அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”

ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”

இரா.கண்ணன், ஐக்கிய நாடுகளின் சோமாலியா ஹிர்ஷபெல்லே அலுவலகத் துணைத்தலைவர்

ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”

‘மோடியா... இந்த லேடியா?’ என்று 2014-ல் சவால் விட்டு வெற்றிபெற்றவர் ஜெயலலிதா. இன்று அவர் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால்..? ஜெயலலிதாவின் ஆளுமையும், அரசியல் சாதுர்யமும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்நாட்டுக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஒரு தமிழர் - தமிழச்சி துணைப் பிரதமராக வலம் வந்திருக்கலாம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலை மறந்து விடலாம். தமிழகத்தில் அவர் இருக்கையில் தோல்பாவையாய் இருந்தவர்கள் இன்று அவர் விட்டுச்சென்ற ஆட்சியை நடத்தும் விதத்தைப் பார்க்கையில், ‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய்யக் கருதி இருக்கிறாயடா?’ என்று பாரதி கேட்டது போலவே கேட்கத்தான் தோன்றுகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால், இந்த நிலைக்குத் தமிழ்நாடு தாழ்ந்திருக்குமா? அவர் பெயரால் ஆட்சி நடத்தும் பழனிசாமியும், பன்னீர் செல்வமும் மோடியா, லேடியா என்பதற்கு மோடியே என்று பதிலுரைத்து, ஜெயலலிதா பாடுபட்டுக் கட்டிக்காத்த கட்சியைப் பதவிக்காக பி.ஜே.பி-யிடம் அடகு வைத்து விட்டனர். இன்று அ.தி.மு.க., தமிழக பி.ஜே.பி-யின் நீட்சியாய் மாறிப்போயிருக்கும் அவலத்தைக் காணச் சகிக்கவில்லை.

ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”

அ.தி.மு.க பிளவுபட பி.ஜே.பி-க்குக் கிட்டியது, பஞ்சாயத்து செய்யும் யோகம். அம்மா இல்லாத அ.தி.மு.க பூனைகளுக்கு அப்பம் பகிர்ந்து தந்த குரங்காய் மாறியிருப்பதில் பி.ஜே.பி-க்கு ஏக மகிழ்ச்சி. பிரதமர் மோடி, ‘பன்னீர் - பழனிசாமி இணைப்பால் தமிழ்நாடு புதிய உயரங்களைத் தொடும்’ என்றார்.  அவர்கள் தொட்டார்களோ இல்லையோ... அந்தக் கட்சியைக் கபளிகரம் செய்வதில் நிச்சயம் உயரம் தொட்டுவிட்டது பி.ஜே.பி. இன்னொரு பக்கம் வீரம் பேசும் தினகரனும், மோடியின் கண்ணசைவுக் காகவே காத்திருக்கிறார். தமிழ்நாட்டில் நோட்டாவுக்கும் கீழே இருக்கும் பி.ஜே.பி-க்குச் சவாரி செய்ய ஏதுவாய் அ.தி.மு.க-வை மாற்றிய பெருமை இவர்களையே சேரும். கட்சியைக் காப்பாற்ற ‘அம்மா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார்’ என்று பொய் சொன்னோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்; மன்னிப்பும் கேட்டார். காய்ச்சலுக்காக அப்போலோ சென்ற தங்கள் தலைவியையே காப்பாற்ற முடியாதவர்கள், தங்கள் கட்சியை... தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்கள்?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே இவர்கள் பி.ஜே.பி-க்கு மாறியிருந்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தலைமைச் செயலர் ராம மோகன ராவின் கோட்டை அலுவலகத்தில், ரிசர்வ் போலீஸார் துணையிருக்க வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தமிழகத் தின் மானத்தோடு, பெடரல் தத்துவத்தையும் தாரைவார்த்த பெருமை பன்னீர்செல்வத் தையே சேரும். தனது சுயமரியாதைக்காக அம்மா சமாதியில் புரட்சி செய்து இரு வார செய்தியானவர், குட்டிக்கதைகள் சொல்பவர், பழனிசாமி அரசைப் பற்றிச் சொன்னதை எல்லாம் பதவிக்காக மறந்து விட்டு அவரின் ஆட்சிக்காக வரிந்து கட்டுபவர்.... அன்று ‘கோட்டைக்குள் எப்படி வரலாம்’ என்று மத்திய ஏஜென்சி களைக் கேட்டாரா? இல்லை, கேட்கத்தான் முடியுமா? ஜெயலலிதா இல்லாத தமிழகம், இவர்களிடத்தில் எப்படி இருக்கும் என்பது அன்றே தெரிந்துவிட்டது. வெங்கய்ய நாயுடு, கோட்டையில் மெட்ரோ ரயில் கோப்புகளைப் பார்த்த சாதனையும் இந்த ஆட்சிக்கே சேரும்.

ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”

இவர்களின் ஒரே சாதனை ஜெயலலிதா இல்லாமல் இரு ஆண்டுகள் பதவியில் ஒ(ஓ)ட்டிக்கொண்டிருப்பதுதான்.   ஓர் உள்ளாட்சித் தேர்தலைகூடச் சந்திக்கும் திராணி இவர்களுக்கு இல்லை. உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட இவர்கள் படும் பாடும், நின்ற ஒரே இடைத்தேர்தலில் பணத்தை இறைத்தும் 40,000 வாக்குகள் குறைவாய் வாங்கியும்கூட... நித்தம் இவர்கள் பேசும் வீரமும், திரைக் காட்சியாய் இருந்தால் சிரித்துவிடலாம். ஆனால், தமிழ்நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் இவர்கள் கைகளில் மாட்டிச் சீரழிவதை எப்படி, ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று கொள்ள முடியும்? அம்மா தனியாய் நின்றதும், வென்றதும் நமது நினைவுக்கு வந்து தொண்டைக்குழியை அடைக்கிறது. எம்.ஜி.ஆரும் செய்து காட்டாத சாதனை அது!

