அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...

மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர், தி.மு.க.

மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...

‘மாநில சுயாட்சி வேண்டும்’ என்ற உரத்த குரல் தமிழகத்தில் இருந்தே முதலில் ஒலித்தது. நாடு சுதந்திரம் அடைந்தபோதே இதற்கான குரல் எழுந்தது. அண்ணா தன்னுடைய காஞ்சி பொங்கல் மலரிலேயே, ‘மாநில சுயாட்சி’ என்ற தனது ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார். தினமணி ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் 1940-ஆம் ஆண்டு இறுதியில் எழுதிய, ‘மாகாண சுயாட்சி’ என்ற நூலை தினமணி நாளிதழே வெளியிட்டது. ம.பொ.சி-யும், ‘ஏன் மாநில சுயாட்சி?’ என்ற தலைப்பில் நூல் எழுதினார். 1969-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர், மாநில சுயாட்சி குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தர ஒரு குழுவை அமைத்தார். அன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி.ராஜமன்னார், ஆந்திராவின் சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.எல்.முதலியார் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர். அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர், இந்தக் குழு பற்றிய அறிவிப்பை டெல்லியில் பத்திரிகையாளர் மத்தியிலேயே தெரிவித்தார். அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். இதுகுறித்து அப்போது டெல்லி பத்திரிகைகள் எல்லாம் பெரிய செய்திகளாகவும் தலையங்க விவாதங்களாகவும் வெளியிட்டன.

மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...

கலைஞர் தலைமைச் செயலகத்தைப் பழுது பார்க்க முனைந்தபோது அதற்குரிய அனுமதியை மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டுமென்றும் தமிழகத்தின் முதலமைச்சராகவே இருந்தாலும் தன்னுடைய விருப்பத்துக்கேற்றவாறு தலைமைச் செயலகத்தில் எந்தச் சீர்திருத்தப் பணிகளையும் செய்யமுடியாது என்றும் தெரிவித்தனர். முதலமைச்சராக இருந்தும் மத்திய அரசின் அதிகாரக் குவியல் என்ற நிலையில்தான் இந்தச் சிக்கல் என்று உணரத் தொடங்கினார் கலைஞர். அந்தத் தாக்கமே மாநில சுயாட்சி என்ற கோரிக்கையாகும். இதனால்தான் ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. மத்திய – மாநில உறவுகளும் அதனிடையிலான அதிகாரப் பகிர்வு குறித்தும் ஆராயப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் இதுகுறித்தான கருத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடமும் கேட்டு ஓர் அற்புதமான அறிக்கையை 27/05/1971-இல் கலைஞரிடம் அந்தக் குழுவினர் வழங்கினர். 383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும். மத்திய – மாநில பிரச்னைகள் எழும்போதெல்லாம் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுசொல்லும் ஒரு மகா சாசனமாக (Magna Carta) உள்ளது.

ராஜமன்னார் குழுவின் சில பரிந்துரைகள் :

1. அரசியலமைப்புச் சட்டத்தின் 7-ஆவது இணைப்பிலுள்ள அதிகாரப் பட்டியல்களின் பொருளடக்கத்தை மாற்றியமைத்து மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கவேண்டும். இப்போது நீட் பிரச்னையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2. கார்ப்பரேஷன் வரி, ஏற்றுமதி தீர்வைகள், சுங்க வரிகள் போன்ற வரிகளின் பங்கும் பகிர்வும் மாநிலங்களுக்கு அதிகரித்து வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு வருவாயை அதிகப்படுத்த வேண்டும். வரி சீர்திருத்தம் வேண்டும் மாநிலங்களுக்கான நியாயமான நிவாரணங்கள், மானியங்கள் குறித்தான உரிமைகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் தாராளமாக வழங்க வேண்டும்.

3. ஆளுநர், மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெற்றே நியமிக்கப்பட வேண்டும்.

4. அவசர நிலை பற்றி முடிவெடுக்கும்போது, அந்த நெருக்கடி கால அறிவிப்பைப் பிரகடனப்படுத்தும்போது மாநிலங்களின் இடையேயுள்ள உறவு கவுன்சிலிடம் (Inter State Council) கலந்தாலோசித்து அறிவிக்கப்பட வேண்டும்.
5. நீதித்துறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது மாநில அரசு, ஆளுநர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் கருத்துகள் முக்கியமாகக் கருதப்பட வேண்டும்.

6. மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

7. மாநிலங்களிடையே உள்ள நீர் தகராறுகளை உச்ச நீதிமன்றம் முடிவுசெய்து அதன் ஆணைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

8. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால், மாநிலங்களில் மூன்றில் இருபங்கு மாநில சட்டமன்றங்கள் அதை ஏற்க வேண்டும்.

மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...

இப்படி மைய அரசு நிர்வாகம் மற்றும் மாநிலங்களுடைய நீர் பகிர்வு, பொது ஒழுங்கு, வணிகம், மொழி, பொது ஊழியங்கள் பற்றிய பல்வேறு பரிந்துரைகளை ராஜமன்னார் குழு அளித்தது. தமிழக சட்டமன்றத்திலும் இது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதை இரா.செழியன், முரசொலி மாறன் ஆகியோர் இடம்பெற்ற குழு ஆய்வு நடத்தியது. அதன்பின்னர் அன்றைய தி.மு.க அரசு, இதனை மத்திய அரசுக்கும் அனுப்பியது. இதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் இந்திரா காந்தி, ‘இதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் பதில் கடிதம் அனுப்பினார். 1984-ஆம் ஆண்டு வாக்கில், நீதிபதி சர்க்காரியா தலைமையில், மத்திய – மாநில உறவுகளை ஆராயக் குழு அமைக்கப்பட்டது. அதற்கு அடிப்படை காரணமே கலைஞர் அமைத்த ராஜமன்னார் குழுவே ஆகும். சர்க்காரியா குழுவும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதி சர்க்காரியா குழு இரண்டு தொகுதிகள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அப்போது அளித்தது. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்னையில் 1980-களில் திம்பு பேச்சுவார்த்தைக்கும் இந்த ராஜமன்னார் குழுவின் அறிக்கை அடிப்படை ஆவணமாகத் திகழ்ந்தது. அன்றைக்கு, இந்த அறிக்கையின் நகலை அமிர்தலிங்கத்துக்கும் பாலசிங்கத்துக்கும் எடுத்துக் கொடுத்தேன்.

ராஜமன்னார் குழுவின் அறிக்கை வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் என்.டி.ராமாராவ் ஹைதராபாத்தில் மாநில உரிமைகள் குறித்து நடத்திய மாநாடும், அம்மாதிரியே அசாம் கன பரிஷத் ஷில்லாங்கில் நடத்திய மாநாடும், அதற்குப் பிறகு ஶ்ரீநகரில் ஃபரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டிலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது வெளியுறவு, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, நிதி போன்ற துறைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டு மற்ற அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானங்கள். பின்னர் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு அரசும் ராஜமன்னார் குழுவின் அடிப்படையில், ‘மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையை அனுப்பியது. அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, இதுகுறித்து பேசுவதற்காக பெங்களூருவில் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டினார். இந்த நிகழ்வுகள் யாவும் கலைஞருடைய தொலைநோக்குப் பார்வையில் ஏற்பட்ட விளைவுகளே ஆகும்.

மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...

மாநில நலன் கருதி, மாநில திட்டக் குழு, நுகர்பொருள் வாணிபக் கழகம் எனச் சில சுயாட்சி அமைப்புகளைத் தன் ஆட்சிக் காலத்தில் முன் மாதிரியாக அமைத்தார் கலைஞர். மேலும், அமெரிக்காவில், சுவிட்சர்லாந்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி இருப்பதைப் போன்று இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இது ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவானது.

ஆனால், ‘மாநிலங்களுக்குத் தனிக்கொடி அவசியமில்லை’ என்று ஸ்தாபன காங்கிரஸும், அன்றைய ஜன சங்கமும் (இன்றைய பி.ஜே.பி.) எதிர்த்தது. அவர்கள் இதுகுறித்து சொன்னபோது, ‘ஒருவேளை கம்யூனிஸ்ட்கள் மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அரிவாள், சுத்தியல் சின்னங்கள் அடங்கிய சீன, ரஷ்ய கொடிகளை இங்குக் கொண்டு வந்துவிடுவார்கள்’ என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில், 27/08/1970-ஆம் ஆண்டு டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன் ‘தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும்...’ என்று தான் வடிவமைத்த படத்தை வெளியிட்டார் கலைஞர். அந்தப் படத்தில் தேசியக்கொடி மேல் பக்கத்திலும், தமிழக அரசின் சின்னமான வட்டவடிவம் கொண்ட கோபுர முத்திரையை வலது பக்கத்தின் கீழ்முனையிலும் வடிவமைத்து வெளியிட்டார். இப்பிரச்னையில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில், ‘அந்தந்த மாநில முதல்வர்கள் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார் கலைஞர். இந்தக் கோரிக்கையைப் பிரதமர் இந்திரா ஏற்றுக்கொண்டார். இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டிலேயே கலைஞர் போராடிப் பெற்றார். இந்தியா – பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக நிதி திரட்டி கொடுத்தவர் கலைஞர் என்பது வரலாற்றுச் செய்தியாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற கார்கில் போரின்போதும் கலைஞர் நிதி திரட்டி அனுப்பினார். பிரதமர் வாஜ்பாயும் இதைப் பாராட்டினார். தேசியப் பார்வையோடு தமிழகத்தின் நலனையும் உரிமைகளையும் பெற்றதற்கு, கலைஞரின் மாபெரும் அரசியல் தத்துவமே காரணம்!