அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

“ஒரு சினிமா நடிகை இவ்வளவு சீரிய உரையை ஆற்றுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை” - மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ராஜ்யசபா கன்னிப்பேச்சு பற்றி முன்னாள் ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறிய வரிகள் இவை. மறைவுக்குப் பின்னும், இந்திய அரசியலில் ஜெயலலிதாவின் பெயர், தவிர்க்கமுடியாததாகி இருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி 24) முன்னிட்டு அவர் குறித்து தமிழக அரசியல் பெண் தலைவர்கள், தங்கள் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

கனிமொழி, தி.மு.க மகளிர் அணி செயலாளர்

 “அரசியலில் பெண்கள் மிக அதிகமான போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. எந்தத் துறையிலும் பெண்களுக்கான இடம் இன்னும் சிரமமானதாகத்தான் இருக்கிறது. அரசியலில் இன்னும் அது கூடுதலாக இருக்கிறது, அதிலும் ஒரு பெண் முதலமைச்சராக வருவது, அசாத்தியம். பல போராட்டங்களையும், சிக்கல்களையும் தாண்டித் தைரியத்தோடு போராடியதால்தான் அவர் வெற்றி பெற்றார். தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் திறனே அவரது வெற்றிக்கு உதவியது. தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் தொடங்கி,  நிர்வாக ரீதியாக, கொள்கை ரீதியாக விமர்சனங்கள், முரண்கள் அவர் மீது இருந்தாலும், அவர் அறிமுகப்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்பதை அவரது திட்டங்களில் பாராட்டுதலுக்குரியதாகப் பார்க்கிறேன்.”

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

குஷ்பூ, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

 “ஜெயலலிதாவை , ஒரு one woman army-னுதான் நான் சொல்வேன், ஒரு பெண்ணாக தமிழகத்துல அவங்க எட்டிய உயரம் ரொம்பப் பெரிசு. ஆங்கிலத்தில் ‘breaking the glass ceiling’ னு சொல்லுவாங்க, அதாவது, எவ்வளவு திறமைகள் இருந்தாலும், பெண்கள் என்ற காரணத்துக்காக அவர்களை முன்னேறவிடாமல் தடுக்குகிற, கண்ணுக்குத் தெரியாத ஆனால் தகர்க்க முடியாத ஒரு தடையை உடைப்பது. அப்படியான தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கிய ஒரு முன்மாதிரி, ஜெயலலிதா. நானும் அவங்களை மாதிரியே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவள். அந்த ஒற்றுமையை வச்சு அவங்ககிட்ட நான் கத்துகிறது ஒரு விஷயம்தான். சினிமா துறை சார்ந்த பெண்கள்னு சொன்னாலே, இந்தச் சமூகம் அவங்களை ஒழுக்கம் இல்லாதவர்களாகவும், அறிவு இல்லாதவர்களாகவும் மட்டுமே பாக்குது. அது இரண்டையும் தகர்த்தெறிஞ்சவங்க அவங்க.

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

அவுங்ககிட்ட நான் கத்துக்கணும்னு நினைக்கிறது, அந்தத் தைரியம்தான். முதல்முறை அவர்களைச் சந்திக்கப் போயிருந்தேன். பொதுவா நான் யார் காலிலும் விழமாட்டேன், அவங்க காலிலும் விழவே கூடாதுன்னு உறுதியோடதான் போனேன். அவங்க இருந்த அறையின் வாசலில் நிக்குறேன், ஒருத்தர் கதவைத் திறந்தார், கதவுக்கு நேரா அவங்க உக்காந்திருந்தாங்க, கோயில்ல நடை திறந்ததும் சாமி சிலை இருக்குமே, அப்படியொரு பிம்பம், உள்ள போனதும் என்னையும் அறியாமல் அவங்க காலில் விழுந்து வணங்கினேன். அப்படிப்பட்ட ஆளுமை, கவர்ந்திழுக்கும் கம்பீரத் தோற்றம் கொண்டவர் ஜெயலலிதா. ஆனாலும், அவர்மீது எனக்கு ஒரு வருத்தம்... அவங்க உடல்நிலையைச் சரியாய் பராமரிச்சிருந்தா, இன்றைக்கு தமிழகம் ஒரு நல்ல தலைவரை இழந்திருக்காது.”

