Published:Updated:

``திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு..!'' - திருநாவுக்கரசர் வீழ்ந்த கதை

அடிக்கடி மாறிய அவரது அரசியல் ஸ்டேண்டால் ஆதரவாளர்களில் பலரையும் பறிகொடுத்தவர். நூற்றாண்டுக்கால காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பதவியை இப்போது பறிகொடுத்துள்ளார். 

``திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு..!'' - திருநாவுக்கரசர் வீழ்ந்த கதை
``திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு..!'' - திருநாவுக்கரசர் வீழ்ந்த கதை

மிழக அரசியல் களத்தில் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தலைவர், திருநாவுக்கரசர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக அரசியல் களத்தில் ஆட்டத்தை ஆரம்பித்து, அதே எம்.ஜி.ஆர் கண்ட இயக்கத்துக்கு எதிராக அரசியல் களத்தில் களமிறங்கியவர். கட்சியைத் தாண்டி தனக்கென தமிழகம் முழுவதும் ஆதரவு வட்டத்தை அலங்கரித்து வைத்திருந்தவர். அடிக்கடி மாறிய அவரது அரசியல் ஸ்டேண்டால் ஆதரவாளர்களில் பலரையும் பறிகொடுத்தவர். நூற்றாண்டுக்கால காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பதவியை இப்போது பறிகொடுத்துள்ளார். 

திருநாவுக்கரசருக்கு எது பலமாக இருந்ததோ, அதுவே அவரது பலவீனத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியிலேயே காலத்தைக் கழித்துவந்த பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு, கட்சிக்குள் வந்த ஐந்தாண்டுகளில் திருநாவுக்கரசருக்குக் கிடைத்தது. அதற்கு அவரது அணுகுமுறையும், டெல்லியில் அவர் செய்த லாபியும் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நிலையில், கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ``காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவதாகப் பேச்சு எழுந்துள்ளதே’’ எனச் செய்தியாளர்கள் அவரிடமே கேட்டனர். அப்போது எதிரில் இருந்த மேஜையைத் தட்டி, ``நாடாளுமன்றத் தேர்தல்வரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நான்தான்” என்று சொல்லி, அங்கிருந்த கட்சிக்காரர்களைக்கூட அண்ணாந்து பார்க்கச் செய்தார். ஆனால், அவர் அப்படிச் சொன்ன ஒருவாரத்திலேயே அவருடைய பதவி பறிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருநாவுக்கரசர் பதவி பறிப்புக்குப் பின்னணி என்னவென்பது குறித்து தகவல்கள் இப்போது கசிய ஆரம்பித்துள்ளன. ``காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. அதனால், கட்சியின் மாநிலத் தலைவராக யார் வந்தாலும் அவருக்கு எதிராகப் பல கோஷ்டிகள் திரண்டு, புகார்ப் பட்டியலோடு டெல்லிக்குப் படையெடுப்பது வாடிக்கை. ஆனால் அதற்கு மாறாக, திருநாவுக்கரசர் தலைவர் பதவிக்கு வந்தவுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எல்லோருமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்போது, திருநாவுக்கரசருடன் ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்கூட திருநாவுக்கரசருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் ஆரம்பத்தில் இணைந்தே பணிசெய்தார். 

ஆனால், இந்த நல்லுறவுகள் எல்லாம் சில மாதங்களே நீடித்தன. காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டவாரியாகப் புதிய பொறுப்பாளர்களைப் போடப்போவதாக திருநாவுக்கரசர் அறிவித்தார். இளங்கோவன், ``தனது ஆதரவாளர்களைப் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டாம்’’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை திருநாவுக்கரசர் ஏற்கவில்லை. பல இடங்களில் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. அதேபோல, மாநில அளவிலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். இதனால், திருநாவுக்கரசரும் காங்கிரஸ் கோஷ்டி அரசியலுக்குள் சிக்க ஆரம்பித்தார். 

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக அவர் சில கருத்துகளைச் சொன்னதும், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த தி.மு.க அனுதாபிகளை அதிர்ச்சியடையச் செய்தது. தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து செங்கோட்டைக்குச் செல்லும் கனவிலிருந்தவர்கள் களத்தில் இறங்கினர். இளங்கோவன் முதலில் டெல்லிக்குப் பறந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், டெல்லியில் இளங்கோவனைவிட திருநாவுக்கரசருக்குச் செல்வாக்கு அதிகமிருந்ததை அப்போதுதான் இளங்கோவன் தெரிந்துகொண்டதால், தலைவர் பதவியைப் பறிக்க முடியாமல் திரும்பினார். அதன்பிறகு, குஷ்பு மூலம் காய்கள் நகர்த்தப்பட்டன. அதுவும் பலனளிக்கவில்லை. அப்போதுதான், திருநாவுக்கரசருக்கு எதிராக இருந்த தலைவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் இளங்கோவன் இறங்கினார். ``நாம் ஒவ்வொருவரும் மாறிமாறிப் புகார் அளிப்பதைவிட, நாமே ஒரு தலைவர் பெயரை டெல்லிக்குப் பரிசீலிப்போம்” என்று முடிவுசெய்தார்கள். உடனடியாக பீட்டர் அல்போன்ஸ் பெயர் அப்போது அடிபட்டது. தி.மு.க-வுக்கு இணக்கமானவராக அவர் இருப்பார் என்பதால், தி.மு.க தரப்பிலும் சப்போர்ட் கிடைக்கும் என கோஷ்டித் தலைவர்கள் கணக்குப் போட்டார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு குழுவே டெல்லி சென்று ராகுலைச் சந்தித்து தலைவரை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. 

