Published:Updated:

மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்!

மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்!

மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்!

2016சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் ஆறு அரசியல் அணிகள் களத்தில் நின்றன. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க, மக்கள்நலக்கூட்டணி, பா.ம.க, பா.ஜ.க, நாம் தமிழர். மொத்தம் ஐந்து ‘முதல்வர் வேட்பாளர்கள்’ நின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், சீமான் மற்றும் ‘அன்புமணி ஆகிய நான்.’ தி.மு.க, அ.தி.மு.க-வை எதிர்த்த நான்கு அணிகளுமே ‘நாங்கள்தான் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று’ என்றன. ஆனால், தமிழக மக்கள் இவற்றில் எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. அ.தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. தி.மு.க-வும் எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று எதிர்க்கட்சியானது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1.1 சதவிகிதம்தான். மக்கள்நலக்கூட்டணி இல்லாமலிருந்தால் தி.மு.க வென்றிருக்கும் வாய்ப்புகள் அதிகம். 

மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்!

அதற்குப்பின் மக்கள்நலக்கூட்டணி காற்றோடு கரைந்துபோனது. ‘தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று’ என்று சொன்ன இடதுசாரிகள் இப்போது தி.மு.க கூட்டணியில். ‘திராவிடத்துக்கு ஆபத்து என்றால் விட மாட்டேன்’ என்று வைகோவும் தி.மு.க கூட்டணியில். ஆனால், பா.ம.க, பா.ஜ.க, நாம் தமிழர்  கட்சி மூன்றும் திராவிட அரசியலை எதிர்த்தே தீருவோம் என்று இயங்கிவந்தார்கள். இப்போது அதில் சீமான் மட்டும்தான் தனியாக நிற்கிறார். பா.ஜ.க-வும் பா.ம.க-வும் அ.தி.மு.க கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டன.

திராவிட அரசியலுக்கு முற்றிலும் நேரெதிரானது இந்துத்துவ அரசியல். சாதி ஆதிக்க எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, சமூகநீதி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி, மொழிப்பற்று ஆகியவற்றை இந்துத்துவ அரசியல் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தான் ஹெச்.ராஜா பெரியாரையும் கருணாநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கிறார். பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றத் தடையாய் இருப்பது திராவிட அரசியல்தான்.

மோடி ஒவ்வொருமுறையும் தமிழகம் வந்துபோகும்போதெல்லாம் அவமானங்களைச் சந்திக்கிறார். பா.ஜ.க, சமூகவலைதளங்களில் எள்ளி நகையாடப்படுகிறது. ‘திராவிட அரசியலை அழித்துவிட்டால் காலூன்றிவிடலாம்’ என்று பா.ஜ.க நினைத்தாலும், அது அவ்வளவு சுலபமானதில்லை. ‘பெரியார் சிலையை உடைப்போம்’ என்று ஹெச்.ராஜா சொன்னால், அதற்கு எதிராகப் போராட்டக் களத்தில் நிற்பவர்கள் அத்தனைபேரும் நாத்திகர்களோ சிறுபான்மையினரோ அல்லர். யாரைத் தங்கள் வாக்குவங்கியாக பா.ஜ.க கருதுகிறதோ அந்த இந்துக்கள்தாம் களத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கிறார்கள். நெற்றியில் விபூதி அணிந்தவர், கழுத்தில் மாலை அணிந்தவர்களெல்லாம் பெரியார் படத்துடன் நிற்பது இந்துத்துவ அரசியலை இன்னும் எரிச்சலடையச் செய்கிறது. பெரியாருக்காகக் களத்தில் நிற்கும் தமிழர்களுக்குப் பெரியார் என்பது நாத்திகத்தின் அடையாளமல்ல, அது தங்கள் சுயமரியாதைக்கான அடையாளம், தன்னை வழிநடத்தும், தன்னை உரிமையோடு திட்டும் தந்தையாக, தாத்தாவாக அவர்கள் பெரியாரைக் கருதுகிறார்கள் என்பதை இந்துத்துவ அரசியலால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முழுமையான திராவிட அரசியல்வாதியல்லர். அவர் இந்துத்துவ அரசியலை ஆதரித்தால்கூட, அதைக்கூட தான்தான் செய்யவேண்டும் என்று நினைத்தாரே தவிர, பா.ஜ.க வளர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரளவுக்கு பா.ஜ.க தலைவர்களை அவமரியாதையுடன் நடத்தியவர்கள் யாரும் கிடையாது. மோடி நண்பராக இருந்தபோதும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘மோடியா, லேடியா’ என்ற கேள்வியுடன் தேர்தலைச் சந்தித்தார். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் சூழலில் திராவிடக் கட்சிகளையும் திராவிட அரசியலையும் ஒழித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தது பா.ஜ.க. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று மோடி முழங்கியதைப்போல, ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று முழங்கினார்கள் தமிழக பா.ஜ.க-வினர். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமில்லை’ என்பதை ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. ‘கழகங்கள் இல்லாத தமிழகம் கனவில்கூட சாத்தியமில்லை’ என்பதைத்தான் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் சரண்டர் ஆனதைக் காட்டுகிறது. ஐந்து சீட்டுகள் வாங்குவதற்காக, விமானம் ஏறி வந்து ‘நர்ப்பதும் நம்மதே’ என்று மழலைத் தமிழில் பிதற்றுகிறார் பியூஷ் கோயல். பா.ஜ.க-வின் கதை இது என்றால் பா.ம.க-வின் கதை இன்னும் பயங்கரமானது.