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

தமிழிசை சௌந்தர்ராஜன், பி.ஜே.பி மாநிலத் தலைவர்

“ஒரே நேரத்தில் கரும்பாகவும், இரும்பாகவும் இருந்தவர் ஜெயலலிதா, அவர் இறுக்கமானவர்னு ஒரு பிம்பம் இருக்கு. உண்மையில் தோழமையுடன் பழகக்கூடியவர். அவர் முதலமைச்சராக இருந்தபோது என் மகன் திருமணத்துக்குப் பத்திரிகை வைப்பதற்காகப் போயிருந்தேன். பத்திரிகை கொடுத்துவிட்டு நாங்கள் உடனே கிளம்புவதற்காக எழுந்ததும், ‘கொஞ்சம் உட்காரலாமே’ என்றார். என் கணவரிடமும் என்னிடமும், ‘அரசியல்லையும் இருந்துட்டு குடும்பத்தையும் கவனிக்கிறது ரொம்ப கஷ்டம்னு எனக்குத் தெரியும்’ என்றார். என் கணவரிடம் ‘எனக்குத் தமிழிசையை ரொம்பப் பிடிக்கும்’ என்று சொன்னார். எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அரசியல் தாண்டி அவங்ககிட்ட ஒரு நட்பை ஏற்படுத்தி இருக்கலாமோனு அன்னைக்குத்தான் யோசிச்சேன். அதுமட்டுமல்ல, என்னை பி.ஜே.பி தமிழ் மாநிலத் தலைவராக அறிவித்தபோது, வாழ்த்துக் கடிதம் எழுதி ஒருவரிடம் கொடுத்து அனுப்பியிருந்தார். அவரது கடிதம் இன்று வரை எனக்கு ஒரு வழிகாட்டுதலா இருக்கு. அ.தி.மு.க அல்லாத வேறு கட்சி தலைவருக்கு அவர் வாழ்த்து சொன்னது எனக்கு மட்டும்தான்.

மெட்ரோ ரயில் தொடக்க விழாவில், காணொளிக் காட்சி மூலம் அவர் நிகழ்வைத் தொடங்கிவைக்க இருந்தார். அப்போ நான் மேடையில் இல்லை. கீழே உட்கார்ந்திருந்தேன், அதை வீடியோவுல பாத்தவங்க, என்னை மேடையில உட்கார வைக்கச் சொல்லி, அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்காங்க. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்கிட்டே வந்து இதைச் சொன்னபோது ரொம்ப ஆச்சர்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அரசியல் தாண்டி, ஒரு பெண்ணாக என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக இருந்தார் ஜெயலலிதா.”

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

ஜோதிமணி, செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

 “ஆண்களின் உலகம் என்று நம்பப்படும் அரசியலில், பெண்கள் வருவதே கடினம், ஆனால் அதில் தலைமைப் பொறுப்பில் பல ஆண்டுகள் தன்னைத் தக்க வைப்பதற்கான அசாத்தியத் தைரியமும், திறமையும் அவரிடம் இருந்தன. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாக்கி, அவங்களை மலினப்படுத்துறதை ஓர் ஆயுதமா இந்தச் சமூகம் கையாண்டுவருது. அதை எதிர்த்து நிக்குற துணிச்சல், ஜெயலலிதாவிடம் இருந்தது. ஒரு பெண், திருமணம் ஆகவில்லை, நடிகை என இந்தச் சமூகம், அவரை ரொம்பவும் இளப்பமாகப் பார்த்தபோதும், அதை எதிர்த்துப் போராடி, ஒரு பெண்ணாகப் பெரிய ஆளுமை செலுத்தியிருக்காங்க. அவர் சந்தித்த கஷ்டங்களே, அவரைக் கடினமானவரா மாத்துச்சு. ஒரு ஸ்திரமான குடும்பப் பின்னணியின்றி அவர் அடைந்த வெற்றி அசாத்தியமானது.

