Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

நிகழ்ந்திருப்பது மனிதர்களோடு இயற்கை நிகழ்த்திய கோர யுத்தம். நிலைகுலைந்து கிடக்கிறது தமிழகத்தின் ஒரு பெரும் பகுதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுச்சேரி மாநிலத்தையும் கடலூர் மாவட்டத்தையும் தாக்கிய 'தானே’ புயல் ஏற்படுத்திய சேதங்கள் நம் தலைமுறை காணும் பயங்கர அவலங்களில் ஒன்று. புயல் வந்தது, பெரும் காற்று அடித்தது, சில நாட்கள் அவஸ்தையைக் கொடுத்தது என்பது மாதிரி இல்லை இது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு என்ன செய்வதென்ற கேள்விக்குறியை அவர்கள் வாழ்க்கையில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறது.

58 ஆயிரத்து 20 ஹெக்டேர் பரப்பு நெற் பயிர்கள் நாசம். 22 ஆயிரத்து 500 ஹெக்டேரில் முந்திரி மரங்களும், 2 ஆயிரத்து 860 ஹெக்டேரில் வாழையும் 1,000 ஹெக்டேரில் பலா மரங்களும் சர்வநாசம். உளுந்து, கரும்புத் தோட்டங்களும் பாழாகிப்போயின. லட்சக்கணக்கில் மரங்களும் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் அனைத்தும் உடைந்து, கம்பிகள் அறுந்து தொங்கின. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 45 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை. மீனவர்களின் படகுகள் நாசம். சிறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களான கால்நடைகளும் காவு வாங்கப்பட்டன. ஏழைகளின் குடிசைகள் பிய்த்துக்கொண்டன. ஓடுகள் பறந்து நொறுங்கின. 5,000 கோடி கொடுத்தால்தான் அத்தனையையும் சீர்படுத்த முடியும் என்கிறது தமிழக அரசு. இதுகூட புயலின் கோர தாண்டவத்தால் விளைந்த சேதத்தின் உத்தேச மதிப்புதான். உண்மையான சேதம் என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை. அதற்கு விலை ஏது?

அப்படிப்பட்ட விலைமதிப்பற்ற மனித உயிர்கள் கடலூரிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் நிர்க்கதியாக நிற்கின்ற காட்சியைப் பார்க்கும்போது, சொந்த நாட்டின் அகதிகள் என்றே சொல்லத் தோன்றுகிறது. நேற்று வரை வசதி வாய்ப்புகளோடு, குறைந்தபட்சம் அடுத்த வேளை உணவுக்கான

தலையங்கம்

உத்தரவாதத்தோடு வாழ்ந்த இந்த உழைப்பாளிகளின் வாழ்க்கையை இரண்டு மணி நேரப் பேய்க் காற்று இப்படியா திருப்பிப் போட வேண்டும்!

உயிரோடு இருந்தாலும், வாழ்விழந்து போயிருக்கும் இவர்களை எல்லாம் சேதத்தின் பிடியில் இருந்து எப்படி மீட்டு, மறுபடி புன்னகையோடு வாழவைக்கப்போகிறோம்? இதுதான் இன்று நம் அனைவரின் முன் இருக்கும் அதிமுக்கியமான கேள்வி!

ஒரு சில நாள் தரப்படும் உணவிலோ, சில ஆயிரம் ரூபாய் நிதி உதவியிலோ திரும்பி வரக்கூடியது அல்ல இந்த மக்களின் வாழ்க்கை. இவர்களுடைய தேவை அதையும் தாண்டியது. மீண்டும் சொந்தக் கால்களில் எழுந்து நிற்பதற்கான நம்பிக்கைதான் முதல் முக்கியத் தேவை. போர்க் கால அடிப்படையில் புனர்வாழ்வுத் திட்டங்களைத் துவங்குவதுதான் அந்த நம்பிக்கை ஒளியை இவர்களிடையே விதைக்கும்!

