Published:Updated:

`கருப்பாக இருக்கும் காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டினால் வித்தியாசமே தெரியாது' - பொன்னார் கிண்டல்!

`கருப்பாக இருக்கும் காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டினால் வித்தியாசமே தெரியாது' - பொன்னார் கிண்டல்!
`கருப்பாக இருக்கும் காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டினால் வித்தியாசமே தெரியாது' - பொன்னார் கிண்டல்!

குமரி வரும் பிரதமருக்கு காங்கிரஸ் கருப்பு கொடி காட்டும் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி முழுவதும் கறுப்பாக உள்ளது. இவர்கள் கருப்புக் கொடி காண்பித்தால் வித்தியாசம் தெரியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலாக கூறினார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா மற்றும் பா.ஜ.க  பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் வரும் 19-ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான பந்தல்கால் நாட்டும் விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பந்தல்கால் நாட்டினார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 27-ம் தேதி மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பல்நோக்கு ஆஸ்பத்திரி திறப்புவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் வரவேற்பு கொடுத்தார்கள். அதனைதொடர்ந்து வரும் 10-ம் தேதி திருப்பூரிலும்,19-ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் பணிமுடிந்த திட்டத்தை துவக்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்கள் நலனுக்கான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது மலிவாகிப் போனவர்களின் அறிக்கை. மக்களுக்கு நன்மை செய்தால் எதிர்கட்சிகளால் சகித்துகொள்ளமுடியவில்லை. தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் 30 இடங்களையும் தேசிய அளவில் 350-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். குமரி வரும் பிரதமருக்கு காங்கிரஸ் கறுப்பு கொடி காட்டும் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி முழுவதும் கருப்பாக உள்ளது. இவர்கள் கருப்பு கொடி காண்பித்தால் வித்தியாசம் தெரியாது" என்றார்.