Published:Updated:

5 கிலோ குறைந்து 6-வது நாளாக உண்ணாவிரதம்! அன்னா ஹசாரே கவனிக்கப்படாதது ஏன்?

5 கிலோ குறைந்து 6-வது நாளாக உண்ணாவிரதம்! அன்னா ஹசாரே கவனிக்கப்படாதது ஏன்?
5 கிலோ குறைந்து 6-வது நாளாக உண்ணாவிரதம்! அன்னா ஹசாரே கவனிக்கப்படாதது ஏன்?

மக்களை நேரடியாகப் பாதித்த அரசின் எந்தவொரு திட்டத்தையும், அரசின் பாராமுகத்தையும் கண்டித்து போராட்டம் நிகழ்த்தாத ஹசாரே, இப்போது `தேசிய அளவில் லோக்பால் அமைப்பையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும்' என்ற தன்னுடைய பழைய ஆயுதத்தையே கையில் எடுத்துக்கொண்டு களமிறங்கியுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதியன்று, டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. தொடர்ந்து ஆறாவது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்துவருவதால் அவருடைய உடல் எடை 5 கிலோவுக்கும் மேல் குறைந்துவிட்டது. ஹசாரேயின் ரத்த அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

என்றாலும், 2011-ல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, நாடு முழுவதிலுமிருந்து அவருக்குக் கிடைத்த எழுச்சியும், ஆதரவும் இந்த முறை கிடைக்கவில்லை. இப்போது அவர் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் பேசு பொருளாகவில்லை. 2011-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது, ஹசாரே நடத்திய உண்ணாவிரதம், `நாட்டின் இன்னொரு சுதந்திரப் போராட்டம்' போன்ற எழுச்சியை மக்களிடத்தில் உண்டுபண்ணியது. 

சமூக ஆர்வலர்  மேதா பட்கர், இப்போது டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கேஜ்ரிவால், புதுவை ஆளுநராக இப்போது பதவி வகிக்கும் கிரண்பேடி போன்றோர் ஹசாரே போராட்டத்தில் இணைந்தது, இந்திய அளவில் பெரும் பரபரப்பையும், சலனத்தையும் ஏற்படுத்தியது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதே ஹசாரேதான் இப்போதும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இத்தனைக்கும் இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில் ஹசாரே மீது எவ்விதக் குற்றச்சாட்டுகளோ, அவரின் அரசியல் நேர்மையின் மீது களங்கமோ ஏற்படவில்லை. 

இந்தச் சூழ்நிலையில், கடந்த 6 நாள்களில் அவருடைய உண்ணாவிரதத்தால் 5 கிலோ எடை குறைந்து மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும், எந்தவோர் அரசியல் தலைவர்களோ, மத்திய அரசின் சார்பில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஹசாரே குறித்து எந்தவிதக் கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழல் நமக்கு உணர்த்த வரும் செய்தி என்ன என்பது மிகவும் முக்கியமானது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது, வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக டெல்லியில் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம், சமூக ஆர்வலர்களை மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து கைது செய்வது, பசுக் காவலர்கள் என்ற பெயரில் மத அடிப்படைவாதிகள் நிகழ்த்திய வன்முறை போன்றவை நாடு முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்து வரும் சம்பவங்களை அனைவரும் அனுபவித்துக்கொண்டுதான் உள்ளோம். இந்தப் பாதிப்புகள் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லலை என்று சொல்லலாம்.

மத்திய பி.ஜே.பி. அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் போதெல்லாம் ஹசாரே எங்கே இருந்தார்? ஏன் அவர் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை? நேரடி அரசியலில் அவர் இறங்கவில்லை என்பன போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. அரசியல் என்பது ஒரு தொடர் செயல்பாடு. ஹசாரே அதைத் தொடர்ந்தாரா என்றால் இல்லை. மக்களை நேரடியாகப் பாதித்த அரசின் எந்தவொரு திட்டத்தையும், அரசின் பாராமுகத்தையும் கண்டித்து போராட்டம் நிகழ்த்தாத ஹசாரே, இப்போது `தேசிய அளவில் லோக்பால் அமைப்பையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும்' என்ற தன்னுடைய பழைய ஆயுதத்தையே கையில் எடுத்துக்கொண்டு களமிறங்கியுள்ளார். அவரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த ஹசாரே, இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் திடீரென்று புத்துயிர் பெற்றவர் போன்று வருவதன் பின்னணி என்ன என்ற கேள்வி நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும், டெல்லியில் நூறு நாள்களுக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்ட போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக எந்தக் குரலும் எழுப்பாத ஹசாரே, தற்போது `விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பது கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக இப்போது இவர் தனியாக எழுப்பும் குரலை விவசாயிகளுடன் சேர்ந்து அப்போதே எழுப்பி இருப்பாரேயானால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தி இருக்கும். அதை அறியாதவரா ஹசாரே?

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம், `ஹசாரேவின் அன்றைய உண்ணாவிரதத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த பலரும் இப்போது அவருடன் இல்லை'. இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? 79 வயதான ஹசாரே, இந்தத் தள்ளாத வயதிலும் மக்கள் நலனுக்காக தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருப்பது எல்லா வகையிலும் வரவேற்கத்தக்கதே. என்றாலும், அவருடைய போராட்டம் குறித்த ஓர் எளிய விமர்சனமாகவே இந்தப் பதிவை முன்வைக்கிறோமே தவிர, அவருடைய நோக்கத்தைச் சந்தேகிக்கும் எண்ணம் இல்லை. எந்தவொரு சமூக ஆர்வலரையும், நீங்கள் ஏன் இதற்குப் போராட வரவில்லை என்று கேட்டுவிட முடியாதுதான். ஆனால், எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

மக்களிடம் பரபரப்பாகக் கொண்டு செல்லவேண்டிய போராட்டம் எது? எந்தப் போராட்டத்தைக் கொண்டு செல்லக்கூடாது என்பதில் ஊடகங்களும் மிகத் தெளிவாக இருக்கின்றன. அந்தப் பார்வையில், ஹசாரேவின் சமீபத்திய உண்ணாவிரத்தை அணுகும்போது, அவரின் போராட்டம் இப்போது ஊடகங்களின் வெளிச்சத்தைப் பெறாதது, ஹசாரே மீதுள்ள விமர்சனம் என்பதைத் தாண்டி, மேலும் சில செய்திகளை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு