Published:Updated:

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதுவும் எதுவும் மோதப்போகின்றன, அதில் ஜெயிக்கப்போவது எது என்பதுதான் எட்டுக்கோடித் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. அதுவே தமிழ்நாட்டின் எதிர்காலமும்கூட. இப்போதைக்கு அ.தி.மு.க கூட்டணியும், தி.மு.க கூட்டணியும்தான் இந்தத் தேர்தலில் முதன்மைப் போட்டியாளர்களாக இருக்கப்போவது உறுதியாகியிருக்கிறது. இவற்றில் எந்தக் கூட்டணி ஜெயிக்கும் என்பதைவிட, இந்தக் கூட்டணிகள் எப்படி உருவாயின என்பதே அரசியல் ஆர்வலர்களைத் துளைத்தெடுக்கும் கேள்வியாக இருக்கிறது.  

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

முதலில் அ.தி.மு.க கூட்டணியைப் பார்ப்போம்.

எதிர்பார்த்ததுபோலவே, இலையுடன் இணைந்துவிட்டது தாமரை. மாங்கனியும் சேர்ந்ததால் இயற்கைக் கூட்டணி என்று சித்திரம் வரைகிறார்கள், ரத்தத்தின் ரத்தங்கள். தே.மு.தி.க–வையும் இந்த அணிக்கு இழுத்து வரும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த இதழை நீங்கள் படிக்கும்போது முடிவு தெரிந்திருக்கும்.

கூட்டணியில் இதுவரை இல்லாதவர்களை எல்லாம் ஈர்க்கின்ற சக்தி, இப்போதைக்கு ஆளுங்கட்சிக்கு மட்டுமே உண்டு. ஆனால், இந்த சக்தியைத் தாண்டி. இந்தக் கூட்டணியைச் சாத்தியமாக்கியதில், அரசியலுக்குத் தொடர்பில்லாதவர்கள் சிலரின் பங்குண்டு.

 ‘அவுட்சோர்சிங்’ தலைவர்கள்!


ஜெயலலிதா இருந்தவரையிலும், யாருடன் கூட்டணி வைக்க வேண்டுமென்பதை அவர் மட்டுமே முடிவு செய்வார். அவர் சொல்வதைப் பேசி முடிப்பதற்கு, கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்களை அனுப்புவார். கட்சி அலுவலகத்தில்தான் கூட்டணி ஒப்பந்தமெல்லாம் கையெழுத்தாகும். இப்போது யாரோ ஒருவர் வீட்டில் தலைவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். கூட்டணி ஒப்பந்தம் ஓட்டலில் கையெழுத்தாகிறது. அ.தி.மு.க தலைமை அலுவலகம் காற்றாடிக் கொண்டிருக்கிறது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்குவது என்பவற்றை யெல்லாம், கட்சிக்குத் தொடர்பே இல்லாத ‘அவுட்சோர்சிங்’ தலைவர்கள் முடிவு செய்கிறார்கள்.   

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

ஜெயலலிதாவால் முதல்வராக அமர்த்தப்பட்டு, சசிகலாவால் அந்தப் பதவியிலிருந்து இறக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம்தான், இப்போது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர். ஆனால் அவரோ, கட்சியின் மற்ற சீனியர் தலைவர்களோ இந்தக் கூட்டணியை முடிவு செய்யவில்லை. கோவையைச் சேர்ந்த கார்ப்பரேட் சாமியார், அண்டை மாநிலத்தில் அதிமுக்கியப் பொறுப்பிலுள்ள ஒரு வி.வி.ஐ.பி., கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர், டெல்லி சாமியார் ஒருவர் என, கட்சிக்குச் சிறிதும் தொடர்பில்லாதவர்கள்தாம் இந்தக் கூட்டணி அமைவதற்குப் பின்புலமாகச் செயல் பட்டுள்ளனர். இப்படி உதவிய ‘அவுட்சோர்சிங்’ தலைவர்கள், இந்த அரசுகளால் என்ன பலன் அடைந்தனர், இவர்களுக்கும், அவர்களுக்குமான தொடர்புகள் என்ன என்பவற்றையெல்லாம் தோண்டினால், ஒரு மசாலா தெலுங்கு அரசியல்படத்துக்கு அட்டகாசமான கதை கிடைக்கலாம்.

