அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்!

சரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்!

படங்கள்: சு.குமலு

சரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்!

முன்பெல்லாம் எப்போதாவது, யாராவது, ஏதோ ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச்சொல்லிச் சிக்கலில் மாட்டிக்கொண்ட காலம்போய், இன்று குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை அடுத்தடுத்து சொல்லி, பிரபலமாகிவருகின்றனர். அப்படி, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்களை இங்கே பார்ப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா பெரியார் சிலை, காஷ்மீர் சிறுமி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விவகாரம், நீதிமன்றம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட விஷயங்களில் தவறாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.  நடிகரும், பி.ஜே.பி உறுப்பினருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் பற்றி மிகவும் தவறான கருத்தைப் பதிவிட்டிருந்தார். இவர்கள் ‘சர்ச்சை’ கருத்துகளால் சண்டையிட்டுக் கொண்டிருக்க, தூத்துக்குடி மாவட்ட பி.ஜே.பி மகளிரணிச் செயலாளர் நெல்லையம்மாள் ஒருபடி மேலேசென்று, திருச்செந்தூர் முருகன் கோயிலில் நோட்டீஸ் விநியோகம் செய்துகொண்டிருந்த, தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாகண்ணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பெயரும் அடிபட்டதால், அந்தப் பிரச்னையும் தீயாகச் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் அவர், பெண் பத்திரிகையாளர் ஒருவரைக் கன்னத்தில் தட்டியதும், தமிழகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதும் சர்ச்சையைக் கிளப்பியது.

வட மாநிலங்களிலும் சர்ச்சைகளில் சிக்கிய ஆட்களுக்குப் பஞ்சம் இல்லை. மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன்மீதும், மத்திய அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர்மீதும் பாலியல் தொடர்பான சர்ச்சை எழுந்ததால், அவர்கள் இருவரும் ராஜினாமா செய்தனர். அதேபோல், ‘அரசு நிர்வாகத்தில் தலையீடு; அதிகாரம் செலுத்துதல்; கணவர் அடித்தால் திருப்பித் தாக்கச் சொல்லும் பேச்சு’ உள்ளிட்ட பல விவகாரங்களில் புதுச்சேரி கவர்னரான கிரண்பேடிமீதும் சர்ச்சைகள் எழுந்தன.

சரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்!

“அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி போன்றோரைப் பிராமணர் என்று அழைப்பதில் தவறில்லை” என்று பேசிய குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் திரிபாதிமீதும், “உங்களின் ஒரு காலை உடைத்து ஊன்றுகோலைத் தர முடியும்” என்று சொன்ன மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோமீதும் சர்ச்சைப் புகார்கள் வாசிக்கப்பட்டன.  திரிபுரா முதல்வரான பிப்லப் குமார், “மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்தது; உலக அழகி பட்டத்துக்கு டயானா ஹைடன் தகுதியானவர் அல்ல; இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்க்காமல், பீடா கடை நடத்தவேண்டும்” என்று பேசினார். உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ சுரேந்தர் சிங், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை; அரசு அதிகாரிகளைவிடப் பாலியல் தொழில்செய்பவர்கள் எவ்வளவோ மேல்; தாஜ்மஹால் பெயரை ராம் மஹால் என மாற்றலாம்; பெண்களின் மீதான குற்றங்கள் அதிகரிப்பதற்குப் பெற்றோர்கள் தான் காரணம்” சர்ச்சைகளின் தொடர் நாயகனாக வலம்வந்தார். மகாராஷ்டிர எம்.எல்.ஏ ராம் கதம், “காதலித்த பெண் திருமணத்துக்கு மறுத்தால், கடத்திவந்து காதலனுக்குத் திருமணம் செய்துவைப்போம்” என்று சொன்னதும் விவாதங்களைக் கிளப்பின.
 
“சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டவேண்டும்” என்றார் மலையாள குணசித்திர நடிகர் கொல்லம் துளசி. கர்நாடக முதல்வர் குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, “கட்சியினரைக் கொன்றவருக்கு ஈவு, இரக்கம் பார்க்காதீங்க... சுட்டுத்தள்ளுங்க. பிரச்னை வராது” என்று செல்போனில் பேசியதும் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “2019 தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும்” என்று பேசினார்.

இந்திய அளவில் பிரபலங்களின் சர்ச்சைகளைத் தூக்கி சாப்பிட்டன தமிழக அரசியல்வாதிகளின் சர்ச்சைப் பேச்சுகள்.  “ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, டி.டி.வி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுக்கொண்டு, தற்போது தினகரனுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்; சபாநாயகர் தம்பிதுரை, டெல்லியில் போய் உட்கார்ந்து நரசிம்ம ராவுடன் பேசுவார்; அம்மாவை வீட்டுக்குள்ளேயேவைத்து அவருக்குக் கண்டதையும் கொடுத்து சுகரை ஏற்றிவிட்டார்கள்; ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொன்றுவிட்டார்கள்; கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நவீன டெக்னாலஜிமூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடவேண்டும்; புயல் வருவது நல்லதுதான். அடுத்தடுத்து புயல் வந்தால்தான் திண்டுக்கல் நகரின் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்” என்று சரமாரியாகச் சர்ச்சை சரவெடிகளை வெடித்துக்கொண்டே இருந்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

சரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்!

அவருக்குப் போட்டியாக அமைச்சர் செல்லூர் ராஜு, “அ.தி.மு.க உறுப்பினர் அட்டை இருந்தால்தான், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்கள் பெற முடியும்’’ என்றும், “இந்தியாவுக்குச் சுதந்திரம் 1955-ல் கிடைத்தது” என்றும் குறிப்பிட்டது தமிழகம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஜாதகத்தில் குரு நேரடிப் பார்வையில் உள்ளார். இதனால், எடப்பாடி அரசை யாராலும் அசைக்க முடியாது” என்றார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. “காவிரி தண்ணீர் என் பாக்கெட்டிலா இருக்கிறது அல்லது என் வீட்டின் பைப் குழாயிலா இருக்குது, போனவுடன் திறந்துவிடுவதற்கு” என்றும், “தவறாகப் பேசிய உங்கள் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்” என்றார் அமைச்சர் துரைக்கண்ணு. “முக்கொம்பு அணை உடைப்புக்குக் கண் திருஷ்டியே காரணம்” என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

“இந்திரா காந்தி முதல்வராக இருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது” என்றும், பெண் நிருபர் ஒருவரை, “நீங்க அழகாக இருக்கீங்க” என்றும் சர்ச்சையில் சிக்கினார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். “மெரினாவில் கருணாநிதி சமாதி அமைந்தது அ.தி.மு.க அரசு போட்ட பிச்சையினால்தான்” என்றார் கடம்பூர் ராஜு.

“டாஸ்மாக் கடை லாபத்தால்தான்  ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம்” என்றார் அமைச்சர் வீரமணி. இவர்களுக்கிடையே, எம்.எல்.ஏ. கருணாஸ், “தமிழக முதல்வர் என்னைக் கண்டு அஞ்சுகிறார்” என்றதும், “சட்டையைக் கழற்றிவிட்டு வந்து நேருக்குநேர் என்னுடன் மோதத் தயாரா” எனப் போலீஸ் அதிகாரிக்குச் சவால் விடுத்ததும் சர்ச்சையைக் கிளப்பின.

மு.க.ஸ்டாலினும் உளறல் மன்னனாக மாறிவருகிறார். ‘யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே’, ‘பூனை மேல் மதில்போல’ ஆகியவை அவரது உளறல்களுக்கு உச்சபட்ச உதாரணங்கள். ஒரு பேட்டியின்போது, ‘தமிழகத்தில் நடைபெற்றுவரும் வாழப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி ஆட்சி’ என்று கூறிவிட்டு பின்னர், ‘எடப்பாடி பழனிசாமி’ என்று திருத்தினார்.

- ஜெ.பிரகாஷ்,