தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

சுகிதா சாரங்கராஜ்

2019-ம் ஆண்டு மகளிர் தினத்துக்கான கருப் பொருளாக இருப்பது #BalanceforBetter என்பதுதான். பாலினச் சமத்துவத்தைச் சீர்செய்வது, உறவைச் சமத்துவத்தோடு கையாள்வது போன்றவற்றை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது. சமத்துவத்தை அடைவதற்குப் பெண்களுக்கான உரிமைகள் சட்ட ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா போன்ற பன்மைச் சமூகச் சூழல்கொண்ட நாடுகளில் சட்டங்கள் மட்டும் இல்லையென்றால், எவையெல்லாம் பெண்களுக்கான உரிமைகள் என்றுகூடப் பலர் அறிந்திருக்க முடியாது.  

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது இதை மனதில்கொண்டே செயல்பட்டார். பெண்களின் உரிமை, கல்வி, மேம்பாடு அனைத்தையும் கணக்கில்கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் 15 பெண்களும் இடம்பெறும்படி செய்தார். இந்த மகளிர் தினத்தில் அவர்களை நினைவுகூர்வது மிக அவசியம்.

1950-ம் ஆண்டு, 389 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம்வகித்த 15 பெண்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பங்குகொண்டார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, மகளிர் மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த 15 பெண்களும் செயல்பட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகத் துணைபுரிந்துள்ளார்கள். இவர்களைப் பற்றிய ஓர் அறிமுகம் இது...


அம்மு சுவாமிநாதன்

கேரளாவைச் சேர்ந்த அம்மு சுவாமிநாதன், 1946-ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினர். 1917-ம் ஆண்டு அன்னிபெசன்ட் உள்ளிட்டோருடன் இணைந்து இந்திய மகளிர் சங்கத்தைத் தொடங்கியவர்.

டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க அம்முவை அணுகியபோது, `` `இந்தியப் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமை இல்லை’ என்று மற்ற நாடுகளில் பேசுகிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதிலேயே பெண்களின் பங்கு இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்கப்படுகிறது என்பதற்கு இதுவே சான்று’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அம்மு சுவாமிநாதன். 1952-ம்
ஆண்டு மக்களவைக்கும், 1954-ம் ஆண்டு மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்  இவர்.

தாக்ஷாயினி வேலாயுதன்

கேரளாவில் கொச்சினில் பிறந்தவர் தாக்ஷாயினி வேலாயுதன். கொச்சின் சட்டமன்ற கவுன்சிலுக்கு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட முதல் பட்டியலினப் பெண் உறுப்பினர். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து படித்த முதல் பெண்மணியாக வெளியுலகுக்கு அறிமுகமான தாக்ஷாயினி எதிர்கொண்ட போராட்டங்கள் ஏராளம். முண்டு மட்டுமே கட்டியிருந்த பெண்களுக்கு மத்தியில், `மேலாடை உடுத்திய முதல் பெண்’ என்று, உடுத்தும் உடைக்கே போராட்டங்கள் கண்டவர். அவர் கற்ற கல்வி, அவருக்கு மேலாடை உடுத்தும் வாய்ப்பை வழங்கியது. கொச்சின் சட்டமன்ற கவுன்சிலில் 1945-ம் ஆண்டு நியமன உறுப்பினரானார் தாக்ஷாயினி வேலாயுதன். `1946-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பட்டியலினப் பெண்’ என்கிற பெருமையையும் பெற்றார்.

ஆய்சாஸ் ரசூல்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பேகம் ஆய்சாஸ் ரசூல், முதல் இஸ்லாமியப் பெண் உறுப்பினராக உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் அங்கம்வகித்தவர். காங்கிரஸில் இணைந்த ஆய்சாஸ் ரசூல் 1952-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு 1969-லிருந்து 1990 வரை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது சமூகசேவைக்கு அங்கீகாரமாக 2000-ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

துர்காபாய் தேஷ்முக்

ஆந்திராவைச் சேர்ந்த துர்காபாய் தேஷ்முக், மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் 1930-ம் ஆண்டு பங்குகொண்டவர். 1936-ம் ஆண்டு, ஆந்திரமகிள சபாவை உருவாக்கியவர். மத்திய அரசின் சமூகநல வாரியத் தலைவர், தேசிய பெண்கள் கல்வி மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர்... இப்படி அரசின் பல துறைகளில் உயர்நிலைப் பொறுப்புகளை வகித்தவர். நாடாளுமன்ற உறுப்பினரான துர்காபாய் தேஷ்முக், திட்டக்குழுவிலும் இடம்பிடித்தார். 1975-ம் ஆண்டு, துர்காபாயின் பொதுப்பணிகளைப் பாராட்டி பத்மவிபூஷண் விருது வழங்கியது, இந்திய அரசு. 

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

சரோஜினி நாயுடு

ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சரோஜினி நாயுடு, இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர். 1931-ம் ஆண்டு காந்தியோடு வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டவர். ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்காவுக்குப் பயணம்செய்து இந்திய காங்கிரஸை வளர்த்தவர். `கவிக்குயில்' சரோஜினி நாயுடுவின் சேவையைப் பாராட்டி `நைட்டிங்கேல் ஆப் இந்தியா’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது.

ஹன்சா ஜிவ்ராஜ் மேத்தா, விஜயலஷ்மி பண்டிட், பூர்ணிமா பானர்ஜி, கமலா செளத்ரி, ரேணுகா ராய், மாலதி செளத்ரி 

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

குஜராத்தைச் சேர்ந்த ஹன்சா ஜிவ்ராஜ் மேத்தா, உத்தரப்பிரதேசத்தில் பிறந்த நேருவின் சகோதரி விஜயலஷ்மி பண்டிட், பூர்ணிமா பானர்ஜி, கமலா செளத்ரி, மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்டு லண்டனில் பிறந்து வளர்ந்த ரேணுகா ராய், இன்றைய வங்கதேசம் அன்றைய கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த மாலதி செளத்ரி உள்ளிட்டவர்கள் சுதந்திரப் போராட்டத்திலும் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், உப்புச்சத்தியாக்கிரகம் உள்ளிட்ட இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டவர்கள். அதேபோன்று காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக ஒரு காலகட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஒத்துழையாமை இயக்கம், சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகச் சிறை சென்றவர்கள்.   

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

சூசிட்டா கிரிபாலினி

ஹரியானாவில் பிறந்து டெல்லியில் வளர்ந்து உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆனவர் சூசிட்டா கிரிபாலினி. இவர்தான் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.

லீலா ராய்

அசாமில் பிறந்த லீலா ராய், அன்றைய காலகட்டத்திலேயே பெண்கள் மட்டும் பங்குகொண்ட `ஜெயஸ்ரீ’ பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றியவர். 

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

ராஜகுமாரி அம்ரித் கவுர்

ராஜகுமாரி அம்ரித் கவுர், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நிறுவியவர். காசநோய், தொழுநோய் உள்ளிட்ட நோய்களை அகற்றும்வண்ணம், பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் அமைப்புகளை உருவாக்கியவர். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவரது சேவையைப் பாராட்டி மருத்துவ சேவைக்காக `தேசத்தின் ராணி’ என்று அழைத்தது. 

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

அன்னி மஸோகரனி

கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர், அன்னி மஸோகரனி. லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்தியச் சுதந்திரப் போராட்டங்களில் பங்குகொண்டவர். முதல் மத்திய அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் மின்துறைக்குக் கூடுதல் பொறுப்பு அமைச்சராகவும் அங்கம்வகித்தார்.

பெரும்பாலும் இந்தப் பெண்கள் அனைவரும் அரசின் உயரிய துறைகளில் தலைவராக, துணைத் தலைவராக, வாரியத் தலைவராக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக பொறுப்பு வகித்தவர்கள். அதேபோன்று மகளிர் மாநாட்டுகளுக்குத் தலைமை தாங்கியவர்கள். மகளிர் கூட்டமைப்பு, கல்வித் திட்டங்களுக்கான அமைப்புகளில் உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்து இன்றைய பல்வேறு திட்டங்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்தவர்கள்.  இவர்களில் பலர் எழுத்தாளர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் கூடுதல் பணியாற்றியுள்ளனர்.

இப்படி அன்றைய காலகட்டத்திலேயே ஆண்களுக்கு நிகராகப் பெண்கள், பல்வேறு பொறுப்புகளில் தங்களுடைய திறமைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் உயர்பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். இவர்களே நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தேவதைகளாகவும் இருந்திருக்கிறார்கள். தமிழகப் பெண்கள் அன்றைய  நாடாளுமன்றத்தில் (Constitutional Assembly) இடம்பெறாத காரணத்தால், அரசியலமைப்புச் சட்டத்தைச் செதுக்கும் பணியில் தமிழகப் பெண்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.