Published:Updated:

கலைஞர் இன்று இருந்திருந்தால்...

கலைஞர் இன்று இருந்திருந்தால்...
பிரீமியம் ஸ்டோரி
கலைஞர் இன்று இருந்திருந்தால்...

சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை

கலைஞர் இன்று இருந்திருந்தால்...

சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை

Published:Updated:
கலைஞர் இன்று இருந்திருந்தால்...
பிரீமியம் ஸ்டோரி
கலைஞர் இன்று இருந்திருந்தால்...
கலைஞர் இன்று இருந்திருந்தால்...

மிழ்நாட்டில் இன்று ஆட்சி நடக்கிறதா, நடந்தால் யாருடைய ஆட்சியாக நடக்கிறது என்னும் ஐயம் இங்கு அரசியல் அறிந்த அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் தன் எல்லைகளை மீறி, சோதனைகளை நடத்துகிறார். ஆட்சியையே சிலவேளைகளில் அவர் மூலம் மத்திய அரசுதான் நடத்துகிறதோ என்ற எண்ணம் எழுகின்றது. தலைவர் கலைஞர் இன்று இருந்திருந்தால், எந்த ஆளுநருக்காவது இந்தத் துணிச்சல் வந்திருக்குமா?

1969-ம் ஆண்டு மார்ச் மாதம், மேற்கு வங்கத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த மாநில ஆளுநர் தர்மவீரா, தன் உரையில், மத்திய அரசை விமர்சனம் செய்து எழுதப்பட்ட வரிகளைப் படிக்க மறுத்து, படிக்காமலே விட்டுவிட்டார். ஆளுநர் உரை என்பது அந்த மாநில அரசின் உரைதான். அதைப் படிப்பது மட்டும்தான் அவரது வேலை. அந்த அறிக்கையில் உள்ளவற்றைத் தணிக்கை செய்ய அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை அந்த மாநிலத்தின் பிரச்னை என்று கருதாமல், நாடாளுமன்றத்தில், தி.மு.கழக உறுப்பினர் செ.கந்தப்பன் கடுமையான கண்டனத்தை முன்வைத்தார். “மத்திய அரசின் ஒற்றர்களைப்போல ஆளுநர்கள் நடந்துகொள்ளக் கூடாது. ஏதோ தாம் மட்டுமே தேச பக்தர்கள் என்று ஆளுநர்கள் கருதிக்கொள்ளக் கூடாது” என்று கலைஞரின் கருத்தை அங்கு அவர் எதிரொலித்தார். அதிர்ந்தது நாடாளுமன்றம். ஒளிர்ந்தது மாநிலங்களின் சுயாட்சி.

கலைஞர் இன்று இருந்திருந்தால்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கோ நடந்த ஒன்றுக்கே இங்கு பொங்கி எழுந்தவர் கலைஞர். ஆனால், இன்று தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசோ, எது நடந்தாலும் அது யாருக்கோ நடக்கிறது என்பதுபோல இருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் நடக்கும் திறனை இழப்பதற்கு முன்பு, எங்கேனும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழுமானால், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, சேறு சகதியில் நடந்து போய், மக்களைச் சந்திப்பார். வீடுதோறும் சென்று ஆறுதல் கூறுவார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டியனவற்றை செய்து முடிப்பார். அந்தக் காட்சிகள் பல, இன்றும் கலைஞர் கருவூலத்தில் படங்களாக  உள்ளன. ஆனால் கஜா புயல் வீசி, தஞ்சைத் தரணியைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட பிறகும், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், பல நாள்கள் வேட்டி மடிப்புக்  குலையாமல், தலைமைச் செயலகத்திலேயே ‘கொலு வீற்றிருந்த’ காட்சியை இந்த நாடு பார்த்தது. 2015 டிசம்பரில் வெள்ளம் சென்னையைக் கலைத்துப்போட்ட நாள்களிலும், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, பொருள்களையும் வழங்கிய காட்சியை நாம் அனைவரும் அறிவோம்.

