Published:Updated:

``மோடி மீண்டும் பிரதமராவது கடினம்!'' - சொல்கிறார் பத்திரிகையாளர் வர்கீஸ் ஜார்ஜ்

``மோடி மீண்டும் பிரதமராவது கடினம்!'' - சொல்கிறார் பத்திரிகையாளர் வர்கீஸ் ஜார்ஜ்
``மோடி மீண்டும் பிரதமராவது கடினம்!'' - சொல்கிறார் பத்திரிகையாளர் வர்கீஸ் ஜார்ஜ்

பத்திரிகையாளர் வர்கீஸ். கே. ஜார்ஜ் எழுதிய "Open embrace - India - US Ties in the age of Modi and Trump" என்ற புத்தகத்தைப் பற்றிய கலந்துரையாடல், சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

மீபத்திய ஆண்டுகளில் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தது இரு நிகழ்வுகள். ஒன்று, அனைவரும் எதிர்பார்த்திருந்த பா.ஜ.க-வின் வெற்றி. மற்றொன்று, எவருமே எளிதில் கணித்திடாத டொனால்ட் டிரம்பின் வெற்றி. தீவிர வலதுசாரி சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் முகங்களாக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே பல ஒற்றுமைகளை விமர்சகர்கள் வரையறுத்துள்ளனர்.

அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் மட்டுமல்லாமல், அரசியல் எழுச்சியும் ஒருசேர நிகழ்ந்துள்ளது. அதன் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் விளக்கும்விதமாக பத்திரிகையாளர் வர்கீஸ் கே.ஜார்ஜ் `Open embrace - India - US Ties in the age of Modi and Trump' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பணியாற்றிய அனுபவம் உள்ள வர்கீஸ், மோடி மற்றும் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரங்களையும் நேரில் கவனித்து எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையும், இஸ்லாமிய ஆய்வுகள் துறையும் இணைந்து இந்தப் புத்தகம் தொடர்பான கலந்துரையாடலை ஒருங்கிணைத்தன. புத்தகத்தின் ஆசிரியர் வர்கீஸுடன் மூத்த பத்திரிகையாளர் ஸ்டான்லி ஜானி, புத்தகம் தொடர்பாக உரையாடினார். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. மோடி, டிரம்ப் அரசியல் எழுச்சி, அதன் பின்னணியில் இருந்த இயக்கங்கள், வெளியுறவு, பொருளாதாரக் கொள்கையில் இரு தேசங்களின் அதிகார நிறுவனங்கள், நீதித்துறை என பல விஷயங்களைப் பற்றி புத்தகம் விவரிக்கிறது. இந்தக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட  பல கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார் வர்கீஸ் ஜார்ஜ்.

``மோடியின் வெற்றியை, இந்தியாவின் வலதுசாரி, இடதுசாரி சிந்தனையாளர்கள் என அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். மார்க்சிய சிந்தனையாளர் பிரபாத் பட்நாயக்கூட மோடியின் வெற்றியை `எதிர் சமூகப் புரட்சி’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மோடியைப் போன்று டிரம்பின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் போன்ற மிகப்பெரிய அளவிலான அடிமட்ட இயக்கங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் மோடி - டிரம்ப் வெற்றி ஒரே அளவில் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மோடி வென்றதைப் போல, அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததா?''

``பிரதமர் மோடி, அவர் முன்னிறுத்தும் இந்துத்துவ சித்தாந்தத்தின் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டவர். அதன் தேர்தல் அடையாளமாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு, அதை அவர் செயல்படுத்துகிறார்.

டிரம்ப் விஷயத்தில், அவரே கூறிக்கொள்வதைப்போல அவர் ஒரு வியாபாரி. வர்த்தகம், மத்திய கிழக்கு நாடுகளுடனான தொடர்பு என அவர் தற்போது பேசும் விஷயங்கள் அனைத்தையுமே 1980-களில் இருந்தே பேசி வருபவைதாம். அவரின் கருத்துகளுக்கான சந்தை அமெரிக்காவில் உருவானபோது, அதைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டார். டிரம்ப்  ஒரு தனி மனிதக் காட்சிதான். 

