அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!

ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!

ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!

“கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில், மற்ற யாரையும்விட நான் தெளிவாக இருக்கிறேன்’’ என்று சொன்ன பா.ம.க நிறுவனர் ராமதாஸ்தான், தற்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி கையெழுத்தானவுடன் அதற்கு கீழ்கண்ட விளக்கத்தையும் கொடுத்துள்ளார். “மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்குமரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.” சரி, இதென்ன பிரமாதம்... கடந்த காலங்களில் அ.தி.மு.க தலைவர்கள் விடுத்த அறிக்கைகளுக்கும், அந்தக் கட்சி தொடர்பாக வெளியான செய்திகளுக்கும் தனது டிவிட்டரில் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் ராமதாஸ்?

ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!

“இந்தியா கோயில் என்றால், தமிழ்நாடுதான் கர்ப்பகிரஹம் ஆகும்.” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
‘‘தமிழ்நாடு கர்ப்பகிரஹம் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் ஏழுமலையான் சாமி. இதைத்தானே ஊழல் பினாமி முதலமைச்சர் சொல்ல வருகிறார்?”

“தமிழகத்துக்கான நிதியைப் பெறுவதற்காக மத்திய அரசின் கால்களில் அ.தி.மு.க விழாது.” - மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை.
“அது சரி... எழுந்தால்தானே விழமுடியும்!”

“இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.9 சதவிகிதமாக உயர்வு - செய்தி.
“வரலாறு காணாத வளர்ச்சி என்பது, இதுதான் போலிருக்கிறது!”

“அண்ணா தி.மு.க என்ற பெயரில் எம்.ஜி.ஆர் கட்சி  தொடங்கியிருக்காவிட்டால் அண்ணாவின் பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது” - அமைச்சர் செல்லூர் ராஜு.
“கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசம் என்பதைப்போல, அடிமைகளுக்குத் தெரியுமா அண்ணாவின் பெருமை?”

“18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தாலும், தமிழக அரசு கவிழாது.” -  ஓ.பன்னீர்செல்வம்.
“தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் எந்தக் காலத்தில் கவிழ்ந்திருக்கின்றன?”

“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை புகாரில் உண்மை இல்லை” - கையூட்டு தடுப்புப் பிரிவு.
“எடப்பாடி பழனிசாமி ரொம்ப நல்லவராம், லஞ்சமே வாங்கமாட்டாராம். அப்படியா... அதைச் சொன்னது யாரு. வேற யாரு... அவரே தான் சொல்லிக்கிட்டாரு!”

“அ.தி.மு.க-வுக்கு மக்கள் 37 எம்.பி-க்களைக் கொடுத்ததால்தான் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற முடிந்தது.” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
“ஓஹோ... ரேஷன் சர்க்கரை விலை உயர்வு, எட்டு வழிச்சாலைக்கு நிலம் பறிப்பு, நீட் தேர்வு மூலம் உயிர்ப் பறிப்பு ஆகியவற்றைச் சொல்கிறாரோ?”

“காவல்துறையையும், நீதித்துறையையும் அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜாமீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுவருகிறோம்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
“இந்த விஷயத்தில் உங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது கருப்புக் கோட் போட்ட ஹெச்.ராஜாவாமே... உண்மையா?”

“சென்னையில் ஒரே சாலையை, ஒரே ஆண்டில் மூன்றுமுறை போட்டதாகக் கணக்குக்காட்டி ரூ.68 லட்சம் ஊழல் செய்த ஆட்சியாளர்கள் - செய்தி.
“சாலைகள் அமைப்பதில் அ.தி.மு.க செய்த ஒரு பானை ஊழலுக்கு இந்த ஒரு சோறு ஊழல்தான் உதாரணம்... என்று ஒழியுமோ இந்த எடப்பாடி ஊழல்?”

“ரூ.1000, ரூ.500 தாள்களைச் செல்லாதது ஆக்கியது மட்டுமின்றி இந்தியப் பொருளாதாரமும் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறிய முதலீட்டில் சிறு தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இந்தத் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!”

“முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பங்கேற்கும் விழாவுக்காக சட்ட விரோதமாகப் பதாகைகள் அமைக்கப் பட்டதற்காகவும், அதை அகற்றும்படி உயர் நீதிமன்றம் ஆணையிட்டதற்காகவும் ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், அடிமைத்தனம், ஊழலின் மொத்த உருவமாகிய அவர்கள் அனைத்தையும் துடைத்துக்கொள்வர்!”

ஹைய்யோ... ஹைய்யோ... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

தொகுப்பு: இ.லோகேஷ்வரி,  ர.முகமது இலியாஸ்