Published:Updated:

முதலில் தினகரன்... இப்போது ஈஸ்வரன்... - `கொங்கு' மண்டலத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் !

முதலில் தினகரன்... இப்போது ஈஸ்வரன்... - `கொங்கு' மண்டலத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் !
முதலில் தினகரன்... இப்போது ஈஸ்வரன்... - `கொங்கு' மண்டலத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் !

அ.தி.மு.க. ஆட்சி தற்போது நிலைத்திருப்பதற்கும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பதற்கும் முக்கியக் காரணம் கொங்கு மண்டலம்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இந்த நிலையில், சீனியர் அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி என அ.தி.மு.க வலிமையாக உள்ள தொகுதிகளில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் மீது அதிருப்தியில் உள்ளவர்களை ஒன்றிணைத்து கொங்கு மண்டலத்தில் பலம் பெற வேண்டும் என்று சுற்றிக்கொண்டிருக்கிறார் அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.

கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் டி.டி.வி.தினகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுடன் இருந்தவர்களின் மனநிலையும், இப்போதிருப்பவர்களின் மனநிலையும் முற்றிலும் வேறு. தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் `தம்பி’ என்று பாசத்தோடு அழைக்கும் அளவுக்கிருந்த செந்தில்பாலாஜியின் தி.மு.க தாவலே, அ.ம.மு.க-வினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இது, அணியில் உள்ள மற்ற எம்.எல்.ஏ-க்கள் இடையே கலக்கத்தையும் உண்டாக்கியது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கடந்த ஜனவரி மாதம் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 'எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள்' விழாவைப் பிரமாண்டமாக நடத்தி முடித்தனர் அ.ம.மு.க-வினர். அப்போது பேசிய தினகரன், ``விரைவில் 21 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலும் வர உள்ளன. இந்தத் தேர்தலில், இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு டெபாசிட்கூட கிடைக்காது. ஓட்டுக்கு எத்தனை ஆயிரம் பணம் கொடுத்தாலும் மக்கள் இவர்களிடம் ஏமாற மாட்டார்கள். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., இதுவரைக்கும் தோல்வியைச் சந்தித்ததே இல்லை. ஆனால், இப்போது அந்தக் கட்சியின் நிலை என்னவென்பதை மக்கள் அறிவார்கள்.ஆர்.கே.நகரில் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். திருவாரூரில் தேர்தல் நடந்திருந்தால், அ.ம.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும். இனி, எப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க-தான் வெற்றிபெறும்.

அ.தி.மு.க டெபாசிட் இழக்கும். அரசியலில் எத்தனையோ துரோகங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட துரோகத்தைப் பார்த்ததில்லை. இப்போதுள்ள அமைச்சர்கள் சிலர் பேசுவது, ஆயுள்காலம் முழுவதும் அமைச்சர்களாக இருப்பதுபோல் எண்ணிக்கொள்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லை என்ற தைரியத்தில், அமைச்சர்கள் சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் எனப் பேசுகின்றனர். இதற்கெல்லாம் வருகிற ஏப்ரல், மே மாதத் தேர்தலில் பதில் சொல்லியாக வேண்டும். அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் இப்போதைய ஆட்சியாளர்கள், அ.ம.மு.க என்று சொன்னாலே அச்சப்படுகின்றனர். இவர்கள்தாம் இப்படியென்றால், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பின் எங்களைப் பார்த்து அஞ்சுகிறது" என ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் சேர்த்து விளாசித் தள்ளி, தன்னுடைய நாடாளுமன்றப் பிரசாரத்தைத் தொடங்கினார்.

கொங்கு மண்டலத்தில் தன்னுடைய அஸ்திவாரத்தை மெள்ளமெள்ள பலப்படுத்திவருகிறார், டி.டி.வி.தினகரன். இந்த நிலையில், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, `இரண்டாவது உலக கொங்கு தமிழர் மாநாடு' வரும் பிப்ரவரி 3-ம் நாள் (நாளை) நாமக்கல்லில் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக இந்த மாநாடு நடப்பதாகக் கூறுகிறார்கள். சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை எனக் கொங்கு மண்டலம் முழுவதும் போஸ்டர் மற்றும் பேனர்களை வைத்து மாஸ் காட்டியிருக்கிறார்கள் கொங்கு சொந்தங்கள். இந்த மாநாட்டை மிகப் பிரமாண்ட முறையில் நடத்தி, தமிழக அளவில் உள்ள கட்சிகளிடத்தில் தன்னுடைய செல்வாக்கை, பலத்தைக் காட்டுவதற்கே இந்த மாநாடாம்.