அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்! - வெடிக்கிறார் வன்னியரசு...

அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்! - வெடிக்கிறார் வன்னியரசு...
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்! - வெடிக்கிறார் வன்னியரசு...

அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்! - வெடிக்கிறார் வன்னியரசு...

‘‘ ‘வன்முறை முகம் கொண்ட தீயசக்தி’ என ஜெயலலிதா அடையாளம் காட்டிய ராமதாஸைக் கூட்டணியில் சேர்த்து, ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துவிட்டது அ.தி.மு.க” என்ற கடும் விமர்சனத்தை முன்வைக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. இதோ அவரது சுருக்கமான பேட்டி...

அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்! - வெடிக்கிறார் வன்னியரசு...

“அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி பற்றி...”

“பா.ம.க-வைப் பற்றி ஜெயலலிதா எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தார் என்பது அனைவரும் அறிந்தது. வாக்குக்காகத் தன் சொந்தச் சமூகத்தையே ஏமாற்றக்கூடிய கட்சி பா.ம.க. ஜெயலலிதாவை மிகக்கடுமையாக ஒருமையில் விமர்சித்தவர் ராமதாஸ். அதனால் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, ‘பா.ம.க வன்முறைக் கட்சி’ என்று குறிப்பிட்டார். சாதி வன்மத்தைத் தூண்டி, அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர் ராமதாஸ். 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்களின்போது, ராமதாஸ், அன்புமணி இருவரும் திராவிடக் கட்சிகளைப் பற்றிப் பேசியதை எல்லாம் மறக்க முடியுமா? இப்போதுள்ள ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது என்று கவர்னரிடம் மனுக் கொடுத்தவர் அன்புமணி. அதற்கு மாறாக, இப்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ளனர். எப்போதுமே, சொன்ன சொல்லைக் காப்பாற்றும் பழக்கம் இல்லாதவர் ராமதாஸ்.”

“கொள்கையில் தேக்கு மரமாகவும், கூட்டணியில் நாணலாகவும் பா.ம.க இருப்பதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளாரே?”

“பா.ம.க-வுக்கும் கொள்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் ‘தேக்கு மரம்’ என்று சொல்லும்போதுகூட அவரது சிந்தனை ‘மரம்’ பற்றியே இருக்கிறது. மரத்தை வெட்டி அரசியல் செய்தவர், அதைப்பற்றிதானே பேசுவார். ராமதாஸின் ஒரே கொள்கை, அதிகாரத்தில் இருக்க வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே. இன்று சனாதனக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். ராமதாஸின் கொள்கையும் அதுதான்.”

“அ.தி.மு.க அணியில் பா.ம.க இணைத்திருப்பதால், வட மாவட்டங்களில்  அ.தி.மு.க கூட்டணிக்குச் செல்வாக்கு அதிகரித்துள்ளதா?”

“வட மாவட்டங்களைப் பொறுத்தவரை, தன் சொந்தச் சமூகத்திடமிருந்தே பா.ம.க அந்நியப்பட்டுவிட்டது. பா.ம.க-வுக்கு எதிராக அந்தக் கட்சியிலிருந்து பலரும் வெளியேறியுள்ளனர். குருவின் குடும்பமே ராமதாஸுக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டுள்ளது. தன்னை நம்பியவர்களுக்குத் துரோகம் செய்வதுதான் ராமதாஸின் தொழில். மண்குதிரையை நம்பி அ.தி.மு.க ஆற்றில் இறங்கியுள்ளது. அ.தி.மு.க அணி தோற்பதற்கு பா.ம.க-வே இப்போதைக்குப் போதும்.”

“கூட்டணியை அறிவிப்பதில் அ.தி.மு.க முந்திக்கொண்டுவிட்டதே?”

“‘கூட்டணியை யார் முதலில் அறிவிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எத்தகைய கூட்டணி என்பதுதான் முக்கியம். தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இணைந்த கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. மதவாதத்துக்கு எதிராக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியோ, சந்தர்ப்பவாத அணி மட்டுமல்ல, பொருந்தாக் கூட்டணியும்கூட. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க அணி, களிமண்போல கரைந்துவிடும். பி.ஜே.பி மதவெறியைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது, பா.ம.க சாதிவெறியைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திராவிடத்துக்கான அடிப்படையை இழந்து நிற்கிறது அ.தி.மு.க.”

- அ.சையது அபுதாஹிர்,  படம்: ப.சரவணகுமார்