‘திராவிட அரசியலை ஒழித்தே தீருவோம்’ என்று தொடர்ச்சியாக முழங்கிவருபவர் ராமதாஸ். தொடக்கத்திலிருந்தே சாதி அடையாள அரசியலைத் தொடர்வதா, பொது அடையாள அரசியலா என்ற குழப்பம் எப்போதும் ராமதாஸுக்கு உண்டு. வன்னியர் சங்கம், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஆகிய அடையாளங்களுடன்தான் பா.ம.க., அரசியல் அரங்குக்குள் வந்தது. ஆனால் பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் மூவரையும் தங்கள் அடையாளங்களாக முன்வைத்தது. இன்றும் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மூவரின் சிலைகளும் உண்டு.   

மண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்!

ஒருகட்டத்தில் திருமாவளவ னோடு இணைந்து ‘தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம்’ என்னும் அமைப்பை ஆரம்பித்தார். சாதிய அடையாளத்தில் இருந்து ‘தமிழர்’ என்னும் பொது அடையாளத்தை நோக்கி நகர முனைந்தார். ஆனால் ராமதாஸ் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. மீண்டும் சாதி அடையாளத்துக்குத் திரும்பினார். இடைநிலைச் சாதித் தலைவர்களை ஒருங்கிணைத்து ‘சமூகநீதிப் பாதுகாப்புப் பேரவை’ என்ற அமைப்பை நடத்தினார். அதன் கோரிக்கைகளில் ஒன்று ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அகற்றவேண்டும்’ என்பது.

‘தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு திராவிடக் கட்சிகள்மீதும் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது’, ‘புதிதாக வாக்களிக்க வரும் இளைய தலைமுறையினர் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள்’ என்ற கருத்து 2011-ல் நிலவியபோது, அன்புமணி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் திராவிடக் கட்சிகளே வென்றன. மக்கள் அன்புமணியையோ மற்றவர்களையோ ஏற்கவில்லை.

மீண்டும் சாதி அரசியலுக்குத் திரும்பினார் ராமதாஸ். சாதிமறுப்புக் காதல் திருமணங்களுக்கு எதிராக, தலித் அல்லாத சாதித் தலைவர்களை ஒன்றிணைத்து, ‘அனைத்து சமுதாயப் பாதுகாப்பு இயக்க’த்தைத் தொடங்கினார். ‘நாடகக் காதல்’, ‘தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட்டும் கூலிங்கிளாஸும் அணிந்து மற்ற சாதிப்பெண்களை மயக்குகிறார்கள்’ என்றார். அப்போதெல்லாம் அவரோடு தலித் அல்லாத எல்லா சாதித் தலைவர்களும் கைகோத்தார்கள். ஆனால் தேர்தலில் அன்புமணிக்கு எந்தச் சாதி வாக்குகளும் விழவில்லை.

