Published:Updated:

``ராகுலும் பிரியங்காவும் தமிழகம் வருகிறார்கள்!'' - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி!

``ராகுலும் பிரியங்காவும் தமிழகம் வருகிறார்கள்!'' - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி!
``ராகுலும் பிரியங்காவும் தமிழகம் வருகிறார்கள்!'' - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஆளும் பா.ஜ.கவை எதிர்த்து, இந்திய அளவில் பெரும்பாலான முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்திருக்கின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது முதல் அரசியல் களம் இன்னும் அதிகம் சூடுபிடித்தது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டபிறகு காங்கிரஸ் தலைவர் ஒருவர் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் கட்சியின் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசர், டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியிருக்கிறார். ``தலைவர் பதவி கொடுக்கப்பட்டபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனோ, அதைவிட அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். நாற்பது ஆண்டு அரசியல் பயணத்தில் அனைத்துப் பதவிகளையும் பார்த்தவன் நான். எனக்கு அரசியலில் எதிரியே கிடையாது. நான் தலைவராக இருந்தபோது அனைத்து வித ஒத்துழைப்பும் கொடுத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. புதிய தலைவர் பதவியேற்றுள்ள அழகிரிக்கு வாழ்த்துகள்' என்று டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் திருநாவுக்கரசர். 

இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் ராகுலை டெல்லியில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ``கட்சியின் அடிமட்ட கட்டுமானத்தைப் பலப்படுத்த வேண்டும். அதுவே, நாங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணியாக இருக்கும்” என்று ராகுலைச் சந்தித்தபின் பேட்டியளித்தார் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி. அவர் பதவி ஏற்றவுடன் செய்த சில நடவடிக்கைகள் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. அவை,

ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

திருநாவுக்கரசர் தலைமையில் 35 பேர் கொண்ட தேர்தல் பரப்புரைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் உள்ளனர்.

தற்போது டெல்லியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸின் பிரசார யுத்தி என்னவாக இருக்கும்?

மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.கவும், மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் நாட்டின் வளர்ச்சியை அதளபாதாளத்துக்கு இட்டுச் சென்றுள்ளன. பொருளாதாரம், விவசாயம், சமூகம் என எந்தத் தளத்திலும் அவர்களுக்குப் புரிதல் இல்லை. இந்தக் கட்சிகளால் நம் நாடு அனைத்து மட்டங்களிலும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விவசாயத்தில் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறோம். ஜிஎஸ்டி தொழில் துறையை முடமாக்கியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து ஏறு முகத்தில் இருக்கிறது. இதையெல்லாம் நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லி, இதற்கான மாற்றையும் ஒவ்வொரு மக்களுக்கும் கொண்டு செல்வோம்.

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகிவிட்டதா?

இதுவரை இல்லை. காங்கிரஸ் கட்சியின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து அதன்பிறகு கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பிப்ரவரி 9-ம் தேதி செயற்குழு நடக்கவிருக்கிறது.

ராகுல் காந்தி எப்போது தமிழகம் வருகிறார்?

பிப்ரவரி இறுதிக்குள் தன்னுடைய முதற்கட்டப் பிரசாரத்தை தமிழகத்தில் தொடங்கவிருக்கிறார் ராகுல். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கவிருக்கிறோம்.

பிரியங்கா காந்தி தமிழகம் வரும் வாய்ப்பிருக்கிறதா?

நிச்சயம் வருகிறார். அவருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது. மக்களும் அவரை அதிகம் விரும்புகிறார்கள். பிரியங்கா காந்தி தமிழகம் வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

திருநாவுக்கரசர் மாற்றப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இருக்கிறதா?

அப்படி எதுவுமில்லை. இது அகில இந்திய காங்கிரசின் முடிவு. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.