அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!”

“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!”

ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!”

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியை விட, 4,46,000 வாக்குகள் மட்டுமே அதிகம்பெற்றது அ.தி.மு.க. சதவிகித அளவில் பார்த்தால், 1.1 விழுக்காடுதான் அ.தி.மு.க அதிகமாகப் பெற்றது. இந்த ஜனநாயக ஆச்சர்யத்தின் விளைவாகத்தான் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இரண்டாம் முறை முதல்வராகப் பதவி ஏற்று, 100 நாள்கள் கடந்த நிலையில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், வீடு திரும்பாமலேயே மரணம் அடைந்துவிட்டார்.

அவர் மறைந்தபின், அ.தி.மு.க-வில் குழப்பங்கள் மேல் குழப்பங்கள். அடுத்து முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், ஒரு மாதத்துக்குள் சசிகலா குடும்பத்தால் ஒதுக்கப்பட்டார். நிர்பந்தத்தால் பதவி விலகி தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா முதல்வராக முயன்று, சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால், சிறைக்குப் போனார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் முகாமில் எடப்பாடி பழனிசாமியையே அ.தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வுசெய்தனர். இதையடுத்து, அவர் முதல்வரானார். ‘‘எடப்பாடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது போராட்டம் நடத்தப்போகிறேன்’’ என்று அறிவித்த ஓ.பி.எஸ்.,  ஒருகட்டத்தில் எடப்பாடியுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து சசிகலாவின் வாரிசான டி.டி.வி.தினகரனை ஓரங்கட்டினார். இப்படிச் சந்தர்ப்பவாதிகளின் கூடாரமாக அ.தி.மு.க. மாறிவிட்டது. இப்படி உள்கட்சிக் குழப்பத்தால் தமிழகத்தின் வளர்ச்சி பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டது.

இரு பெரிய மாநிலக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க நிலை இப்படி இருக்க, இன்னொரு மாநிலக் கட்சியான தி.மு.க-வில் ஐம்பது ஆண்டுக்காலம் அதன் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, செயல் தலைவராக இருந்த ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். தலைவரான பின்பு, முதல் பேச்சிலேயே தனது அரசியல் பாதையைத் தெளிவுபடுத்தி, மத்தியில் நடைபெற்றுவரும் பாசிச வகுப்புவாத பி.ஜே.பி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை, துணிச்சலுடன் பகிரங்கப்படுத்தினார். மோடியைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலக்கைக் கோடிட்டுக் காட்டி, தி.மு.க-வின் பாதையைச் சரியாக வகுத்துள்ளார் ஸ்டாலின். மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க-வின் அணுகுமுறை தெளிவாக இருக்கிறது.

“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!”

கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், ‘‘ராகுல் காந்தி அவர்களே வருக, மத்தியில் நல்லாட்சி தருக’’ என்று பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியே என்று நாட்டிலேயே முதல்முறையாகப் பிரகடனம் செய்தார். இதன்மூலம் தேசிய அரசியல் களத்தில், நரேந்திர மோடியை வீழ்த்துகிற வல்லமை, ராகுல் காந்திக்கு இருப்பதாக அந்தக் கூட்டத்தில் உறுதி செய்தார் ஸ்டாலின். இதன்மூலம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மேலும் உறுதியாகியுள்ளது. ராகுலை, பிரதமர் வேட்பாளராக தி.மு.க முன்கூட்டியே அறிவித்தது பல கட்சிகளுக்கு வியப்பாக இருக்கலாம்.

ஆனால், வரலாறு அறிந்தவர்கள் வியப்படைய வாய்ப்பில்லை. கடந்த 1980 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சென்னை மெரினா கடற்கரையில், அன்னை இந்திரா காந்தி மேடையில் அமர்ந்திருக்க, தி.மு.க தலைவர் கருணாநிதி உரையாற்றும்போது, “We Don’t want Tamasha at Delhi, We want strong and stable Government, under the leaders hip of Smt. Indira Gandhi” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டு, ‘‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’’ என்று சொன்னது இன்றைக்கும் கல்வெட்டுச் சொற்களாக அனைவரது மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதைப்போலவே, 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அன்னை சோனியா காந்தி மேடையில் அமர்ந்திருக்க, தி.மு.க தலைவர் கலைஞர் உரையாற்றும்போது, ‘‘அன்னை இந்திராவின் மருமகளே, தியாகத்தின் திருவிளக்கே, பிரதமர் பதவியை ஏற்றிடுக’’ என்று குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில்தான் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டுமென்று ஸ்டாலின் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டதன் மூலம் மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 283 இடங்களில் வெற்றிபெற்று அசுர பலத்தோடு ஆட்சி அமைத்த மோடியை வீழ்த்த முடியுமா? அத்தகைய ஆற்றல் ராகுல் காந்திக்கு இருக்கிறதா என்று விவாதப் பொருளாக ஆக்கப்பட்ட நிலையில், அதைத் தகர்க்கிற வகையில் இத்தகைய அறிவிப்பைச் செய்திருக்கிறார். இதன்மூலம் ராகுல் காந்தி பிரதமர் ஆவதை மற்ற எதிர்க்கட்சிகளும் ஏற்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பால், தேசிய அரசியல் களம் தயார் செய்யப்பட்டுவிட்டது. 2004 தேர்தலைப்போலவே, ‘நாற்பதும் நமதே' என்கிற இலக்குக்கான அரசியல் வியூகத்தை ஸ்டாலின் வகுத்துள்ளார். தமிழக அரசியல் நிலவரத்தைப் பார்க்கிறபோது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பாதையில் பீடுநடை போட ஆரம்பித்துவிட்டது. ஆனால், பி.ஜே.பி-யோடு கூட்டணி சேர்ந்தால், படுதோல்வி அடைகிற சூழல் இன்றைக்கு உருவாகியுள்ளது.

அதேநேரத்தில் தமிழகத்தை ஆளுகிற அ.தி.மு.க., தனது மடியிலிருக்கும் தாங்க முடியாத கனத்தின் காரணமாக மத்திய பி.ஜே.பி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நரேந்திர மோடிக்கு அஞ்சி நடுங்கித்தான் எடப்பாடி ஆட்சி நடந்துவருகிறது. நரேந்திர மோடி நினைத்தால், மறுநாளே எடப்பாடி ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லாத நிலைதான் இன்றைக்கு இருந்து வருகிறது. இந்நிலையில்கூட, தமிழக பி.ஜே.பி-யோடு கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க கட்சியால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியவில்லை. அப்படி ஆதரவு தெரிவித்தால், தங்களது வெற்றியைப் பாதிக்கும் என்று அ.தி.மு.க கருதுகிறது. இதுதான் தமிழக அரசியலின் எதார்த்த கள நிலவரம்.

தற்போது உருவாகியுள்ள கூட்டணியால், பிரதமராக ராகுல் காந்தியும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றியால், தமிழக முதல்வராக ஸ்டாலினும் பொறுப்பேற்று, இணைந்து செயல்படும் சூழல் உருவாகும். அப்போது, மீண்டும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான வாய்ப்பு, ஒளிமயமாக அமையும்.

தொகுப்பு : த.கதிரவன்
- ஓவியம்: ஹாசிப்கான்