சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தேறுமா தே.மு.தி.க?

தேறுமா தே.மு.தி.க?
பிரீமியம் ஸ்டோரி
News
தேறுமா தே.மு.தி.க?

தேர்தல் 2019 - இந்த வாரம்: தேமுதிக

தேறுமா தே.மு.தி.க?

2004 ஜூலை 13...

இடிமுழக்கத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தது கள்ளக்குறிச்சி. கட்டுக்கடங்காத கூட்டம் திமிறிக் கொண்டிருந்தது. மைக் பிடித்த விஜயகாந்த், ‘`மக்களைச் சந்தித்து ஓட்டு வாங்காமல் கொல்லைப்புற வழியாக மத்திய மந்திரி பதவியை அடைகிறார்கள். நீர்ப்பாசனத் துறையைக் கேட்காமல் வருமானம் வரும் துறைகளுக்காக அடித்துக்கொள்கிறார்கள்’’ என கர்ஜித்தார்.

இந்தச் சம்பவத்துக்கு இரண்டு மாதம் முன்புதான், 2004 எம்.பி தேர்தல் நடந்து முடிந்திருந்தது. தி.மு.க. அணியில் இடம்பெற்ற பா.ம.க. அத்தனை தொகுதிகளிலும் வென்றது. தேர்தலுக்குப் பிறகு அமைந்த மன்மோகன் சிங் ஆட்சியில், தேர்தலில் போட்டியிடாத அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சர் ஆனார். அதன்பிறகுதான் அவர் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார். அன்புமணி ராஜ்யசபா எம்.பி ஆனது ஜூன் 30. விஜயகாந்த் கர்ஜித்தது ஜூலை 13.

2006 சட்டசபைத் தேர்தலில் வன்னியர் பெல்ட்டான விருத்தாசலத் ‘தில்’ விஜயகாந்த் நின்று ஜெயித்ததும்...  “என்னைக் குடிகாரன் எனச் சொல்லும் ஜெயலலிதா, எனக்கு ஊற்றிக் கொடுத்தாரா?’’ என பதிலடி கொடுத்ததும்.... சட்டசபைக்குள் நாக்கைத் துருத்தியதும் என விஜயகாந்தின் துணிச்சல்தான் தே.மு.தி.க-வை வளர வைத்தது. ஆனால், இன்று கட்சியின் நிலை என்ன? வளர்ந்த வேகத்திலேயே அதன் graph சரிய ஆரம்பித்துவிட்டது.

முதன்முறையாக 2016 சட்டசபைத் தேர்தலைத் தனித்து எதிர்கொண்டது தே.மு.தி.க. விருத்தாசலத்தில் விஜயகாந்த் மட்டுமே ஜெயித்தார். ஆனால், தே.மு.தி.க குவித்த வாக்கு 128 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது. 150-க்கும் மேற்பட்ட இடங்களில் 3-வது இடத்தைப் பிடித்தது. 105 இடங்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கியது. எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் அரங்கைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

தேறுமா தே.மு.தி.க?

அ.தி.மு.க-வை 62 தொகுதிகளிலும், தி.மு.க-வை 23 இடங்களிலும், பா.ம.க-வை 12 இடங்களிலும், ம.தி.மு.க-வை 11 இடங்களிலும், காங்கிரஸை 10 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகளை 6 இடங்களிலும் தனிப்பட்ட முறையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். ஆட்டம் அதோடு நிற்கவில்லை. அடுத்து வந்த 2009 எம்.பி தேர்தலிலும் தொடர்ந்தது. 40 தொகுதிகளில் தனித்துக் களமிறங்கி, பட்டையைக் கிளப்பியது. பெரும்பாலான தொகுதிகளில் 50,000-க்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து, மூன்றாம் இடத்தைப் பிடித்தது. முந்தைய தேர்தலில் 27.64 லட்சம் ஓட்டுகளை அள்ளிய தே.மு.தி.க., இப்போது 31.26 லட்சம் ஓட்டுகளை அள்ளியது. 8.45 சதவிகித வாக்கு 10.08 ஆக உயர்ந்தது.