அப்போதுதான், முதன்முறையாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிலவரம்குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கருத்து கேட்டுள்ளார் ராகுல். அந்த விஷயத்தை அறிந்துகொண்ட திருநாவுக்கரசர், சிதம்பரம் வீட்டுக்கே சென்று, தன்னால் இந்தப் பதவியில் இருக்கும் நெருக்கடிகளைப் பட்டியலிட்டுப் புலம்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சிதம்பரம், ``தலைவரை மாற்றுவது குறித்து பிறகு முடிவெடிக்கலாம்’’ என்று ராகுலிடம் ஆலோசனை சொல்லியுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையே மனச்சங்கடம் ஏற்பட்டது. கே.ஆர்.ராமசாமி, பெரிதாக இந்தக் கோஷ்டி அரசியலில் சிக்கிக்கொள்ள மாட்டார். திருநாவுக்கரசரும் கே.ஆர்.ராமசாமியும் பக்கத்து ஊர்க்காரர்கள்; ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்த இருவருக்கும் இத்தனை காலம் பெரிதாக எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் எழுந்த சிக்கலை மோப்பம் பிடித்த பிற கோஷ்டித் தலைவர்கள் ராமசாமியை அணுகியுள்ளார்கள். மற்றொருபுறம், ``திருநாவுக்கரசர், அவர் சம்பந்தி இசக்கி சுப்பையாமூலம் தினகரன் தரப்புடன் ரகசிய உறவுவைத்துள்ளார்’’ என்ற செய்தியைத் தொடர்ந்து, தமிழக மேலிடப் பொறுப்பாளர்கள் காதில் போட்டுவந்தது ஒரு டீம். மேலும், சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் மகனும் சம்பந்தியும் ஆதிக்கம் செலுத்துவதாகத் தொடர்ந்து புகார் கிளம்பியது. திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனை கட்சி நிர்வாகிகள் முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் திருநாவுக்கரசர் எதிர்பார்த்தார். இது, அவருக்கு எதிரான மனநிலையை அதிகப்படுத்தியது. இந்நிலையில், `தமிழகத் தலைவர் மாற்றம் என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான்' என்று டெல்லி தலைமை முடிவு செய்திருந்த தகவல், தமிழகத்தில் இருக்கின்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

தலைவராக திருநாவுக்கரசரின் செயல்பாடுகுறித்துப் பேசும் அவருடைய ஆதரவாளர்கள், ``தலைவராகப் பொறுப்பேற்றது முதல் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்தது இவர்தான். காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதில் நன்றாகவே செயல்பட்டார். குறிப்பாக, உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தினார். காங்கிரஸ் கட்சிக்கு மாநிலம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளது. அந்தச் சொத்துகளை மீட்க, தனிக் குழுவை அமைத்தார். ஆனால், அதை முழுமைப்படுத்தாமல் விட்டது, அவர்மீது குற்றச்சாட்டாக இப்போது பார்க்கப்படுகிறது. உண்மையிலேயே, இவரின் செயல்பாட்டை யாரும் குறைகூற முடியாது. அதனால்தான் ராகுல் இப்போதுவரை திருநாவுக்கரசர் மீது மரியாதை வைத்துள்ளார்” என்றார்கள்.

அதன்பிறகு, ப.சிதம்பரத்தை ஒருபுறம் சரிகட்டும் வேலையிலும், மற்றொரு புறம் ராமசாமியை வைத்து டெல்லிக்குக் கடிதம் எழுத வைக்கவும் ஏற்பாடுகள் நடந்தன. காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் கட்சித் தலைவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. அந்தச் செல்வாக்கின் அடிப்படையில், ராமசாமி எழுதிய கடிதத்துக்கு டெல்லி தலைமை ரியாக்‌ஷன் காட்டியது. சிதம்பரத்திடம் கடந்த வாரம் தலைவர் பதவியை மாற்றுவதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதுவரை தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கவனத்தைச் செலுத்தாத சிதம்பரம், இந்த முறை தனது காய்களை நகர்த்த ஆரம்பித்தார். தனது ஆதரவாளருக்குத் தலைவர் பதவியைக் கொடுக்கும் முடிவுக்கு வந்தார். அதே நேரம், தலைவர் பதவி பறிபோகும் தகவல் திருநாவுக்கரசர் காதுக்கும் எட்டியது. உடனடியாக டெல்லி விரைந்து ராகுலைச் சந்திக்க முயன்றார். ஆனால், ராகுல் காந்தி திருநாவுக்கரசருக்கு நேரம் ஒதுக்காமல் இழுத்தடித்தபோதே, தலைவர் பதவி மாற்றம் என்கிற உறுதிக்குத் திருநாவுக்கரசர் வந்துவிட்டார். சிதம்பரத்தின் ஆலோசனையில், அவருடைய ஆதரவாளருக்குத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதற்கு மறுதினம், திருநாவுக்கரசருக்கு ராகுலைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. 

அந்தச் சந்திப்பில்தான், ஏற்கெனவே இருந்த தேசியச் செயலாளர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் பதவியைத் திருநாவுக்கரசருக்கு தரும் மனநிலையில் இருக்கிறாராம். அதேபோல, அவர் தேர்தல் களத்தில் நின்றால் வாய்ப்பளிக்கலாம், அவர் மகனை நிறுத்துவதாக இருந்தால் யோசிக்க வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களிடம் ராகுல் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. `தான் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு ரவுண்டு வருவேன்' என நம்பிக்கையுடன் சொல்லிவருகிறாராம் திருநாவுக்கரசர். பதவி ஏற்றபோது அனைவருக்கும் பிடித்த தலைவராக இருந்தவர், பதவியிலிருந்து இறங்கும்போது பகையைச் சம்பாதித்துக்கொண்டு இறங்கியுள்ளார்.