இவர்களெல்லாரும் சேர்ந்து, டெல்லியின் கையசைப்புக்கு ஏற்ப, கூட்டணியைப் பேசி முடித்துள்ளனர். கூட்டணி ஒப்பந்தத்தையும் தயார் செய்த பின்பே,  கூட்டணி ஒப்பந்தத்தை ஓ.பி.எஸ்–ஸிடம் கொடுத்து வாசிக்க வைத்துள்ளனர். அவர் உட்பட 22 அமைச்சர்களுக்கு, இந்தக் கூட்டணியில் உடன்பாடில்லை என்கிறது கட்சி வட்டாரம். ஆனால், எந்த அமைச்சரும் வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்குத் தயாராக இல்லை. பா.ஜ.க–வுக்கு எதிராகக் குரல் கொடுத்த காரணத்திற்காகவே, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் கல்யாண மண்டபம் மற்றும் அவருக்கு நெருக்கமான வட்டத்தில் ஐ.டி.ரெய்டு நடந்ததாகச் சொல்கிறார்கள். இது, பா.ஜ.க–வை எதிர்க்க நினைக்கும் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை என்றும் யோசிக்கத்தோன்றுகிறது. பா.ஜ.க–வுக்கு எதிராகத் தனி ஒருவன் ஆகக் குரல் கொடுத்துவந்த தம்பிதுரை, ‘அது வலி, வேற டிபார்ட்மென்ட்’ என்று தலைகீழாக மாறியதற்கும், ‘அதெப்படி பா.ம.க–வோடு கூட்டணி வைக்கலாம்?’ என்று சட்டம்பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாஸ் வீட்டில் விருந்துண்டதற்குமான காரணங்கள், யாமறியோம் பராபரமே! 

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

உண்மையில், பா.ஜ.க–வுடன் கூட்டணி வைப்பதில், எடப்பாடிக்கே துளியும் விருப்பமில்லை என்று சொல்வாரும் உண்டு. ஆனால் முடியாது என்று சொல்லும் துணிச்சலும் அவருக்கில்லை. பா.ஜ.க–வை எதிர்த்துவிட்டு, ஆட்சியில் தொடரும் சூழ்நிலையும் அங்கில்லை. அதனால்தான், கூட்டணி வைத்தாலும் ஐந்து சீட்டுகள்தான் என்பதில் மட்டும் ‘கெத்து’ காட்டியிருக்கிறார் எடப்பாடி. பா.ஜ.க–வைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் நான்கைந்து இடங்களில் ஜெயித்து, கணக்கைத் தொடங்க வேண்டுமென்பது மட்டும்தான். அந்த வெற்றி இலக்கை எட்டுவதற்கு, தமிழகத்தில் தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி வந்திருக்கிறது பா.ஜ.க.

தே.மு.தி.க–வின் நிலைமைதான் பரிதாபம். இன்னும் பல மாதங்களுக்கு, பூரணமாய் ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் உள்ள விஜயகாந்த்தை அவசர அவசரமாக அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்ததே, இந்தத் தேர்தலில் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டு வாங்குவதற்குத்தான். பா.ம.க–வைப் போலவே, தே.மு.தி.க–வின் எதிர்பார்ப்பும் நிறைய இருக்கிறது. மற்ற தேவைகளை நிறைவேற்றுவதைப் பற்றி ஆளுங்கட்சி கவலைப்படவில்லை. சீட்டு ஒதுக்கீடுதான் இடிக்கிறது. ஆனால், இந்த அணியில் தே.மு.தி.க இடம்பெற்றால் தே.மு.தி.க-வின் வாக்குவங்கி, முற்றிலும் காலியாகி விடுமென்பது உறுதி.

‘‘அ.தி.மு.க இப்போது ஒரு குறிப்பிட்ட சாதியின் கட்டுப்பாட்டிற்குப் போய்விட்டது என்பது ஊரறிந்த சேதி. வன்னியர் கட்சி. முதலியார் கட்சி, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கிருஷ்ணசாமி கட்சி ஆகியவற்றுடன், உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த பா.ஜ.க–என ஆதிக்க சாதிகளின் கூடாரமாகவே அ.தி.மு.க–கூட்டணி உள்ளது. தே.மு.தி.க–வின் வாக்குவங்கி என்பது, பட்டியலின மக்களைச் சார்ந்தது. இந்தக் கூட்டணியில் இணைந்தால், அந்த வாக்குகள் விழுவது சந்தேகமே. இதைப் புரிந்து கொள்ளாமல், வேறு ஏதோ காரணத்துக்காக அ.தி.மு.க–வுடன் இணைவது அபத்தமாக இருக்கும்’’ என்கிறார் தே.மு.தி.க நிர்வாகி ஒருவர்.