கூரை இழந்த குடிசைகள்... ஓடு இழந்த வீடுகள்... மொத்தமாக நாசம் ஆன தென்னைகள்... நெல், உளுந்து மற்றும் பணப் பயிர்கள்... பலா, முந்திரி, மாம்பழத் தோப்புகள்... இவை மொத்தத்தையும் மறுபடியும் உருவாக்கிக் கொடுப்பது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு கனவு பூமியை மீண்டும் உருவாக்கிக் கொடுப்பதற்கு ஒப்பான விஷயம். அதை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது. தெளிவான திட்டமிடுதல், தொடர்ச்சியான செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே இதைச் செய்ய முடியும். நாளை நல்லது நிகழும் என்ற நம்பிக்கை மட்டுமே அது வரை அவர்களைக் காக்கும் ஒரே மருந்து!

வீடுகளை மூடுவதற்குக் கூரைகள் அல்லது தார்ப்பாய்கள், ஓடுகள் வழங்குவதில் தொடங்கி, ஒரு சில மாதங்களுக்காவது அரிசி, பருப்பு முதலான உணவுப் பொருட்களை வழங்குவது வரை அன்றாடத் தேவைகளை முதலில் பூர்த்திசெய்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களில் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் முதல் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணம் வரை அடுத்த சில காலத்துக்கு இலவசம் ஆக்கித் தரலாம். மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் விதமாக தன்னம்பிக்கை வகுப்புகளைத் துவங்கி நடத்தலாம்.

நிலத்தைப் பொறுத்தவரையில் நெல், கரும்பு, உளுந்து, பூக்கள், வெற்றிலை போன்ற பணப் பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுப்பதுடன் அடுத்த மகசூலுக்கான செலவுகளையும் ஏற்றாக வேண்டும். அந்தச் செலவு செய்ய அவர்களிடம் இப்போது பணம் கிடையாது. இருந்ததை எல்லாம் இரக்கமற்ற புயல் வழித்துக்கொண்டு போய்விட்டது. அடுத்த இரண்டு பருவங்களுக்காவது அரசாங்கம் ஏதேனும் ஒரு வகையில் உதவிக் கரம் நீட்டினால்தான் அவர்களால் மெள்ள எழ முடியும்.

மிக முக்கியமானது இந்த மண்ணின் தனித்துவம் மிக்க அடையாளங்களான பலா, முந்திரி, மாந்தோப்புகளை மீண்டும் உருவாக்க இவர்களுக்குத் தோள் கொடுப்பது! வேரோடு சாய்ந்துபோன மரங்களை அப்புறப்படுத்துவதே இந்த மக்களுக்குச் செலவு வைக்கும் சமாசாரமாக இருக்கிறது இப்போது. வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றவும் சிதைந்த நிலத்தை மீண்டும் பண்படுத்தவும் இவர்களுக்கு உதவிக் கரங்கள் தேவை. மரங்கள் புதிதாக வளர்ந்து பலன் கொடுக்க 12 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும்தான். என்றாலும், இவர்களின் வளரும் சந்ததிகளின் நிம்மதிக்கு அது நல்ல அடித்தளமாக இருக்கும். இப்படிப்பட்ட  பல திட்டமிடுதல்களைச் செய்துகொடுத்தால் மட்டுமே லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியும்.

அன்புக்குரிய வாசகர்களே... இது இந்த மாநிலத்தின் மாபெரும் துயரம். 'தானே’ புயலினால் வாழ்வாதாரங்களை இழந்த நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும்?

கடலூர் தொடங்கி நாகை வரைக்கும்... புதுச்சேரியையும் சேர்த்து புயல் தாக்கத்தின் அழிவில் இருந்து நம் சொந்தங்களை மீட்டு எடுப்பதற்கு, உங்கள் எல்லோரின் கருணைமிக்க ஒத்துழைப்பை நாடுகிறான் விகடன்.

என்னவெல்லாம் செய்யலாம்? எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பு வாசகர்களே!

'தானே’ துயரை நாமும் துடைப்போம். சிந்திப்போம்... அடுத்த இதழில் சந்திப்போம்!

- ஆசிரியர்

தலையங்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism