அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...

விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...

இலையோடு மாம்பழம் இணைந்தது இப்படிதான்!

து 2009-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி. போயஸ் கார்டன். அன்றைய தினம் முதல்முறையாக ஜெயலலிதாவுடன் கூட்டணிக்காகக் கைகுலுக்கினார் ராமதாஸ். அப்போது, பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் ஏழு. பத்து ஆண்டுகள் கழித்து, வரலாறு திரும்பியிருக்கிறது. மீண்டும் அதே கூட்டணி. அதே எண்ணிக்கையிலான சீட் ஒதுக்கீடு. தலைமையும், இடமும் மட்டுமே மாற்றம்.

2016 சட்டமன்றத் தேர்தலில், 232 தொகுதிகளில் தனித்து நின்று, மாம்பழத்தின் பலத்தைப் பார்த்தார் ராமதாஸ். வெற்றி எட்டாக்கனியாகி விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு கழகங்களையும் கழுவிக்கழுவி ஊற்றினார். அ.தி.மு.க அரசின்மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அறிக்கைகளைத் தெறிக்கவிட்டார். ‘அ.தி.மு.க-வின் கதை’ என்று புத்தகம் போட்டு, எம்.ஜி.ஆர் முதல் இ.பி.எஸ் வரை எல்லோர்மீதும் வசைமாரி பொழிந்தார்.

ஆளும்கட்சியைக் கடுமையாக எதிர்த்துவந்த நிலையில், நியாயமாகப் பார்த்தால் தி.மு.க பக்கம்தான் பா.ம.க போயிருக்க வேண்டும். ஆனால், அதிரடித் திருப்பமாக டாக்டரை அ.தி.மு.க பக்கம் கொண்டுவந்ததன் பின்னணியில் மூன்று பேர் பிரதானமாக இருந்துள்ளார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

“கோவையில் பா.ம.க பொதுக்குழு முடிந்தவுடனேயே அ.தி.மு.க தரப்பிலிருந்து கூட்டணிக்காக, தைலாபுரத்துக்குத் தூது விடப்பட்டது. தூது சென்றவர் முதல்வருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன். தைலாபுரத்தில் ராமதாஸிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்த அவரிடம், எந்த உறுதியும் தைலாபுரம் தலைமை கொடுக்கவில்லை. அதே நேரம், அன்புமணி தி.மு.க கூட்டணியுடன் இணையலாம் என்று விருப்பப்பட்டார். அந்தத் தகவல் தி.மு.க வாரிசு தலைமைக்குத் தெரிந்து, அவர்கள் முதல் சுற்று பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். ஏழு தொகுதிகள் பா.ம.க கோரிக்கையாக இருந்தது. ஆனால், தி.மு.க தரப்பில் மூன்று தொகுதிகளுக்கு மேல் ஏறிவரவே இல்லை. தேர்தல் செலவுகள் குறித்த விஷயத்திலும் தி.மு.க தரப்பின் அணுகுமுறை பா.ம.க-வை அதிருப்தியாக்கியுள்ளது. அதன்பிறகே அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையை வேகப்படுத்தி யுள்ளார்கள். பா.ம.க தரப்பிலிருந்து முன்னாள் எம்.பி தன்ராஜ் அ.தி.மு.க-வுடன் பேச்சு வார்த்தையை முன்னெடுத்துச்சென்றுள்ளார்.

விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...

கொங்கு மண்டலத்தில் வலுவாக இருப்பதாக கருதும் அ.தி.மு.க., வட மாவட்டங்களைப் பற்றி கவலைகொள்கிறது. எனவே, வட மாவட்டங்களில் வலுவாக உள்ள பா.ம.க-வை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று பத்து நாள்களுக்கு முன்பே முடிவுசெய்துவிட்டது அ.தி.மு.க. அதன்படி, பா.ம.க-வின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் தயாரானார்கள். தைலாபுரத்தில் அ.தி.மு.க தரப்பில் வேலுமணி, தங்கமணி, இளங்கோவன் ஆகிய மூவரும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பா.ம.க கேட்ட தொகுதிகளுக்கும் அ.தி.மு.க சம்மதம் தெரிவித்தது. கிருஷ்ணகிரி தொகுதியை கோ.க.மணியின் மகனுக்கு ராமதாஸ் கேட்டுள்ளார். அதே தொகுதியை தே.மு.தி.க-வும் கேட்பதாக அ.தி.மு.க தரப்பில் கூறிய பிறகு மயிலாடுதுறையைக் கேட்டுள்ளது. மறுபுறம் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மூலமும் கிச்சன் கேபினட் பேச்சுவார்த்தை நடந்தது. 

அ.தி.மு.க தரப்புடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிய நேரத்தில், தி.மு.க கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் தரப்பிலிருந்து அன்புமணிக்கு அழுத்தம் வந்தது. அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத் மற்றும் மாமனார் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் பா.ம.க-வை எப்படியும் தி.மு.க கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடத் துடித்தனர். இருவரும் அன்புமணியை, அவரது சென்னை வீட்டில் சந்தித்து எப்படியும் அவரைக் கரைத்துவிடுவது என்று திட்டமிட்டனர். ஆனால், ராமதாஸுக்கு, தி.மு.க தரப்பு தங்களை மதிக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. சபரீசன், உதயநிதி போன்ற வாரிசுகளை வைத்துக் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதை அவர் ரசிக்கவில்லை. இதனால், ஒட்டுமொத்தமாக தி.மு.க கூட்டணிக்கு ராமதாஸ் மறுத்துவிட்டார்.

தைலாபுரத்தில் அ.தி.மு.க உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அதிகாரபூர்வ அறிவிப்பை சென்னையில் வைத்துக்கொள்ள முடிவானது. கூட்டணி முடிவுக்கு வந்த ராமதாஸ், பிப்ரவரி 17-ம் தேதி  தைலாபுரத்திலிருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தார். திங்கள்கிழமை கூட்டணி அறிவிப்பை வெளியிடலாம் என்று பா.ம.க தரப்பு நினைத்தது. இதற்காக ராமதாஸ் சென்னை வந்தார். அப்போதும், தி.மு.க கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விஷ்ணுபிரசாத் நேரடியாக ராமதாஸைச் சந்தித்தார். டெல்லியில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவருக்கு லைன் போட்டுக்கொடுத்து பேசவைத்துள்ளார். ராமதாஸோ, ‘‘எல்லாம் முடிவாகிவிட்டது. கையெழுத்துப்போட வேண்டியதுதான் பாக்கி” என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதன்பிறகு தி.மு.க தரப்பிலிருந்து ஒரு வி.ஐ.பி தொடர்புகொண்டு அவசரப்பட வேண்டாம், ஐந்து தொகுதிகள்வரை உங்களுக்குத் தருவதற்குத் தலைமை ஒப்புக் கொண்டுள்ளது என்று பேசியுள்ளார். அதற்கும் ராமதாஸ் தரப்பு பிடிகொடுக்கவில்லை.

தொடர்ந்து அன்புமணி வீட்டிலிருந்து, வேலுமணியைத் தொடர்புகொண்டு, ‘திங்கள் கிழமை கூட்டணி அறிவிப்பை வைக்கலாமா?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு, “செவ்வாய்க்கிழமை அன்று பௌர்ணமி நல்ல நாள். அம்மா பிறந்த நட்சத்திரமான மாசிமகம்” என சென்டிமென்டாக வேலுமணி பதில் சொல்லியுள்ளார். நிபந்தனைகள் குறித்து எப்போது பேசலாம் என்று கேட்க, திங்கள்கிழமை காலை அன்புமணி வீட்டுக்கு வந்துவிடுவதாக அ.தி.மு.க தரப்பில் பதில் சொல்லப்பட்டுள்ளது.

விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...

திங்கள் அன்று காலை அன்புமணி வீட்டுக்கு வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் வந்துள்ளார்கள். அவர்களிடம் ராமதாஸின் பத்து கோரிக்கைகள்கொண்ட பட்டியலைக் கொடுத்துள்ளனர். அதில் மதுவிலக்கு உள்ளிட்ட சில விஷயங்களைப் பார்த்து அதிர்ந்த அமைச்சர்கள், இதை இப்போது அமல்படுத்த முடியாது என்பதைத் தயக்கத்துடன் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். “நீங்கள் முதல்வரிடம் பேசிவிட்டு வாருங்கள்” என்று ராமதாஸ் சொல்லியுள்ளார். அவர்களும் கிளம்பிச்சென்று முதல்வரிடம் பேசிவிட்டு மீண்டும் அன்புமணி வீட்டுக்கு வந்துள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தை மதியம் மூன்று மணிவரை நடந்துள்ளது. அப்போதும் தி.மு.க தரப்பிலிருந்து ராமதாஸைத் தொடர்புகொண்டு, “அய்யாவைச் சந்திக்கத் தளபதி விரும்புகிறார். கூட்டணி இல்லை என்றாலும் பரவாயில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது இருக்கும்” என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், அதற்கும் ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை. மூன்று மணிக்கு அன்புமணி வீட்டிலிருந்து அமைச்சர்கள் கிளம்பிச்சென்று முதல்வர் வீட்டில் கண்டிஷன்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளனர். மீண்டும் இரவு எட்டு மணிக்கு அன்புமணி வீட்டில்  அ.தி.மு.க குழுவினர் ஆஜரானார்கள். ‘கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறோம், நாளை காலை அடையார் கிரவுன் பிளாசா ஹோட்டலில் வைத்து ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். பியூஸ் கோயலும் நாளை சென்னை வருகிறார்’ என்று சொல்லியதும், ராமதாஸ் கொஞ்சம் கோபமாகவே, “நாங்கள் பி.ஜே.பி முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் செய்ய முடியாது. எங்கள் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னதும், ஷாக்காகிவிட்டார்கள் அமைச்சர்கள். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தம் அப்போதே டைப் செய்யப்பட்டு ராமதாஸிடம் காட்டப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள்  சென்ற பிறகு இறுதி முயற்சியாக விஷ்ணு பிரசாத் மீண்டும் அன்புமணி வீட்டுக்கு வந்துள்ளார். அன்று அதிகாலைவரை அன்புமணி வீட்டிலேயே விஷ்ணுபிரசாத் இருந்தார். ஆனால், எந்த மாற்றமும் இல்லை என்று தெரிந்த பிறகே அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். மறுநாள் முதல்வரும், துணை முதல்வரும் ஹோட்டலுக்கு வந்த பிறகே ராமதாஸ் ஹோட்டலுக்குள் என்ட்ரி கொடுத்தார். அவரை வாயிலில் நின்றே முதல்வரும், துணை முதல்வரும் வரவேற்று அழைத்துச் சென்றனர். ராமதாஸிடம் முதல்வர் காட்டிய பவ்வியத்தைக் கண்டு பா.ம.க-வினரே அரண்டுவிட்டார்கள். கிங்மேக்கராக ராமதாஸ் மாறியதன் அறிகுறிதான் நடுநாயகமாக அவரை அமரவைத்து, கூட்டணி ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டதன் பின்னணி” என்கிறார்கள் பா.ம.க-வினர்.

விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...

கூட்டணி குறித்து அறிவிப்பு முறைப்படி அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வர் அழைப்பை ஏற்று அவரது இல்லத்துக்குச் சென்றார் ராமதாஸ். அங்கு தேநீர் அருந்திய பிறகு தைலாபுரத்துக்கு விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதல்வரும் உடனே மறுக்காமல் சரி என்று சொல்லிவிட்டார். கூட்டணி அறிவிப்புக்கு எதிர்விளைவுகள் இருக்கும் என்று தெரிந்தே, கூட்டணி எதற்கு என்ற நீண்ட விளக்கத்துடன் ஓர் அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார். “கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துவிட்டார் ராமதாஸ்!

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி தோல்வி அடையும்!

கூ
ட்டணி குறித்து பா.ம.க-வின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்? பா.ம.க-வின் முன்னாள் சேலம் மாவட்டச் செயலாளரும், எடப்பாடி தொகுதியின் முன்னாள்   எம்.எல்.ஏ-வுமான காவேரி, ‘‘பா.ம.க கொள்கையை விட்டுவிலகி வெகுகாலம் ஆகிவிட்டது. ‘நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். என் வாரிசுகள் அரசியலுக்கு வரமாட்டார்கள். வன்னியர் சமுதாயத்துக்காக உழைப்பேன்’ என்று ராமதாஸ் சத்தியம் செய்தார். ஆனால், 2006 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்று, அதே கூட்டணியில் இருந்துகொண்டே 2009 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தார். இது பா.ம.க அடிமட்ட தொண்டர்களின் மனநிலைக்கு மாறான கூட்டணி. மோடி அரசை விரும்பாத தமிழக மக்களும் இவர்களுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள். மொத்தத்தில், இக்கூட்டணி தோல்வி அடையும். தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும்’’ என்றார்.

விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...

பா.ம.க முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளரும், ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தமிழரசு, ‘‘பா.ம.க-வை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். தமிழகத்தில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தினர், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கிறார்கள் என்று, 35 வருடங்களுக்கு முன்பு சேர்ந்து உழைத்தேன். அக்கட்சியில் ஜனநாயம், நேர்மை, கருத்துரிமை, வெளிப்படைத்தன்மை கிடையாது. ராமதாஸ் மட்டுமே முடிவெடுப்பார். அன்புமணியின் கருத்தைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்’’ என்றார்.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்