‘குடிகாரன்’ என்கிற கடும் விமர்சனத்தை விஜயகாந்த் மீது வைத்த ஜெயலலிதா, அவரிடமே 2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்ததற்குக் காரணம் 2009 எம்.பி தேர்தலில் தே.மு.தி.க பெற்ற வாக்குகள்தான். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க 41 தொகுதிகளைப் பெற்று, 29 இடங்களில் வென்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். ஆனால், அதைத் தக்க வைத்துக்கொள்ளத் தவறினார். தே.மு.தி.க எம்.எல்.ஏ-கள், ‘தொகுதிப் பிரச்னைக்காக’ (!) அம்மாவைப் பார்த்தார்கள். அடுத்தடுத்து தே.மு.தி.க எம்.எல்.ஏ-கள் முகாம் மாற... கட்சியும் கரைய ஆரம்பித்தது.

கட்சியின் செல்வாக்கை நிலைநாட்ட நினைத்தார் விஜயகாந்த். 2014 எம்.பி தேர்தல் நெருக்கத்தில், உளுந்தூர்ப்பேட்டையில் ‘ஊழல் எதிர்ப்பு மாநாடு’ போட்டார். “தொண்டர்களிடம் கேட்டுக் கூட்டணியை முடிவு செய்வோம்’’ என்றார். “தனித்துப் போட்டியிட வேண்டும்’’ என்றனர் தொண்டர்கள். ஆனால், விஜயகாந்த், “தலைவர் வேறு முடிவு எடுத்தாலும் நீங்க ஏத்துக்கணும்’’ என்றார். தனக்குள் ஒரு முடிவை வைத்துக்கொண்டு, தொண்டர்கள் கருத்து கேட்டது எல்லாம் அக்மார்க் நடிப்பு. மன்மோகன் சிங்கையும் சந்தித்தார்; மோடியையும் பார்த்தார். எது டீலுக்கு வரும் என பி.ஜே.பி., காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிடமும் நூல் விட்டார். பேரம் எல்லாம் முடிந்த பிறகு, பி.ஜே.பி கூட்டணிக்கு “ஓகே’’ என்றார். பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க கட்சிகளோடு சேர்ந்து 2014 எம்.பி தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த், ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தே.மு.தி.க-வின் சரிவு தொடங்கியது இங்கே.

அடுத்த சரிவு 2016 சட்டசபைத் தேர்தலில் அரங்கேறியது. முந்தைய தேர்தலில் ‘ஊழல் எதிர்ப்பு மாநாடு’ போட்டவர் இப்போது ‘தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு’ என்ற தோரணத்தைக் கட்டினார். இவையெல்லாம் ‘வாக்கு வங்கி’ ஜபர்தஸ்த்தைக் காட்ட நடந்த ஏற்பாடு. பி.ஜே.பி சார்பில் பேச மத்திய அமைச்சர் ஜவடேகர் வந்தார். பொன்னாரும் தமிழிசையும் ‘ஆண்டாள் அழகர்’ இல்லத்துக்குப் படையெடுத்தனர். ‘ஸ்டன்ட் நடிகர் அதனால்தான் பிடி கொடுக்காமல் இருக்கிறார்... அவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும்... பழம் கனிந்திருக்கிறது...’ என்றெல்லாம் உருகினார் கருணாநிதி. ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் கடைசிநேரத்தில் இணைந்த விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

104 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில்கூட தே.மு.தி.க ஜெயிக்கவில்லை. 103 இடங்களில் டெபாசிட் இழந்தது. உளுந்தூர்ப்பேட்டையில்  விஜயகாந்தே டெபாசிட்டைப் பறிகொடுத்தார். கிட்டத்தட்ட தே.மு.தி.க சரிந்தேபோனது. தனித்து நின்றபோது, 10.08 சதவிகிதத்தைத் தொட்ட தே.மு.தி.க வாக்கு சதவிகிதம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது 2.39 ஆகக் குறைந்தது.

