அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்!”

“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்!”

பா.ம.க அருள் ஆவேசம்!

2019 நாடாளுமன்றத் தேர்தல் ரேஸில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியில் முதலில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது, பா.ம.க. கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளையும் பி.ஜே.பி-யையும் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, அந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க-வைச் சுற்றி, சர்ச்சைகள் அலையடிக்கின்றன. இவை குறித்தெல்லாம் பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சேலம் இரா.அருளிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அ.தி.மு.க-வுடன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளீர்களே?”

“மருத்துவர் அய்யாவும், அன்புமணியும், பா.ம.க தொண்டர்களின் மனநிலையை அப்படியே புரிந்துகொண்டு எடுத்த முடிவு இது. நாங்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளோம்.”

“ஆனால் எதிர்க் கட்சிகளும், சமூகவலைதளங்களில் நெட்டிசன்களும், பா.ம.க-வை வறுத்தெடுக்கிறார்களே?”

“நான் கேட்கிறேன், தேர்தல் வரலாற்றில் ஒரே கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்த ஒரு கட்சியைக் காட்டுங்கள் பார்க்கலாம். மிசா கொடுமைக்குப் பிறகுதான், ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக’ என்றார் கலைஞர் கருணாநிதி. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மு.க.ஸ்டாலின், ‘காங்கிரஸுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்’ என்றார். ஆனால் பத்துத் தொகுதிகளைத் தாரைவார்த்துள்ளாரே. கலைஞரின் சாதியைப்பற்றித் தவறாகச் சித்தரித்த வைகோவுடன் இன்று கூட்டணி வைக்கவில்லையா? முதலில் ஸ்டாலின் பேசுவது, அவருக்கே புரியாது. முதல்நாள்வரை, எங்கள் அய்யாவைப் பார்க்கத் தவமாய் தவமிருந்தவர், ஸ்டாலின். அன்புமணியிடம், ‘கூட்டணிக்கு வாங்க’ என்று கடைசி நிமிடம் வரை கெஞ்சினார், ஸ்டாலின். எனவே, எங்களைப் பற்றிப்பேச ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. கலைஞர், ஜெயலலிதா இல்லாத இந்தச் சூழலில், அரசியலில் மிக மூத்த தலைவராக இருப்பவர் அய்யாதான். அவர் எதையும் சிந்தித்துத்தான் செயல்படுவார். அ.தி.மு.க-வுடன்  கூட்டணியில் இணையும்போதுகூட, மாற்றுக்கருத்துகளையும் அய்யா பதிவு செய்துள்ளார். கொள்கையில் எங்காவது சமரசம் செய்துள்ளாரா... இல்லையே. அய்யா சொன்னதுபோல நாங்கள் மிகத் தெளிவாக உள்ளோம். கொள்கையில் நாங்கள் தேக்குமரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருக்கிறோம்.”

“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்!”

“உங்களுக்கு ஒதுக்கப்பட்டத் தொகுதிகளின் எண்ணிக்கையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளை எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்களே?”

“பா.ம.க., அ.தி.மு.க., பி.ஜே.பி என்று நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை. நம் கட்சி நிற்கும் இடத்தில் 99 சதவிகிதம் வேலை செய்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் 100 சதவிகிதம் பணியாற்றவேண்டும் என அய்யா கட்டளையிட்டுள்ளார். அந்தப் பணியில் மட்டுமே நாங்கள் கவனமாக ஈடுபடுகிறோம்.”

“2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளிலும் பா.ம.க படுதோல்வியடைந்தது. தற்போது ஏழு தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?”

“இந்தமுறை அமோக வெற்றியைப் பெறுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.”

“அன்புமணி, ராஜ்யசபா எம்.பி-யாகப் போகிறார் என்ற தகவல் வலம்வருகிறதே?”

“அதைப் பற்றியெல்லாம் அய்யாவும், அன்புமணியும் முடிவெடுப்பார்கள். எங்கள் பணி, 40 தொகுதிகளிலும் வெல்வது மட்டுமே.”

“மதுவிலக்குக்காக நீங்கள் எவ்வளவோ போராட்டங்களை நடத்திவருகிறீர்கள். ஆனால், ‘கூட்டணி ஏன்’? என்ற பா.ம.க அறிக்கையில், மதுவிலக்கு ஒரு கோரிக்கையாக மட்டும் வைக்கப்பட்டுள்ளதே?”

“சமூகத்தின் ஒழுங்கைக் கெடுக்கும் குடியை வேரறுப்போம்’ என்பதே எங்கள் அய்யாவின் கொள்கை. இதை முதல்வரிடம் வலியுறுத்திய போது, ‘நாங்களும் மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறோம். நிச்சயம் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என உறுதியளித்துள்ளார். முதல்வர் வாக்கைக் காப்பாற்றுவார் என நம்புகிறோம்.”

“விவசாயிகள் நலன் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது பா.ம.க. இதையெல்லாம் முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதா?”

“‘நலிவடைந்த விவசாயிகள், தொழிலாளர்கள் என சுமார் 30 லட்சம் பேருக்கு, ரூ.2,500 வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்’ என்று அய்யா கூறியிருந்தார். அதைத்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 என முதல்வர் அறிவித்துள்ளார். முதலமைச்சரே ஒரு விவசாயிதானே. கட்டாயம் ஏனைய கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்.”

“இந்தக் கூட்டணிக்காக, கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறதே”

“நரம்பில்லாத நாக்கு, எதுவேண்டு மானாலும் பேசும். அபாண்டமான பழியைச் சுமத்துகிறார்கள். தெருக்கோடியில் உள்ள தமிழனையும், வாழவைக்க வேண்டும் என அயராது உழைப்பவர்கள் எங்கள் அய்யாவும், சின்ன அய்யாவும். இந்தக் கூட்டணி, முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி உருவானதாகும். இதுபோன்ற அவதூறுகளை வீசுபவர்களுக்கு, 40-லும் வென்று பதிலடி கொடுப்போம்.”

- சே.த.இளங்கோவன்
படம்: க.தனசேகரன்