Published:Updated:

கூட்டணி, தொகுதிப் பங்கீடு! - ஈஸ்வரன் போடும் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு

கூட்டணி, தொகுதிப் பங்கீடு! - ஈஸ்வரன் போடும் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு
கூட்டணி, தொகுதிப் பங்கீடு! - ஈஸ்வரன் போடும் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு

``கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் இடம்பெறும் கூட்டணியே இனிவரும் தேர்தலில் வெற்றிபெறும்'' என நாமக்கல்லில் நடந்த உலக கொங்கு தமிழர் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று நாமக்கல்லில் 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாடு நடந்தது. இதில் பேசிய அதன் பொதுச்செயலாளர்  ஈ.ஆர்.ஈஸ்வரன், ``சில அரசியல் கட்சியினர் மாநாட்டுக்கு காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். ஆனால், இது காசு செலவு செய்து வந்த கூட்டம் அல்ல. ஆண்களுக்கு இணையாக பெண்களும் சரிசமமாக வந்துள்ளார்கள். இதுபோல எந்த மாநாட்டிலாவது கலந்துகொண்ட வரலாறு உண்டா. என்னை எப்படியாவது அடக்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். பெட்டியை எடுத்து கொங்குநாட்டுக்கு வந்துவிட்டேன். இங்கிருந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களை கூட்டிப் போகாமல் இருக்கமாட்டேன். மாநாடு மூலம் நமது ஒற்றுமையைக் காண்பிப்பது தேசத் துரோகமா. அதை தடுக்க ஒருவர் வழக்கு போடுகிறார். வழக்கமாக மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி அளிக்க மாட்டார்கள். நாம் கோர்ட்டுக்குச் சென்று அனுமதி வாங்குவோம். ஆனால், குறிப்பிட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், மீண்டும் போஸ்டர் கிழிக்கத் தொடங்கி விட்டனர்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு போர். அதில் ஜெயித்துதான் ஆகணும். இந்த மாநாடு நடக்கப் போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு போர் முரசை கொட்டுகின்ற மாநாடு. யாருடன் கூட்டணிக்குச் செல்கிறோம் என்பதில்தான் பிரச்னை. எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்கிற உணர்வுதான் எனக்கும் உள்ளது. எல்லோரும் ஆசைப்படுகிறது மாதிரி ஒரு கூட்டணியை நான் யோசித்தேன். அது ஒரே தேர்தலில் தி.மு.க.வுடனும் கூட்டணி, அ.தி.மு.க.வுடனும் கூட்டணி. சரியா. இப்படிச் செய்தால்தான் எல்லோரையும் சமரசம் செய்ய முடியும். அப்படிப்பட்ட நிலையில் தான் ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். 

ஆனால், கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பிரதான கட்சிகளுக்கு ஒரு அறைகூவலை விடுக்கிறோம். நீங்கள் ஒரு தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குகிறீர்கள் என்று சொன்னால், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஓட்டுக்களாவது அந்தக் கட்சிக்கு அந்தத் தொகுதியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது இரண்டு பெரிய தலைவர்கள் கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படித் தொகுதியை ஒதுக்கினால் பிரதான கட்சியினரே அந்தக் கூட்டணி கட்சிக்கு வேலை பார்க்க மாட்டார்கள். அவர்களே தோற்கடித்து விடுவார்கள்.

எனவே, அதைப் புரிந்துகொண்டு எந்தப் பிரதான கட்சியாக இருந்தாலும், ஓட்டு இல்லாத தொகுதியை ஒரு கட்சிக்கு ஒதுக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் அதுதான் நல்லது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைப் பொறுத்தவரை, ஜெயிக்கிற கூட்டணியில்தான் இருக்கும் எனப் பல நேரங்களில் சொன்னது உண்டு. ஆனால் இனிவரும் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்தக் கூட்டணியே வெற்றிபெறும்" என்று கூறினார். மாநாட்டின் இடையில் தி.மு.க-வைச் சேர்ந்தவரும், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி கலந்துகொண்டார்.