தமிழர்கள் சாதியுணர்வு உடையவர்கள்தாம். தேர்தலில் வாக்களிப்பதிலும் சீட்டு அளிப்பதிலும் சாதி முக்கியப் பங்காற்றுகிறது என்றாலும் சாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று சொல்லிவிட முடியாது. கருணாநிதி,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று  தமிழகத்தில் நீண்டகாலம் ஆட்சி செய்த முதல்வர்கள் அனைவருமே சிறுபான்மைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம்.

சாதிக்கட்சித் தலைவர்களை அந்தச் சாதியைத் தவிர வேறெந்தச் சாதியும் ஏற்றதும் இல்லை. ராமதாஸ் சாதியை விட்டுவிட்டு அரசியல் செய்தாலும் பலன் கிட்டவில்லை, சாதி அரசியலை விட்டுவிட்டால் இருக்கும் வன்னியர் ஓட்டுகள் கைநழுவிப் போகுமோ என்ற பயம்.

தமிழ்நாட்டின் முக்கியமான  பிரச்னைகள் குறித்து தொடர்ந்து எதிர்வினை ஆற்றுபவர் ராமதாஸ். தமிழக அரசியல் தலைவர்களில் கருணாநிதிக்கு அடுத்து, புள்ளிவிவரங்களுடன் ஆழமான அறிக்கை விடுபவர் ராமதாஸ்தான். பாட்டாளி மக்கள் கட்சி வெளியிடும் ‘நிழல் பட்ஜெட்’டில் பல தொலைநோக்குத் திட்டங்களும் மாற்று அரசியல் திட்டங்களும்கூட உண்டு. ஆனாலும் சாதி அடையாள அரசியலைத் தொடர்வதா, பொது அடையாள அரசியலா என்ற குழப்பம் எப்போதும் அவருக்கு உண்டு

கடந்த 20 ஆண்டுகளாக அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் ‘திராவிட அரசியல் எதிர்ப்பு.’ தி.மு.க., அ.தி.மு.க என்று இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்தாலும் அவரால் அதிகம் விமர்சிக்கப்பட்டது அ.தி.மு.க-தான். அந்தக் கட்சிக்காகவே ‘கழகத்தின் கதை’ என்ற புத்தகம் எழுதிய ராமதாஸ்,  ‘`நாகப்பாம்புதான் பழிவாங்கும் உணர்வு அதிகமுள்ள உயிரினம் என்று கூறுவார்கள். அது உண்மையோ இல்லையோ ஜெயலலிதாவுக்குப் பழிவாங்கும் உணர்வு அதிகம் உண்டு” என்று மிகக் கடுமையாக ஜெயலலிதாவை விமர்சித்தார். ஜெயலலிதாவை மட்டுமல்ல, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று எல்லோரையும் கடுமையாக விமர்சித்த ராமதாஸ், ‘அ.தி.மு.க என்ற கட்சியே ஊழல் சுனாமி’ என்று எழுதியிருக்கிறார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதையும் அவரது புகைப்படம் சட்டமன்றத்தில் மாட்டப்படுவதையும் எதிர்க்க, தி.மு.க-கூடத் தயங்கியது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியோ ‘ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபமா?’ என்று கடுமையாக எதிர்த்தது. இன்று அதே ‘ஊழல் குற்றவாளி’ அம்மாவின் ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லும் எடப்பாடி, பன்னீர்செல்வத்துடன், அதாவது ‘ஊழல் சுனாமி’ அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளார் ராமதாஸ். அன்புமணி மட்டும் சும்மாவா? ‘மானங்கெட்டவனுக’, ‘டயரை நக்குபவர்கள்’ என்று இதுவரை யாரும் வைக்காத கடுமையான விமர்சனத்தை ஓ.பி.எஸ்., எடப்பாடி மீது வைத்தார். இப்போதோ ‘ஜெயலலிதாவைவிட எடப்பாடி பழனிசாமி சிறந்த தலைவர்’ என்கிறார். ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சியைக் கடுமையாக விமர்சித்த அன்புமணி, இப்போது குட்கா ஊழல் குற்றச்சாட்டுள்ள விஜயபாஸ்கரோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ராமதாஸின் பிரச்னையே அவரது கடுமையான விமர்சனங்கள்தான். ‘கொள்கையில் மாறவே மாறாதவர்’ என்பதைப்போலவே அவரது பேச்சு இருக்கும். ‘பின்னால் நிலைப்பாடு மாறினாலும் மாறுமே’ என்றெல்லாம் யோசிக்காமல் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார். ஆனால் அதுவே அவருக்கு எமனாகிப்போகும். ‘என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் பதவிக்கு வந்தால் நடுத்தெருவில் விளக்குக்கம்பத்தில் என்னைக் கட்டிவைத்து அடியுங்கள்’ என்றார். ஆனால் இப்போது அன்புமணி, பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர், ‘முதல்வர் வேட்பாளர்’. இப்போது அ.தி.மு.க-விடம் ஏழு நாடாளுமன்ற சீட்டுகளையும் ஒரு மாநிலங்களவை சீட்டையும் வாங்கியிருக்கிறார் ராமதாஸ். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க வெற்றிபெற முடியவில்லை என்றால், அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்குவதுதான் திட்டம்.

