Published:Updated:

`குடும்பத்தைக் கவனிக்காதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது!' - மோடியைச் சீண்டுகிறாரா கட்கரி?

மோடி, தன் மனைவியை இளம் வயதிலேயே பிரிந்தது குறித்து அவரது அரசியல் எதிரிகளால் விமர்சிக்கப்படும் நிலையில், தற்போது சொந்தக் கட்சிக்குள் இருந்தே மோடியைச் சீண்டும் விதமான கருத்து வெளிப்பட்டிருப்பது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

`குடும்பத்தைக் கவனிக்காதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது!' - மோடியைச் சீண்டுகிறாரா கட்கரி?
`குடும்பத்தைக் கவனிக்காதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது!' - மோடியைச் சீண்டுகிறாரா கட்கரி?

'தன்னுடைய குடும்பத்தைக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது, பிரதமர் நரேந்திர மோடியைச் சீண்டுவதாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், கட்கரியின் இந்தப் பேச்சுக்காக அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். 

`குடும்பத்தைக் கவனிக்காதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது!' - மோடியைச் சீண்டுகிறாரா கட்கரி?

சமீப காலமாக, மோடிக்கு மாற்றாக நிதின் கட்கரியை முன் நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் மோடி, மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருந்தபோது, " வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை முன்னிறுத்துங்கள்" என  விவசாயிகளுக்குப் பயிர்க்கடன்கள் வழங்குவதற்காக மகாராஷ்டிரா அரசால் ஏற்படுத்தப்பட்ட  வி.என்.எஸ்.எஸ்.எம் என்ற அமைப்பின் தலைவர்  கிஷோர் திவாரி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த  கட்கரி, " நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளைத் தேர்தலில் அரசியல்வாதிகள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று சமீபத்தில்  பேசியிருந்தார். இதுவும் பா.ஜ.கவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்தநிலையில், நாக்பூரில் நடைபெற்ற பா.ஜ.கவின்  மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப்பேசிய நிதின் கட்கரி, "என்னைச் சந்திக்கும் பல பா.ஜ.க தொண்டர்கள், தங்கள் வாழ்க்கையைக் கட்சிக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில், நான் ஒரு பா.ஜ.கத் தொண்டரைச் சந்தித்தேன். அப்போது அவரிடம், `நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நான் சிறிய கடை ஒன்று நடத்தினேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்தக் கடையை மூடிவிட்டேன்' என்றார். அவருடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, மனைவியும், ஒரு குழந்தையும் இருப்பதாகக் கூறினார்.

நான் அவரிடம் கூறினேன், `முதலில் உன் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள். ஏனென்றால், குடும்பத்தை நன்றாகக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது. ஆதலால், முதலில் உன்னுடைய குடும்பத்தை நன்றாகக் கவனி, குழந்தைகள் நலனில் அக்கறையாக இரு, அதன்பின் கட்சியையும் நாட்டையும் கவனிக்கலாம்' என்று தெரிவித்தேன் " என்று கூறினார். 

`குடும்பத்தைக் கவனிக்காதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது!' - மோடியைச் சீண்டுகிறாரா கட்கரி?

கட்கரியின் இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  அவர் மோடியைச் சீண்டும் விதமாகப் பேசியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். மோடி, தன் மனைவியை இளம் வயதிலேயே பிரிந்தது குறித்து, அவரது அரசியல் எதிரிகளால் விமர்சிக்கப்படும் நிலையில், தற்போது சொந்தக் கட்சிக்குள் இருந்தே மோடியை மீண்டும் சீண்டும் விதமான கருத்து வெளிப்பட்டிருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், எரியும் தீயில் எண்ணெய் வார்க்கும் விதமாக, கட்கரியின் இந்தப் பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரைப் பாராட்டியுள்ளார். 

இது தொடர்பாகத்  தனது ட்விட்டர் பக்கத்தில், பா.ஜ.கவில் சிறிதளவு தைரியம் கொண்ட ஒரே நபர் நிதின் கட்கரிதான். ரஃபேல் விவகாரம், விவசாயிகளின் துயரம் மற்றும் சி.பி.ஐ, ஆர்.பி.ஐ போன்ற நிறுவனங்களின் அழிவுகுறித்தும் அவர் பேச வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். ராகுலின் இந்தக் கருத்து, பா.ஜ.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, கட்கரி மீதும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.