அரசியல்வாதியாக அவர்களிடம் பல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஓர் எழுத்தாளரா அவரோட வாழ்க்கை வரலாற்றை, சுயசரிதையாக எழுதணும்ங்கிற தீராத ஆசை எனக்கு இருந்தது. அரசியல்ரீதியாக இல்லாமல், ஒரு பெண் அரசியல்வாதியாக அவரைச் சந்தித்திருக்க லாமேன்னு நினைக்குறேன். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தி அவங்க அதிகம் பேசினது இல்ல. ஆனால், ஒரு பேட்டியில் ‘எனக்கு உண்மையான அன்பு கிடைக்கல’ன்னு அவுங்க சொன்னப்போ, என்னையும் அறியாம நான் கண்கலங்கிட்டேன். அப்போகூட தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வச்சிக்கிட்டுப் பேசுறத நான் ரொம்ப வியந்து பார்த்திருக்கேன். தன் மீதான அனுதாபத்தை உருவாக்கி, அவர் என்றுமே அரசியல் செய்யவில்லை. அது அவங்கக்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும். இறுதிவரை மரணத்தோடு கூட, சமரசமின்றிப் போராடிய அந்த மனதைரியம் எல்லாப் பெண்களுக்குமே ஒரு முன்னுதாரணம்தான்.”

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ

“அரசியல் தாண்டி ஜெயலலிதாவைப் பார்ப்பது சாத்தியமல்ல. ஏனென்றால், அவருக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. முழுக்க முழுக்கத் தன்னை அரசியலுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். அரசியல்ரீதியாக நிறை குறைகள் நிறைய இருந்தாலும், ஒரு பெண்ணாக மிகப்பெரிய அரசியல் ஆளுமை அவர். அவருக்கு ஏற்பட்டதைப்போல, அதிகப்படியான ஏற்றத் தாழ்வுகள் யாருக்கும் ஏற்பட்டதில்லை. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் திரும்ப எழுந்துநின்ற அவரது மன தைரியம் மகத்தானது. அடித்தட்டு மக்கள் மனதில் அவருக்கென்று ஒரு மிகப்பெரிய இடம் இருந்தது. மரக்காணம் கலவரத்தின்போது, அவர் எடுத்த அதிரடி முடிவுகளும், சாதி அரசியலுக்கு எதிரான அவரது தலையீடும் பாராட்டத்தக்கது. பா.ம.க-வுக்கு எதிராகச் சட்டசபையிலேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்து, பா.ம.க-வினரைக் கண்டித்தது அவரது ஆளுமைத்திறனுக்கு அத்தாட்சி. அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதில்லை, சட்டசபையில் நேருக்கு நேர் பார்க்கும்போது, பரஸ்பரம் உடல்நலம் பற்றித் தோழமையோடு விசாரிக்கும் ஆரோக்கியமான  அரசியல் நாகரிகம் தெரிந்தவராக இருந்தார்.”

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

வானதி ஸ்ரீநிவாசன், பி.ஜே.பி மாநிலத் துணைத்தலைவர்

 “அரசியலில் மட்டுமல்லை; ஒட்டுமொத்தப் பெண்கள் சமுதாயமே அவரை ஒரு எடுத்துக்காட்டாகப் பார்த்தது. படித்த பெண்களைத் தாண்டி, சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் அடித்தட்டு பெண்கள்கூட, அவரை அதிகமாக நேசித்தனர். அவர் இறந்தபோது, ‘இனிமே நாங்க என்ன செய்வோம், எங்களுக்குனு இனிமே யார் இருக்காங்க’னு சில பெண்கள் கண்ணீர் விட்டுக் கதறியதை நான் பார்த்தேன். அந்தளவிற்கு, ஒரு தாயைப்போல, பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை அளித்திருக்கார்னுதான் சொல்லணும்.

அரசியலில் மிகக்கடினமான சூழலில்கூட, தனக்கெனத் தனியாக ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர். எம்.ஜி.ஆரைத் தாண்டி, கட்சியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வெற்றி தோல்வியைச் சரியாக அணுகுவதை, ஒரு பெண் அரசியல்வாதியாக அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். அரசியலைத் தனக்கான வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட பக்குவம் அவரிடம் இருந்தது. அரசியலுக்கு வெறும் சினிமா நடிகையாக இல்லாமல், எழுத்தாளர், பேச்சாளர், பன்மொழி அறிந்தவர் என பன்முகத்தன்மையோடு வந்தவர். நேர்மறையான பண்புகளை இன்றைய  பெண் அரசியல் தலைவர்கள் படிப்பினையா எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும்.”

- ஜெனிஃபர் ம.ஆ.