 ஒருமுறை ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து முறிந்தபிறகு, ராமதாஸ் சொன்ன வார்த்தைகள், குறிப்பிடுவதற்குக்கூட கூச்சமளிக்கும் அநாகரிக வார்த்தைகள். சில ஆண்டுகளிலேயே மீண்டும் பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி அமைந்தது. ராமதாஸின் எதிரியே அவர் நாக்கும் போக்கும்தான். அவரும் அன்புமணியும் திராவிடக் கட்சிகள்மீது, குறிப்பாக அ.தி.மு.க-மீது வைத்த கடுமையான விமர்சனங்களைத் தோண்டியெடுத்துத் தோலுரித்துக்கொண்டிருக்கிறார்கள் சமூகவலைதளங்களில். அ.தி.மு.க - பா.ம.க  கூட்டணி முடிவானதும் ‘மண்டியிட்ட மாங்கா’ என்ற ஹேஷ்டேக், ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் டிரெண்ட் ஆனது.

இந்தக் கூட்டணியை நியாயப்படுத்துவதற்காக ‘கூட்டணியில் நாணல்; ஆனால் கொள்கையில் தேக்கு’ என்று சொல்லியிருக்கிறார் ராமதாஸ். “அ.தி.மு.க-மீது விமர்சனங்களே இல்லை என்றும் பதிலளிக்க முடியாது. ஆனால், கல்வித்துறைச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பா.ம.க முன்வைத்த பல்வேறு யோசனைகளை அ.தி.மு.க அரசு ஏற்றுக்கொண்டது” என்று சொல்லி, ‘அதனால்தான் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தோம்’ என்கிறார் ராமதாஸ். அப்படியானால், தி.மு.க-வுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? அன்புமணியே இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்ததை வெளிப்படையாகத் தெரிவித்தாரே?

‘அ.தி.மு.க-வுடன் நிபந்தனைகள் விதித்துதான் கூட்டணியில் சேர்ந்துள்ளோம்’ என்கிறார் ராமதாஸ். ஆனால் அதில் இரண்டு, மூன்று நிபந்தனைகளைத் தவிர, ராஜீவ் கொலைவழக்குக் குற்றவாளிகள் விடுதலை, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு என்று பெரும்பாலான நிபந்தனைகள் மத்திய அரசோடு தொடர்புடையது. நியாயமாகப் பார்த்தால் ராமதாஸ் பா.ஜ.க-வுடன்தான் இந்த நிபந்தனைகளை விதித்துக் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். ஏனென்றால், ‘நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும்’ , ‘ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்றெல்லாம் தமிழக அரசு எப்போதோ தீர்மானம் அனுப்பிவிட்டது. ஆனால், மத்திய பா.ஜ.க அரசோ அத்தனையையும் குப்பைக்கு அனுப்பிவிட்டது. இதில் அ.தி.மு.க-வுடன் நிபந்தனை விதிப்பதில் என்ன பலன்?