வறட்சி நிவாரண நிதியைக்கூட, உரிமையைவிட்டுக் கொடுக்காமல் கேட்டுப் பெற்றதில் கலைஞருக்குத் தனி இடம் உண்டு. நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் ஒருமுறை, “இதுவரையில் கொடுத்த பணத்துக்குக் கணக்குக் காட்டிவிட்டுத்தான், மாநில அரசு மத்திய அரசிடம் மறுபடியும் பணம் கேட்க வேண்டும்” என்று தமிழகத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். இது 1972-ல் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர், “நீங்கள் எஜமானர்களோ, நாங்கள் அடிமைகளோ இல்லை. நாங்கள் வாங்கிய பணம் நாட்டுக்காகத்தான். வேண்டுமெனில், அரசு செலவு விவரத்தை எழுத்து மூலம் எழுதிக் கேளுங்கள். நடுத்தெருவில் நின்று இப்படிப் பேசுவது நாகரிகமில்லை” என்று அழுத்தமாக விடை அளித்தார். இன்று இப்படிப் பேச நம் தமிழக முதல்வருக்கு நா அசையுமா?

கலைஞர் இன்று இருந்திருந்தால்...

கண்ணில் அடிபட்டு மருத்துவமனையிலே இருந்தபோதும், தொழிலாளர் பிரச்னையில் தலையிட்டுத் தீர்த்து வைத்தவர் கலைஞர். 1970 மே முதல் வாரத்தில், நெய்வேலியில் பணியாற்றும் 16,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்துக்கும் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, போராட்டம் வலுப்பெற்றது. தடியடி, துப்பாக்கிச் சூடு வரையில் போய்விட்டது. மறுநாள், கண்வலி என்றுகூட பாராமல் மருத்துவமனையிலேயே அமைச்சர்களைக் கூட்டிக் கலந்துரையாடினார் கலைஞர். அமைச்சர்கள் நாவலர், என்.வி.நடராசன், ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோருடன் பேசினார். அதன்பிறகு, தொழிற்சங்கத் தலைவர்கள், காட்டூர் கோபால், அனந்தன் நம்பியார் ஆகியோருடன் விரைந்து சென்று அமைச்சர்கள் பேசினர். மே மாதம் 6-ம் தேதியே சிக்கல் தீர்ந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். இன்று தொழிலாளர்களைப் பார்க்கக்கூட அமைச்சர்கள் முன்வருவதில்லை. 
இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும் - எதனைச் செய்தாலும், எல்லாம் அரசியல், எல்லாம் தேர்தலில் வாக்குகளைப்  பெறுவதற்குத்தான் என்று சொல்கிறவர்கள் உண்டு. 2009-ம் ஆண்டு அவர் முதல்வராக இருந்தபோது, பல வாரியங்களை அமைத்தார், அவற்றுள் ஒன்று, புதிரை வண்ணார் நல வாரியம் என்பது. சமூகத்திலேயே மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட அவர்களையும் மறக்காமல் நினைவில்கொண்டு வாரியம் அமைத்த கலைஞரின் தாயுள்ளம் இதுதான். இதனால் வாக்கு வாங்கி அரசியலில் எந்தப் பயனும் இல்லை. மனித நேயமும் சமூக அக்கறையும்தான் இவ்வாறு கலைஞர் செயல்படக்  காரணமாயிருந்தன. 

கலைஞர் இன்று இருந்திருந்தால்...

தலைவர் கலைஞர் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ நன்மைகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்திருப்பார். ஆனாலும் என்ன, காத்திருப்போம், இன்றையக் கழகத்தின் தலைவர் தளபதி விரைவில் ஆட்சிப் பொறுப்புக்கு வருவார். இன்னொரு கலைஞராய் இந்நாட்டுக்கு நன்மைகளைச் செய்திடுவார்!

- ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism