.தி.மு.க-வில் உள்ளனர். இவர்களுக்கு ஜீவனாம்சமே கட்சி நிகழ்ச்சிகள்தான். ஊராட்சி சபை கூட்டங்களை தி.மு.க போடத் தொடங்கியவுடன், திண்ணைப் பிரசாரத்தை முன்னெடுக்கலாம் எனக் கட்சித் தலைமைக்கு ஆலோசனை அளித்தோம். இதை இடைமறித்த முன்னாள் அமைச்சரும் கட்சி செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன், தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 20 தொகுதிகளிலும் பட்டிமன்றக் கூட்டங்களை நடத்த முதல்வரிடம் அனுமதி பெற்றுவிட்டார். 

கட்சி நிகழ்ச்சிகள்போல, இப்பட்டிமன்றங்கள் பொதுவெளியில் நடத்தப்படுவதில்லை. கல்யாண மண்டபங்களில் நடத்தப்படுவதால், பொதுமக்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வருவதில்லை. மக்களுக்கும் பட்டிமன்றத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடுகிறது. நான்கு பேச்சாளர்கள் மட்டுமே அழைக்கப்படுவதால், மற்றவர்களுக்கு வேலையில்லை. மண்டப செலவு, ஆட்களைத் திரட்டும் செலவு என்று அந்தந்த மாவட்டச் செயலாளருக்கும் லட்சங்கள் கரைகிறது’’ என்று கொதித்தார்கள்.

இதுகுறித்து வைகைச்செல்வன் ஆதரவாளர்களிடம் பேசினோம், ``பேச்சாளர்களை வஞ்சிக்க வேண்டும் என்பதோ, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதோ வைகைச்செல்வனின் நோக்கமல்ல. கட்சி தன்னிடம் ஒப்படைத்தப் பணியைச் செய்கிறார். கட்சிக்குள் அவருக்கு எதிரானவர்கள், இவ்வாறு தவறான செய்தியைப் பரப்புகிறார்கள்’’ என்று விளக்கமளித்தனர்.