இந்தக் கணக்கு, இ.பி.எஸ்–ஸுக்கும் தெரியும். ஆனால், அவருடைய இலக்கு இந்த 39 இல்லை...அந்த 21 மட்டுமே. இந்த நாடாளுமன்றத் தேர்தலில், படுதோல்வி அடைந்தாலும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்ற வேண்டுமென்பதே அவரது கவலை. அதற்கு இந்தக் கட்சிகள், இந்த சாதி வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க–வுக்குத் தேவை என்று நினைக்கிறார். ஒதுங்கி நிற்கும் ஓ.பன்னீர் செல்வம், ஒரு நல்ல முடிவுக்காகக் காத்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், கட்சிக்கு எதிராக இருந்தால், மீண்டும் ஒரு தர்மயுத்தத்தைத் தொடங்கி, தலைமைப்பீடத்தைக் கைப்பற்ற அவர் முயலவும் செய்யலாம். 

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

தி.மு.க–கூட்டணியை நோக்குவோம்...

அங்கே ‘மணியான’ அமைச்சர்கள் ‘மணியம்’ செய்கிறார்கள் என்றால், இங்கே இன்னும் குடும்ப அரசியல்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காகத் தி.மு.க–வில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு, இதுவரையிலும் எந்தப் பேச்சுவார்த்தையிலுமே முக்கியப் பங்காற்றவில்லை; அதற்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அவர்கள் அறிவாலயத்துக்குத் தினமும் வந்து, கடலை கொறித்துவிட்டு, சுக்குமல்லிக் காபி குடித்து விட்டுப் போய்விடுகின்றனர். ஸ்டாலின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி மற்றும் இவரது வகையறாக்கள்தான், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை, நட்சத்திர ஓட்டல்களில் உற்சாகமாக நடத்திவருகின்றனர்.

காங்கிரஸ் கூட்டணியைப் பேசி முடித்ததில், தனக்கான முதல் அசைன்மென்ட்டை முடித்திருக்கிறார் கனிமொழி. இவர்களைத் தவிர்த்து, பா.ம.க–வை உள்ளே கொண்டு வர முயன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலர், அதில் தோல்வியடைந்து அதிருப்தியில் உள்ளனர்.  பா.ஜ.க–வுக்கு அ.தி.மு.க கூட்டணியில் ஐந்து சீட்டுகள் மட்டுமே என்றதும், காங்கிரஸ் கையில் 10 சீட்டுகளைக் கொடுத்து தாராளம் காட்டியுள்ளார் மு.க.ஸ்டாலின். இதில், காங்கிரஸ் கட்சியினரைவிட அ.தி.மு.க தலைமைக்கே அதிக மகிழ்ச்சி. தங்களது கூட்டணியில் பா.ஜ.க நிற்கும் ஐந்து தொகுதிகளிலும் அக்கட்சி தோற்று விடுமென்றே நம்பும் அ.தி.மு.க தலைமை, தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் நிறுத்தப்படும் 10 தொகுதிகளில் தாங்கள் எளிதாக ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறது.

கூட்டணிக்குள் ஒரே ஒரு கட்சியுடன் மட்டுமே பேச்சு முடிந்துள்ளது. இதுவரை கூடவே இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கொ.ம.மு.க என இன்னும் பல கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதிலும், எதிர்பார்க்கும் தொகுதிகளை வழங்குவதிலும் எக்கச்சக்கமான சவால்களை தி.மு.க தலைமை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதிலாவது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளித்து, சரியான அணுகுமுறையுடன் கூட்டணித் தலைவர்களிடம் பேசுவது அவசியம். அ.தி.மு.க–வைப் போலவே ‘அவுட்சோர்சிங்’ தலைவர்களை வைத்து, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது, ஏற்கெனவே பலவீனமாகக் கருதப்படும் ஸ்டாலினின் தலைமையைக் குறித்த வாதங்களுக்கு வலுச்சேர்க்கும். இப்போதே, இத்தனை தலையீடு என்றால், ஆட்சி, அதிகாரத்துக்கு வந்துவிட்டால், இவர்களின் ஆதிக்கம் எப்படியிருக்குமோ என்று தி.மு.க–வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் அச்சப்படும் சூழ்நிலை இப்போது வந்துவிட்டது. இந்த பயம், கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டால், இந்தத் தேர்தலிலேயே தி.மு.க கூட்டணிக்கு பலத்த அடி கிடைக்க வாய்ப்புண்டு.

