அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...

“குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
“குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...

“குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...

“நீலகிரி குருமூர்த்தி... தமிழக பி.ஜே.பி-யினரால் மறக்க முடியாத நபர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளராக மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட அவர், வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய கட்சியின் அங்கீகாரச் சான்றுகளைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால், நீலகிரியில்  போட்டியிடும் வாய்ப்பையே பி.ஜே.பி இழந்தது. ‘மாற்று கட்சிகளிடம் விலைபோய்விட்டார்; பி.ஜே.பி-க்குத் துரோகம் செய்துவிட்டார்’ என்ற குற்றச்சாட்டுகள் குருமூர்த்தி மீது பாய... அவரைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியது பி.ஜே.பி. ஆனால், குருமூர்த்தி அதற்கெல்லாம் அசரவில்லை. கிளம்பிய குற்றச்சாட்டுகளுக்கேற்ப, அ.தி.மு.க-வில் சரணாகதி அடைந்தார். இந்தத் தேர்தலில் நீலகிரி அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார் குருமூர்த்தி, என்கிறார்கள் நீலகிரி அ.தி.மு.க-வினர்.

“குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...

பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் குருமூர்த்தி குறித்து விசாரித்தோம். “குன்னூரை அடுத்து உள்ள அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. மொத்த விலைக்கு டீத்தூள் வாங்கி, சில்லறை விலைக்கு விற்பதுதான் ஆரம்பத்தில் அவரது தொழில். கட்டப்பஞ்சாயத்து, கொடுக்கல் வாங்கல் தகராறுகளில் ஈடுபட்டு, தன்னை வளர்த்துக்கொண்டார். 2004-ல் பி.ஜே.பி-யில் இணைந்தார். 2009-ல் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி, தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. குருமூர்த்திக்கு யோகம் அடித்தது. ஆதி கர்நாடக இனத்தைச் சேர்ந்த குருமூர்த்தி, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப்பெற்றார். ஆனால், தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 

2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் சீட் வாங்கினார். பி.ஜே.பி-க்கு நீலகிரியில் வெற்றிவாய்ப்புப் பிரகாசமாக இருந்தது. அதற்குக் காரணம், எதிர்க் கட்சி வேட்பாளர். அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாகத் தேசமெங்கும் பேசப்பட்ட 2 ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசாதான், அந்த வேட்பாளர்.

அவர் நின்றதால், நீலகிரியை நாடே உற்றுக் கவனித்தது. எப்படியாவது ஆ.ராசாவை வீழ்த்த வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டது. அ.தி.மு.க வேட்பாளரான சி.கோபாலகிருஷ்ணனை வெற்றிபெற வைக்க ஒரு பெரும் படையே வேலை செய்தது. இந்நிலையில்தான் வேட்புமனுவில் அங்கீகாரச் சான்றுகளை இணைக்காததால், குருமூர்த்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதை குருமூர்த்தியின் நாடகம் என்றும், அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. பின்பு விசாரணைக் குழு அமைத்து, அந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்து, கட்சியிலிருந்து குருமூர்த்தி நீக்கப்பட்டார்” என்றனர். 

மேலும் அவர்கள், “ராஜ்யசபா எம்.பி-யும் நீலகிரி அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமன கே.ஆர்.அர்ஜுனன் மூலமாக, 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார், குருமூர்த்தி. இப்போது அர்ஜுனனுக்கு இவர்தான் வலதுகரம். அ.தி.மு.க நீலகிரியில் போட்டியிட்டால், தனக்கு சீட் வேண்டும் என்று குருமூர்த்தி பணம் கட்டியிருக்கிறார். குரு உச்சத்தில் இருக்கிறார். சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்றனர்.

இதுகுறித்து விளக்கம் பெற குருமூர்த்தியின் தொடர்பு எண்ணுக்குப் பலமுறை அழைத்தும், “நான் மீட்டிங்கில் இருக்கிறேன்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார். அவர் பதில் அளிக்கும் பட்சத்தில், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: தி.விஜய்