Published:Updated:

சி.பி.ஐ - பி.ஜே.பி - மம்தா பானர்ஜி... யார் செய்தது தவறு?

சி.பி.ஐ - பி.ஜே.பி - மம்தா பானர்ஜி... யார் செய்தது தவறு?
சி.பி.ஐ - பி.ஜே.பி - மம்தா பானர்ஜி... யார் செய்தது தவறு?

மேற்கு வங்காளத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் விசாரணை செய்ய வந்ததைக் கண்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அதிகாரிகளுடன் இரவு முழுக்க தர்ணா போராட்டம் நடத்தினார். மம்தா பானர்ஜியின் இந்தப் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் பல கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து, இந்திய அரசியலின் முக்கியமான இரவாக மாற்றிவிட்டனர். மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்த ‘ரோஸ் வாலி சிட்பண்ட்’ மோசடி மற்றும் சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்குகள் ராஜீவ் குமார் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக ராஜீவ் குமார் செயல்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சிட்பண்ட் வழக்குகளை விசாரித்த ராஜீவ் குமார் தற்போது கொல்கத்தா மாநகரக் காவல்துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார். சிட்பண்ட் மோசடி வழக்குத் தொடர்பாகப் பலமுறை சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவரை விசாரிக்க மேற்கு வங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். சி.பி.ஐ அதிகாரிகளை அருகில் இருந்த காவல்நிலையத்தில் காத்திருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், சி.பி.ஐ அதிகாரிகள் சிலர் ராஜீவ் குமார் வீட்டுக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சி.பி.ஐ அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து இதர காவல்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ராஜீவ் குமார்வீடு நோக்கி விரைந்தனர்.

இதற்கிடையே, சி.பி.ஐ அதிகாரிகளின் வரம்பு மீறலைக் கண்டித்து, முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ-க்கு வழங்கியிருந்த அதிகாரத்தை நீக்கியுள்ள நிலையில், மாநில எல்லைக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி பெறுவது அவசியம். மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சி.பி.ஐ-யை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி சமீபத்தில் ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள், சி.பி.ஐ, முன்அனுமதி பெறாமல் விசாரணை நடத்த வழங்கியிருந்த அதிகாரத்தைத் திரும்பப் பெற்றன.

இந்தச் சூழலில், கொல்கத்தா சி.பி.ஐ மண்டல அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்குவங்க மாநிலக் காவல்துறை வாபஸ் பெறப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசுகையில், “சட்டம் - ஒழுங்குப் பிரச்னை என்பது மாநில அரசுகளோடு சம்பந்தப்பட்டது. அதில் மத்திய அரசு தலையிடுவது என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. பிரதமர் மோடியும் பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் சேர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதி வழங்காதது தொடர்பாக, நீதிமன்றத்தை நாடியுள்ளது சி.பி.ஐ. விசாரணைக்குச் சென்ற சி.பி.ஐ குழுவினர் மேற்கு வங்காள ஆளுநரைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பல்வேறு மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆளுநர் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறிவருகின்றனர்.

அதேநேரத்தில் ரோஸ் வாலி சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.பி-க்கள் சுதீப் பந்தோபாத்யா, தபஸ்பால் ஆகியோர் ஏற்கெனவே சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சொல்லித்தான் அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. ஆனால், அதே ராஜீவ் குமாரைத்தான், மம்தா பானர்ஜி, `நாட்டின் தலைசிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஓய்வுபெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தம்மன், “சி.பி.ஐ அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அதற்கான சரியான வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மேற்கு வங்கம் அரசு அனுமதி பெறாமல் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால், அந்த மாநில அரசிடம் முதலில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த மாநில அரசு, அனுமதி வழங்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடி உரிய காரணங்களை எடுத்துச் சொல்லி வாரன்ட் வாங்குவது அவசியம். இந்த மாதிரியான எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் விசாரிக்கச் சென்றது சி.பி.ஐ அதிகாரிகள் செய்த தவறு.

மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி-தான் கடந்த 2017-ம் ஆண்டு 'ஜாய்ன்ட் செகரட்டரி மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரிகளை அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது' என்ற நடைமுறையைக் கொண்டு வந்தது. அதேபோல் விசாரணைக்கு என நேரக் கட்டுப்பாடுகள் உள்ளன, யாரையும் இரவு நேரங்களில் கைது செய்யவோ விசாரணை நடத்தவோ அனுமதியில்லை. ஆனால், சி.பி.ஐ அதிகாரிகள் 10 மணிக்கு விசாரணைக்குச் சென்றுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த காவலர்கள் விசாரணை செய்வதற்கு உரிய வாரண்டைக் கேட்பது வழக்கமானது. அது இல்லாததால்தான் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். உரிய அனுமதி பெறாமல் விசாரணைக்குச் சென்றது சி.பி.ஐ அதிகாரிகளின் தவறுதான்” என்றார்.

அதிகார பகிர்வுகள் குறித்த சர்ச்சை உடனடியாக முடிவுகளை நோக்கி நகர்தல் அவசியம்..!