ராமதாஸால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுள் ஒன்று ‘சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்பது. மக்கள்தொகைக்கேற்ப சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்த ராமதாஸ் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்திருக்கும் பா.ஜ.க-வை ஆதரிக்க இந்தக் கோரிக்கையை ராமதாஸ் வைத்திருப்பது அபத்த நகைச்சுவை.

அ.தி.மு.க அரசால் செய்யச் சாத்தியமுள்ள நிபந்தனைகளையும் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு நிறைவேற்றும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ‘படிப்படியாக மதுவிலக்கு’ என்பது ராமதாஸின் நிபந்தனைகளில் ஒன்று. இதை ஜெயலலிதாவே 2011 அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால், 500 டாஸ்மாக் கடைகளை மூடியதைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை.

‘நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது’ என்று வழக்கு தொடுத்து, வெற்றியும் பெற்றது பா.ம.க. ஆனால் ‘தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படும்’ என்று அதற்கு எதிராக மேல்முறையீடு செய்தது அ.தி.மு.க அரசு. அதுமட்டுமல்ல, ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற பெயரையே மாற்றி, ‘ஊரக சாலைகள்’ என்று பெயர்வைத்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் தந்திரமாக மீண்டும் திறந்தது தமிழக அரசு. ராமதாஸ் கொள்கையில் உறுதியாக இருந்தால், ‘அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி, பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால்தான் கூட்டணி, பேச்சுவார்த்தை’ என்றல்லவா நிபந்தனை விதித்திருக்க வேண்டும்?

‘மாநில நலன்கள் பாதிக்கப்படுவதால்தான், அதைப் பாதுகாக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி’ என்கிறது ராமதாஸின் ‘தேக்கு’ அறிக்கை. மாநில நலன்கள் பாதிக்கப்பட்டது என்றால் யாரால் பாதிக்கப்பட்டது? பா.ஜ.க அரசால்தானே! பிறகு அதே பா.ஜ.க-வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர எதற்குக் கூட்டணி?

மேலும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில்தான் பா.ம.க இருந்தது. அப்போது பா.ஜ.க சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததற்கும் மாநில நலன்கள் பாதிக்கப்பட்டதற்கும் ‘கூட்டணிக் கட்சி’ என்ற முறையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? ஒவ்வொரு பிரச்னைக்கும் வெறுமனே அறிக்கை விட்டால் மட்டும் போதுமா? ஒவ்வொரு தேர்தலின்போது மட்டும் ‘கொள்கைக்கான நிபந்தனை’, தேர்தல் முடிந்தபிறகு எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்பதுதான் ‘மாற்று அரசியலா?’ பா.ம.க யாருக்காக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டதோ, அந்த மோடி ஆட்சியில்தான் மாநில நலன்கள் பாதிக்கப்பட்டன என்றால், அடுத்தும் மோடி வந்தால் மாநில நலன்கள் பாதிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

‘திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்’ என்ற ராமதாஸின் முழக்கமும் ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற பா.ஜ.க-வின் முழக்கமும் வெத்துவேட்டு முழக்கங்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. இன்னும் கால்நூற்றாண்டுக்காவது திராவிட அரசியலை அழிக்க முடியாது, திராவிடக் கட்சிகளை ஒழிக்க முடியாது என்பதைத்தான் காட்டுகின்றன பா.ஜ.க., பா.ம.க கட்சிகளின் சரணாகதி.

சுகுணா திவாகர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்