அவர்கள் இருவருமே முன்னிறுத்துகிற தேசிய நலன் என்பது, அடிப்படையில் வெவ்வேறானது. மோடியைவிடவும் டிரம்ப்தான் மீண்டும் பதவிக்கு வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இருவரும் பதவியைவிட்டுச் சென்றாலும் அவர்கள் ஆட்சியின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கும்.

நிறுவனங்களில் தாக்கம்:

டிரம்பின் வெற்றியை, அமெரிக்காவிலுமே பலரும் கணித்திருக்கவில்லை. டிரம்பின் பல முக்கிய முடிவுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் எதிராக நின்றுள்ளன. ஆனால், மோடியின் வெற்றியை இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், அவர்கள் முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், இந்தியாவின் அனைத்து நிறுவனங்களிலும் இருந்து வந்துள்ளது. அந்தச் சித்தாந்தம், ஒரு பெரும் இயக்கமாகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தபோது, இந்திய நிறுவனங்கள் வெளிப்படையாக அதற்கு இசைந்ததாகச் சொல்லப்படுகிறது.

இருவரின் பிரசாரத்திலுமே தங்களுக்கு முந்தைய தலைமை வலுவற்றது என்பதையும், தேசத்தைக் காக்க வலுவான தலைமை வேண்டும் என்பதையும் அடிப்படையாக முன்னிறுத்தப்பட்டன. அதன் தாக்கம், ஆட்சி நிர்வாகத்தில் எதிரொலிக்கிறது. அரசுக்கு எதிராக முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் வெளியேறுவதும், அரசுக்கு எதிராகப் பேசுவதும் நடக்கின்றன. அடிப்படையில் பல ஒற்றுமைகள் இருப்பதாகத் தெரிந்தாலும், ரஷ்யா ராணுவ ஒப்பந்தம், ஈரான் வர்த்தக உறவு எனப் பல்வேறு விஷயங்களில் இந்தியா - அமெரிக்கா உறவு தற்போது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. 

மோடி - டிரம்ப் வளர்ச்சி:

ஆர்.எஸ்.எஸ் தற்போது இருக்கும் நிலையை அடைவதற்கு 100 ஆண்டுகளாகக் காத்திருந்தது. டிரம்பின் வளர்ச்சி என்பது, மிகச் சமீபத்தில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி என்பது, நான்கு கட்டங்களில் பார்க்கப்படுகிறது. முதலில் காந்தியின் படுகொலை, இரண்டாவது பாபர் மசூதி இடிப்பு, மூன்றாவது நாடாளுமன்றத்தில் சாவர்க்கரின் உருவப்படம் திறப்பு. ஒன்று கொலை, மற்றொன்று வன்முறையின் கொண்டாட்டம். இதன் உச்சக்கட்டம்தான் 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி.

மீண்டும் ஆட்சி?

அடுத்து மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்பு மோடியைவிடவும் டிரம்புக்கே அதிகம் உள்ளது. தற்போதைய சட்டங்கள், நிர்வாகம், ஆட்சி அதிகாரம் எனப் பல்வேறு தளங்களில் மோடி அரசு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை ஆட்சி என்பது, இந்தியாவின் தன்மையையே மாற்றிவிடக்கூடியதாக இருக்கும்.

இந்திய அளவில் தமிழகம், கேரளா, வடகிழக்கு எனப் பல பகுதிகளில் உள்ள அணி திரட்சி என்பது, மோடி மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிரானதாகவே உள்ளது.  அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்'' என்ற தேர்தல் கணிப்புடன் பதிலுரைத்து முடித்தார் வர்கீஸ் கே.ஜார்ஜ்.

அடுத்த கட்டுரைக்கு