மக்களும் இவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. கஜா புயல் பேரழிவுக்குப்பின் ஆறுதல் சொன்ன அமைச்சர்களை மக்கள் ஊருக்குள்ளேயே வரவிடவில்லை. பேரழிவு நாள்களில் சொந்த ஊரில் விழாக்களில் ஆளுயர மாலைகளும் விருந்துகளுமாக களித்துக் கொண்டிருந்த முதல்வரோ, “ஏன் போக வில்லை?” என்று ஊடகங்கள் கேள்வி கேட்ட பின்பே சென்றார். அதையும்விடத் துயரம் மத்திய ஆய்வுக்குழு நடத்திய கண் துடைப்பு ஆய்வு. 15,000 கோடி ரூபாய் கேட்டால் இதுவரை கிடைத்திருப்பதோ வெறும் 353 கோடி ரூபாய் மட்டுமே. ஒகி புயல், 2016-17 வறட்சி என்று இவர்கள் மத்திய அரசிடமிருந்து பெற்றது சொற்பம். இவர்களின் ஒரே லட்சியம் பதவிக்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்வது. அதில் இவர்களை அடிக்க ஆளில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால்?

ஆளுநர் ஆய்வுக்குச் செல்வதும் அதற்கு அமைச்சர்கள் சப்பைக்கட்டுவதும், அமைச்சரவை பரிந்துரையைத் தள்ளி விட்டுப் பல்கலைக்க ழகங்களுக்கு ஆளுநரே துணைவேந்தர்களை நியமிப்பதும், அதுவும் தமிழகத்தில் போதிய திறமை இல்லை என்பதுபோல் கர்நாடகத்தில் இருந்து ஒருவரைக் கொண்டு வருவதும், அதற்கும் இவர்கள் வாய் மூடி, மெய் பொத்தி இருப்பதும் - வெட்கம்! அம்மா எதிர்த்த நீட், உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி., உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய அனைத்துக்கும் இவர்கள் ‘ஆமாம்’ போட்டு பி.ஜே.பி-க்கு நல்ல பிள்ளைகளாகிவிட்டனர். சேலம் எட்டு வழிச்சாலைக்கு அனுமதி தந்த பிரகஸ்பதிகளும் இவர்களே. தி.மு.க., முதல்வர்மீது நான்கு ஊழல் குற்றச்சாட்டு களைத் தந்திருக்கிறது; உயர் நீதிமன்றம், ‘ஏன் முதல்வர் குற்றப்பத்திரிகையில் இல்லை’ என்று கேள்வி எழுப்புகிறது.

ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”

ஜெயலலிதாவிடமிருந்து இவர்கள் என்னதான் கற்றுக்கொண்டார்கள்? ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேரைக் கொன்று விட்டுச் சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்துவிட்டனர் என்று கல்மனதோடு காரணம் சொன்னவர்கள் இவர்கள். ஜல்லிக் கட்டில் கடைசி நாட்களில் டெல்லியைத் திருப்திப்படுத்த மாணவர்களைப் போலீஸை விட்டு வேட்டை யாடியவர்கள் இவர்கள். மேக்கேதாட்டூ அணைக்குச் சரி என்று சொல்லிவிட்டு இன்று, ‘இல்லை அப்படிச் சொல்லவில்லை’ என்பவர்கள் இவர்கள். முல்லை பெரியாறு, மீத்தேன், நெடுவாசல், ஈழத்தமிழர்கள் என்று எதற்கும் வாய் திறப்பதில்லை இவர்கள். இவ்வளவு ஏன்?  18 நவம்பர் 2017 அன்று ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை போட்டபோதும் வாய் திறக்காத விசுவாசிகள். டெல்லி பால் அச்சம்...  பதவிமீது பற்று. மாறாக இவற்றுக்காகப் போராடுவோரைச் சிறை வைக்கும் வீரம் படைத்தவர்கள். ‘சர்கார்’ படத்துக்கு இவர்கள் காட்டிய எதிர்ப்பில், லட்சத்தில் ஒரு பங்கை தமிழகத்தின் நலனுக்காகக் காட்டலாம்.

இவர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் புதிய பெரிய தொழில் முதலீடுகள் இதுவரை இல்லை. தெலங்கானாபோல், ஆந்திரம்போல், ஏன் ஜெயலலிதாவின் முதல் ஆட்சியின்போது அவர் உண்டாக்கிய தொழில் முதலீடுபோல் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா இல்லாத தமிழ்நாடு, அநாதையாய் நிற்கிறது. ஜெயலலிதா ஒரு திறமையான பொம்மலாட்டக்காரர். அவரிடத்தில் அசாத்திய ஆளுமை, அதிகாரம், ஆணவம், தவறு, அறிவு, போராட்டக்குணம் எல்லாம் கலந்திருந்தது. அவரைப்போல் ஒரு பெண் தலைமையை தமிழ்நாடு கண்டதில்லை. இந்தத் தோல் பாவைகளை, தோல்விப் பாவைகளை வைத்துத்தான் அவர் தமிழ்நாட்டை ஆண்டுவந்தார் என்று நினைக்கையில் ஜெயலலிதாமீது பரிதாபமே மிஞ்சுகிறது!

- ஓவியம்: பிரேம் டாவின்ஸி