மு.க.ஸ்டாலினின் அணுகுமுறை குறித்தும் ஆயிரம் விமர்சனங்கள் எழுகின்றன. ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று முழங்கிய ராமதாஸ், இப்போது அ.தி.மு.க–வின் பின்னால் போனதற்கு, வேறு எத்தனை காரணங்கள் இருந்தாலும், ராமதாஸிடம் மு.க.ஸ்டாலின் காட்டிய வெறுப்புதான் முக்கிய காரணம் என்கிறார்கள் பா.ம.க நிர்வாகிகள். ‘‘கருணாநிதி மறைவுக்குப் பின், தி.மு.க தலைவரானதும் நல்லகண்ணு உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்த ஸ்டாலின், எங்களது நிறுவனரைச் சந்திக்கவே இல்லை. இத்தனைக்கும், கருணாநிதியை அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்பதற்காக, பா.ம.க தனது வழக்கை வாபஸ் பெற்றிருந்தது. அதை மறந்துவிட்டு, ஸ்டாலின் காட்டிய வெறுப்புதான்,
அ.தி.மு.க–வை நோக்கி ராமதாஸ் செல்வதற்கான முக்கிய காரணம்’’ என்கிறார் பா.ம.க மூத்த நிர்வாகி ஒருவர். 

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, கருணாநிதி மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால், அவரது வழிகாட்டுதல் இன்றியே, அந்தத் தேர்தலை எதிர்கொண்டார் ஸ்டாலின். அதில் கணிசமான வெற்றி கிடைத்தாலும், ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பை நழுவ விட்டார். கருணாநிதி இல்லாமல், ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் என்ற வகையில், இதில் அவரது அணுகுமுறை, பரப்புரை, வெற்றி தோல்வி அனைத்தும் தமிழகம் முழுவதும் விரிவாக விவாதிக்கப்படும். அவரது அரசியல் எதிர்காலத்தையும் அது நிர்ணயிக்கும். என்ன செய்யப்போகிறாரோ ஸ்டாலின்?

தினகரனின் திசை என்ன?

தனது எல்லா வியூகங்களையும் கனவுகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாகிவிட்ட இ.பி.எஸ் -–ஓ.பி.எஸ் கூட்டணியை முறியடிப்பது மட்டும்தான், டி.டி.வி.தினகரனுக்கு இந்தத் தேர்தலில் இருக்கும் ஒற்றை அஜென்டா. தென் மாவட்டங்களில் கணிசமாகவுள்ள தேவர் சமுதாயத்தின் வாக்குகளை மட்டுமே நம்பி, அவர் களமாடப்போகிறார் என்பதுதான் அ.ம.மு.க–வுக்கான பலமும் பலவீனமும்.  அ.தி.மு.க வாக்குவங்கியைக் குறைப்பதே, அவரது பரப்புரையின் மையப்பொருளாக இருக்குமென்று எதிர்பார்க்கலாம். ஆனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்க்கும் வைட்டமின் ‘ப’வைத் தர இயலாத சூழலில் அவர் இருப்பதால், நினைக்கும் அளவுக்கு வாக்குகளை அறுவடை செய்வது, சிரமம்தான். அதேநேரத்தில், அ.தி.மு.க–வுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை தி.மு.க–வுக்கு திசை மாற்றி விடலாம்.

ரஜினியும் கமலும்

நாட்டை ஆளும் நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இந்தத் தேர்தலில், ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று ஒதுங்கிக்கொண்டார் ரஜினி. ஆனால், திருவாரூர் சென்று குடும்ப அரசியலை எதிர்த்துப் பொதுக்கூட்டம் நடத்தி, தனது அரசியல் பிரவேசத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் கமல்ஹாசன். அவர் ‘நான் பி.ஜே.பி-யின் பி டீம் இல்லை’ என்று சொல்வதை, எத்தனை பேர் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. உடன்பிறப்புகளை அவர் உரசுவது, தி.மு.க–வை பாதிக்குமா என்பதை இப்போது கணிப்பது மிகவும் கஷ்டம். மேலும், மக்கள்நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கப்போவதாகப் பாரிவேந்தர் அறிவித்துள்ளது, கமல்ஹாசன் ரசிகர்களையே கலங்கவைத்துள்ளது. இப்போதைக்கு கமல்ஹாசனுடன் எந்தப் பெரிய கட்சியும் கூட்டணி சேர்வதாகத் தெரியவில்லை. சினிமாவில் சிவாஜியைப் பின்பற்றும் கமல்ஹாசனுக்கு அரசியலிலும் அதே முடிவு கிடைக்குமா அல்லது வென்று காட்டுவாரா ‘நம்மவர்’ என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.

ஒட்டு மொத்தமாய்க் குழம்பியிருக்கும் தமிழக அரசியல் குட்டையில் எத்தனை பேருக்கு எத்தனை மீன்கள் கிடைக்குமென்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஒன்றுமட்டும் தெரிகிறது... கழகங்கள் கார்ப்பரேட் பாணியில் தேர்தலை எதிர்கொள்வதால், எந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கப்போகிறதோ... தோல்வி மக்களுக்கும்ஜனநாயகத்துக்கும்தான்!

சே.சேவியர் செல்வகுமார்