வன்முறையில் ஈடுபடும் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: பிரேமலதா


சென்னை: "வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்" தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன் மகள் ஹேமலட்சுமி என்ற காவியாவின் மஞ்சள் நீராட்டு விழா சென்னை, ராயப்பேட்டையிலுள்ள நல்வாழ்வு திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, "சென்னையில் மட்டும் தான் 2 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது என்றும் சென்னையைத் தாண்டிவிட்டாலே பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதைக் கண்டித்து விரைவில் அனைத்துக்கட்சிகளுடன் சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறிய பிரேமலதா, எனவே தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்றும் இதற்காகவும் விஜயகாந்த் தலைமையில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.
வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அதேபோன்று வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையும் தடை செய்யவேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.