Published:Updated:

`அந்த நாள் வரட்டும்; அன்று முடிச்சு அவிழ்க்கப்படும்!'- ஓபிஎஸ் குறித்து சசிகலா வக்கீல்

`அந்த நாள் வரட்டும்; அன்று முடிச்சு அவிழ்க்கப்படும்!'- ஓபிஎஸ் குறித்து சசிகலா வக்கீல்
`அந்த நாள் வரட்டும்; அன்று முடிச்சு அவிழ்க்கப்படும்!'- ஓபிஎஸ் குறித்து சசிகலா வக்கீல்

ஜெயலலிதா மரணம்குறித்து எங்கள் தரப்பில் ஸ்டாலின் இரண்டாவது சாட்சியாக வருவார். ஓ.பி.எஸ்-ஸை முதல் சாட்சியாக விசாரிப்போம்" என்று சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பி-க்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர் இன்றுவரை ஆணையத்தில் ஆஜராகவில்லை. ஆணையம் செயல்பட்டுவரும் சென்னை எழிலகத்தில், இன்று  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

``ஆறுமுகசாமி ஆணையத்தில் உங்களது குறுக்கு விசாரணை எப்போது முடியும்?''

``சாட்சியை விசாரிக்க மாட்டோம். பத்து நாளில் விசாரணையை முடித்துவிடுவோம். அதாவது, பிப்ரவரி 11 அல்லது 12-ம் தேதி, ஓ.பி.எஸ் வருவார் என்று நம்புகிறோம்.''

``ஓ.பி.எஸ்-ஸுடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஓ.பி.எஸ் தாமதப்படுத்தும் வகையில் இனி ஆணையம் விசாரணை கிடையாது, உங்கள் தரப்பு விசாரணை மட்டுமே இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?''

``அப்படித்தான் எடுத்துக்கொள்ளலாம். ஓ.பி.எஸ்-ஸை ஆணையம் விசாரிக்கும்போது என்ன செய்ய முடியும். ஆனால், எங்கள் தரப்பில் ஸ்டாலின் இரண்டாவது சாட்சியாகவருவார். ஓ.பி.எஸ்-ஸை முதல் சாட்சியாக விசாரிப்போம். எங்களுக்கு இடம் இருக்கு. நாங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்கள் எல்லாம் எங்கள் சாட்சியா. எங்கள் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டியவர்களை நாங்கள் சொல்கிறோம். ஒருவேலை ஓ.பி.எஸ்-ஸிடம் ஆணையம் விசாரிக்க ஏதாவது தாமதமோ. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சொல்கிற மாதிரி முடியும் தருவாய் ஏற்பட்டால், உறுதியாக ஓபிஎஸ் எங்கள் சார்பில் விசாரிக்கப்படுவார்.''

``அப்போலோ தரப்பில் டாக்டர்கள் வரமாட்டார்கள் என்று உயர் நீதிமன்றத்தை அவர்கள் நாடினால், ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?''

``அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெளிவாகச் சொல்கிறது. ``எங்களைப் பொறுத்தவரை மெடிக்கல் விட்னஸுக்குத்தான் போறோம்" என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்போலோ தாக்கல்செய்தது நியாயமான பெட்டிஷன். ஆனால், தாமதமான பெட்டிசன். வி.கே.சசிகலாவைப் பொறுத்தவரை இந்த ஆணையம் அமைக்கப்பட்டபோது எங்களுக்கு 8பி-யில் நோட்டீஸ் சார்பு செய்யப்பட்ட பிறகு ஒரு சத்தியப்பிரமாண வாக்குமூலம் தாக்கல்செய்தோம். அதில், `ஆணையம் தொடங்கப்பட்டது குறித்து வரவேற்கிறேன். இப்படி ஒரு ஆணையம் அமைக்கப்படுவது தொடர்பாக எனக்கு எந்தத் தடையும் கிடையாது. மிச்சம் இருக்கக்கூடிய சந்தேகங்களை நிவர்த்திபெறுவதற்காக, வதந்திகள் முற்றுப்பெறுவதற்காக உறுதியாக ஆணையம் விசாரிக்கப்படணும்... அமைக்கப்படணும் என்று சொல்லியிருந்தாங்க. எங்கள் தரப்பைப் பொறுத்தவரைக்கும் ஆணையம் அமைக்கப்பட்டதுகுறித்து எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இந்த நொடி வரை நீதியரசர் மீதும் ஆணையத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.'' 

``பிப்ரவரி 11-ம் தேதி விசாரணைக்கு யாரை வரச் சொல்கிறார்கள், 12-ம் தேதி யாரை வரச்சொல்கிறார்கள்?''

``11-ம் தேதி, அப்போலோ டாக்டர்களை வரச் சொல்வதற்காகத் தேதி குறிப்பிட்டிருக்காங்க. இடைப்பட்ட காலகட்டத்தில், உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதை எதிர்பார்க்கிறேன் என்று ஆணையத்தின் நீதிபதி சொல்கிறார். எது எப்படி இருந்தாலும் சரி, அப்போலோ எப்படி எடுத்துட்டுப்போனாலும் சரி, தாமதமாகும் பட்சத்தில் ஓ.பி.எஸ்-ஸை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வரும் 11-ம் தேதி வலியுறுத்துவோம். இடைப்பட்ட தாமதம் என்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆணையத்திடம் சென்று கேட்டால் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நான் நேரடியாகவே வைத்தேன்.''

``சசிகலா தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அதுவே, போதுமானதாக இருக்கும்பட்சத்தில்,, அவர்களிடம் ஆணையம் தரப்பில் விசாரணை நடத்தவில்லையா?''

``அவர்கள் தரப்பில் விசாரிக்க முடிவு பண்ணிட்டாங்கன்னா யாரும் தடுக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை எந்த விதமான ஆதாரங்களும் இல்லாத தருவாயில், 55 பக்க அபிடெவிட்டுக்கு என்ன போட்டிருந்தோமோ, அதை உண்மையாக மெய்ப்பிக்கும் வண்ணம் வரக்கூடிய சாட்சிகள், குறிப்பாக அரசு சாட்சிகள் மனோஜ்பாண்டின், மருது அழகுராஜ், தம்பிதுரை, பொன்னையன், விஜயபாஸ்கர் ஆகியோர். சாட்சிகள் சொன்னதிலிருந்தும் இன்னும் கொஞ்சம் பதில் சொல்லப்படாமல் இருக்கிறது. அது, ஓ.பி.எஸ் வருகிற அன்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்ட கேள்விக்கு எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுவிடும்.''

''ஓ.பி.எஸ் தொடர்ந்து தாமதமாவதற்கு என்ன பின்னணி?''

``பின்னணி இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் இப்படிச் சொல்லியிருக்காங்களே என்று நீங்கள் கேட்பீர்கள். அதனால்கூட இருக்கலாம்.''