Published:Updated:

`தினகரன் வந்தால் அவருடனும் பேசுவோம்!' - கூட்டணி கறார் பா.ம.க.

சில கட்சிகள் கூட்டணிக்காக எங்களை நிர்பந்திக்கும் வேலைகளையும் செய்கின்றன. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் 3 வார காலம் அவகாசம் இருக்கிறது.

`தினகரன் வந்தால் அவருடனும் பேசுவோம்!' - கூட்டணி கறார் பா.ம.க.
`தினகரன் வந்தால் அவருடனும் பேசுவோம்!' - கூட்டணி கறார் பா.ம.க.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிக் குழப்பங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. `தேசியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை' என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்குப் பதில் கொடுத்த ஜெயக்குமார், `தேசியக் கட்சி என்றால் பா.ஜ.க மட்டும் அல்ல' என்றார். `பா.ஜ.க அணி தேவையா?' என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் அ.தி.மு.க-வுக்குள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக அன்புமணி தெரிவித்த கருத்துக்களும் விவாதப் பொருளாகியிருக்கின்றன. 

வடசென்னையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலக திறப்புவிழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸிடம், ‘மக்களவைத் தேர்தலில் பா.ம.க யாருடன் கூட்டணி அமைக்கும்? தி.மு.க, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளதே?’ என செய்தியாளர்கள் கேட்டனர். ‘பேசிக் கொண்டிருக்கிறோம். முடிவுகள் வந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்போம்' என்றார். அவரது இந்தக் கருத்து தி.மு.க-வுடனும் பா.ம.க பேசிவருவதைப் போன்ற தொனியை ஏற்படுத்திவிட்டது. 

``பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்குமா என்பது குறித்து பிப்ரவரி 8-ம் தேதி நடக்க இருக்கும் மா.செ-க்கள் கூட்டத்தில் தெரிந்துவிடும். சொல்லப் போனால், அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. அதேநேரம், பிற கட்சிகளுடன் அ.தி.மு.க தலைமையில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பா.ம.க-வுடன் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். காரணம், ஓட்டு வங்கியை நிரூபித்த கட்சியாகவும் காங்கிரஸ் கட்சியைவிடவும் செல்வாக்கு இருக்கும் கட்சியாகவும் பா.ம.க-வை அவர் பார்க்கிறார். தவிர, பா.ம.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் ஸ்டாலினுக்கு எதிரி நாம்தான் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாகிவிடும் எனவும் நம்புகிறார். எனவே, இப்போது வரையில் பேச்சுவார்த்தையில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. படையாட்சியாருக்கு மணிமண்டபம், வன்னியர் நல வாரியம் அமைத்தது ஆகியவற்றோடு பா.ம.க-வுடன் கூட்டணி அமைந்தால் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளை வெல்ல முடியும் எனவும் ஆளும்கட்சி கணக்கு போடுகிறது. `பா.ம.க வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வந்து சேரும்' எனவும் உறுதியாக நம்புகிறார்" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

``ஆனால், பா.ம.க தரப்பிலோ வேறுவிதமாகக் கணக்கு போடுகிறார்கள். `உங்கள் வாக்குகள் எங்களுக்கு வந்து சேருமா?' என்பதுதான் அவர்களின் சந்தேகம். இதுதொடர்பாக, பா.ம.கவின் முக்கிய நிர்வாகிகளிடம் நடந்த பேச்சுவார்த்தையில், `ராஜ்யசபா சீட்டைத் தர வேண்டும். ஆனால், அதைப் பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடக் கூடாது. ஜெயலலிதா போல உத்தரவாதம் கொடுத்துவிட்டு ஏமாற்றக் கூடாது. 6 பிளஸ் 1 என்ற அளவில் சீட்டுகளை ஒதுக்க வேண்டும்' எனக் கூறியதாகத் தகவல் வந்தது. இதற்குப் பதில் கொடுத்த அ.தி.மு.க நிர்வாகிகளோ, `சிதம்பரம் தொகுதியில் நீங்கள் நின்றால், திருமாவளவன் ஜெயித்துவிடுவார். அதனால் எங்களுக்கு அந்தத் தொகுதியை எடுத்துக் கொள்கிறோம். முக்கியமான தொகுதி எனக் கூறி சிதம்பரத்தைக் கேட்க வேண்டாம். ஆரணி உங்களுக்கு என்றால், அரக்கோணத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். முதல் மூன்று சீட்டுகளை நல்ல இடங்களாகப் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது, டாப் ஆர்டரில் 1, 3, 5 ஆகிய தொகுதிகளோடு பாண்டிச்சேரியையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். கொங்கு பெல்ட்டில் தருமபுரியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். டாப் ஆர்டர் என எடப்பாடி பழனிசாமி பார்ப்பது, 2016 தேர்தலில் பா.ம.க எடுத்த வாக்குகளின் அடிப்படையில்தான். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியில் வரும்" என்றார் விரிவாக. 

அ.தி.மு.க தரப்பில் இருந்து வெளிவரும் தகவல்களை மறுத்துப் பேசும் பா.ம.க மாநில நிர்வாகி ஒருவர், ``கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க மட்டும் அல்ல, தினகரன் வந்தால் அவருடனும் பேசுவோம். கூட்டணிக்கான எங்களுடைய கதவுகள் திறந்தே இருக்கின்றன. எங்களுடைய செல்வாக்கை நிரூபிப்பதற்கான தேர்தலாகத்தான் இதைப் பார்க்கிறோம். எனவே, கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவுக்கும் நாங்கள் வரவில்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணியா என்பதை இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. இரண்டு தரப்புமே எங்களிடம் பேசி வருகின்றன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகே, இறுதி முடிவைத் தலைமை அறிவிக்கும்" என்றவர், 

``இந்தத் தேர்தலை திருப்புமுனை தேர்தலாகப் பார்க்கிறோம். `தேசிய அரசியலுக்கு யார் வர வேண்டும், மாநில அரசியலுக்கு யார் வர வேண்டும்' என்பதைத் தீர்மானிப்பதில் வல்லவர்களாக தமிழக வாக்காளர்கள் இருக்கிறார்கள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாநிலங்களின் உரிமையைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயல்பட வேண்டும். மாநிலக் கட்சிகளை மதிக்கக் கூடியவர்கள்தான், டெல்லியின் அதிகாரபீடத்தில் அமர வேண்டும். அதனை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. பா.ம.க யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த அணி பலம் பொருந்தியதாக மாறிவிடும். சில கட்சிகள் கூட்டணிக்காக எங்களை நிர்பந்திக்கும் வேலைகளையும் செய்கின்றன. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் 3 வார காலம் அவகாசம் இருக்கிறது" என்றார் நிதானமாக.