Published:Updated:

``இந்திரா காந்தி - மோடி... என்ன வேறுபாடு?" - ராகுல் காந்தி

``இந்திரா காந்தி - மோடி... என்ன வேறுபாடு?" - ராகுல் காந்தி
``இந்திரா காந்தி - மோடி... என்ன வேறுபாடு?" - ராகுல் காந்தி

தன் பாட்டியும், மறைந்த முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை தற்போதைய பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு வெளியாகக்கூடிய தகவல்களுக்கு ராகுல் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

`` `இந்தியாவின் இரும்புப் பெண்மணி' என்று புகழப்பட்ட இந்திரா காந்தியின் ஆட்சியுடன், பிரதமர் மோடியின் ஆட்சியை ஒப்பிடுவது சரியல்ல" என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழ்நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசின் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், பி.ஜே.பி. சார்பில் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றி, பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்று கூறுவதைப் போல, அரசின் நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், அந்தந்த மாநிலங்களின் பி.ஜே.பி. சார்பில் பொதுமக்களைத் திரட்டி, மத்திய அரசின் சாதனை எடுத்துக்கூறி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் மோடி.

`பி.ஜே.பி-க்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல' என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மூன்று மாநிலங்களில் பி.ஜே.பி-யிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய சூட்டோடு சூடாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தையும் முடுக்கி விட்டுள்ளார் ராகுல் காந்தி.

``இந்திரா காந்தி - மோடி... என்ன வேறுபாடு?" - ராகுல் காந்தி

பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு இடையே டெல்லியில் பிரபல நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த ராகுல், ``பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்கால், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்களும் குறிப்பாக தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்புகள், மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. மோடியைப் பொறுத்தவரை, பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்ததைப் போன்று, தன்னை `இந்தியாவுக்கே கடவுள்' என்று நம்பிக்கொண்டிருக்கிறார்" என்று மோடி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும், தன் பாட்டியும், மறைந்த முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை தற்போதைய பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு வெளியாகக்கூடிய தகவல்களுக்கு ராகுல் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

அவர் மேலும், ``மோடியின் பேச்சுகளைப் போன்ற அணுகுமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அதில் நம்பிக்கையும் இல்லை. இந்திரா காந்தியை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல; அதுபோன்று ஒப்புமைப்படுத்துவது, இந்திரா காந்தியை அவமதிக்கும் செயல்" என்று மறுத்தார்.

``இந்திரா காந்தி - மோடி... என்ன வேறுபாடு?" - ராகுல் காந்தி

``என் பாட்டி இந்திரா எடுத்த முடிவுகள் அனைத்தும், நாட்டு மக்கள் மீதான அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. இயற்கையை ஒன்றிணைக்கும் வகையில் அவரின் பணிகள் அமைந்திருந்தன. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து பயணித்த இந்திரா காந்தி, இந்தியாவில் ஏழை மக்களின் பிரச்னைகளைக் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து அறிவித்தார்.

ஆனால், மோடியின் முடிவுகளோ கோபம் மற்றும் வெறுப்புஉணர்வின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. மோடி எடுக்கும் முடிவுகள், நாட்டைப் பிளவுபடுத்துகின்றன. ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் மீது மோடிக்கு எந்தப் பரிவும் கிடையாது. ஆனால், `மோடியின் திட்டங்கள் ஏழை மக்களை நோக்கியவை' என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் மத்திய அரசு நிறைவேற்றும் திட்டங்கள், இந்திரா காந்தி கொண்டுவந்த திட்டங்களுக்கு இணையானவை என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இரும்புக்கரத்துடன் இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா, தன் கட்சியிலும் பிரிவினை இல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்திராவின் ஆட்சிக் காலத்தில் பிரதமர் அலுவலகம் எவ்வாறு அதிகார மையமாகச் செயல்பட்டதோ, அதேபோன்று இப்போதும் மோடியின் ஆட்சியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்கின்றனர். இந்திராவின் நடவடிக்கைகளைப் போன்றே, பிரதமர் மோடியின் இப்போதைய செயல்பாடுகள் இருப்பதாகக் கூறுவதில் எந்த உடன்பாடும் இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், அவரின் விருப்பங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் திணித்ததைப் போன்று, மோடியும் செயல்படுகிறார் என்று கூறப்படுவதும் தவறு" என்றார் ராகுல் காந்தி.

``இந்திரா காந்தி - மோடி... என்ன வேறுபாடு?" - ராகுல் காந்தி

மேலும், ``நாங்களும் ஆட்சியில் இருந்துள்ளோம். எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளோம். இந்தியாவில் மதச்சார்பற்ற கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதற்கோ, அத்தகைய அமைப்புகள் சீர்குலைவதற்கோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் காரணமாக இருந்ததில்லை. இந்தியாவின் மூலாதாரமாகத் திகழ்வது மதச்சார்பின்மைதான். இந்தியாவைவிட மோடி பெரியவர் அல்ல. அனைத்தையும்விட, அனைவரையும்விட இந்தியாவே மிகவும் பெரியது" என்றார் ராகுல் மிகத்தெளிவாக.

``இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா" என 1974-ம் ஆண்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் பரூவா சொன்னதை ராகுல் காந்தி மறந்துவிட்டார் போலும்...

அடுத்த கட்டுரைக்கு