Published:Updated:

பெரம்பலூர் பா.மக தொண்டர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

பெரம்பலூர் : மரக்காணம் கலவரத்திற்கு பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைதுக்கு பிறகு தமிழகத்தில்  ஏற்ப்பட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட பாமகவினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும், குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து வரும் நிலையில், பெரம்பலூர் பா.ம.க மாவட்ட பொறுப்பாளர் துங்கபுரம் நாகராஜ் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைத்து மாவட்ட போலீஸார்  தங்கள்  கணக்கை  துவங்கியுள்ளனர்.

இவர்  ராம்தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திட்டக்குடி-துங்கபுரம் சாலையின்  குறுக்கே பனைமரங்களை வெட்டி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கில் ஜாமின் பெற்று கடந்த மே 9 ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த நாகராஜை, ஏற்கனவே இருந்த வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்கான வழக்கில் சிறை வாசலிலேயே கைது செய்ய போலீசார் முயன்றுள்ளனர்.

அப்போது தன்னை கைது செய்ய மறுத்த நாகராஜ், கைது செய்ய வந்த போலீசாரை தாக்கினாராம். தாக்குதலில் போலீசார் 2 பேர் காயமடைந்துள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்ட  ஏஸ்பி ராஜசேகரன்  பரிந்துரையின் பேரில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது நாகராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நாகராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குன்னம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

-சி.ஆனந்தகுமார்