தே.மு.தி.க மீண்டும் எழுந்து நிற்கும் என்கிற கட்சியினரின் நினைப்பை மொத்தமாகத் துடைத்தெறிந்தது அடுத்துவந்த இடைத்தேர்தல் முடிவுகள். தே.மு.தி.க-வுக்குச் செல்வாக்கான தொகுதியான திருப்பரங்குன்றத்தில் 3-வது இடத்தைக்கூடத் தொட முடியவில்லை. 4-வது இடத்துக்குப் போன தே.மு.தி.க வாங்கிய வாக்குகள் வெறும் 4,105-தான். தஞ்சாவூரில் 1,534 வாக்குகள். அரவக்குறிச்சியில் 1,513 வாக்குகள். நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிடக் குறைவான வாக்குகளை தே.மு.தி.க பெற்றது. 3-வது பெரிய கட்சி... எதிர்க் கட்சி அந்தஸ்து... எனச் சிகரத்தின் உச்சிக்குப் போன தே.மு.தி.க அப்படியே. அதல பாதாளத்தில் விழுந்தது. 

தே.மு.தி.க செல்வாக்கு சரிவு, விஜயகாந்த் உடல்நிலை இப்படியான சூழலில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது தே.மு.தி.க. இப்போது தே.மு.தி.க-வுக்கு ஏற்பட்டிருக்கும் மவுசு செல்வாக்கால் அல்ல, சூழலால். கடந்த எம்.பி தேர்தலைத் தனியாகச் சந்தித்து, 37 தொகுதிகளைக் கைப்பற்றிய அ.தி.மு.க., இப்போது  தடுமாறிக்கொண்டிருக்கிறது. எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காகவே தே.மு.தி.க-வைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க இணைந்தால் அ.தி.மு.க கூட்டணி பலமாகிவிடும் என அச்சப்படுகிறது தி.மு.க. அதனால்தான், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்து விடக் கூடாது என்பதில் தி.மு.க அக்கறையாக இருக்கிறது.  இப்படியான அரசியல் போக்கில், முந்தைய செல்வாக்கு சரிந்து போயிருக்கும் தே.மு.தி.க., பிகு பண்ண ஆரம்பித்துவிட்டது. இரண்டு பக்கமும் பேரம் பேசிக்கொண்டிருந்தது. 

தேறுமா தே.மு.தி.க?

தேர்தலில் போட்டியிடாமல் அன்புமணி ராஜ்யசபா எம்.பி ஆனதைக்  கண்டித்த விஜயகாந்த் கட்சிதான், ராஜ்யசபா சீட்டுக்கும் அடிபோடுகிறது. பிரேமலதாவோ சுதீஷோ கொல்லைப்புற வழியாக ராஜ்யசபாவுக்குள் நுழைய இந்தத் தேர்தலைப் பகடைக்காயாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

விஜயகாந்த்தின் ராசி எண் 5. தே.மு.தி.க உதயமானது செப்டம்பர் 14-ல். 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் 41. கடந்த எம்.பி தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் 14. 2016 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட இடங்கள் 104. இதன் கூட்டுத்தொகை அத்தனையும் ஐந்துதான். இப்படி ராசி பார்க்க, ஜாதகத்தைக் கணிக்கத் தெரிந்தவர்களுக்குத் தொண்டர்களின் மணக்கணக்கு தெரியாமல்போனது. 

கடந்த சட்டசபைத் தேர்தலில் தர்மர் (விஜயகாந்த்) பக்கத்தில் நின்ற பீமன் (திருமாவளவன்), அர்ச்சுனன் (வைகோ), நகுலன் (ஜி.ராமகிருஷ்ணன்), சகாதேவன் (முத்தரசன்) யாரும் இப்போது இல்லை. ஒன்றாக இருந்தபோதே பாண்டவர் அணி தோற்றது. இப்போது தர்மர் தனியாக நின்று, வெற்றிபெற முடியாது என்பதால், கெளரவர்கள் படைக்குத் தேர் ஓட்டத் தொடங்கிவிட்டார்.  “இரண்டு தீய சக்திகளையும் எதிர்த்துப் போர்க்களத்தில் இறங்கியிருக்கிறோம்’’ என அன்றைக்குச் சொன்ன விஜயகாந்த், இன்றைக்கு அந்தத் தீய சக்திகளிடமே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.  “நான் ‘கிங் மேக்கரா’க இருப்பதைத் தொண்டர்கள் ஏற்கவில்லை. ‘கிங்’காக இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்’ என முன்பு சொன்ன விஜயகாந்த், இன்றைய அரசியல் சதுரங்கத்தில் அரசனாகவோ, அரசியாகவோ, அமைச்சராகவோகூட ஆசைப்படவில்லை. காலாட் படையாகவாவது இருந்துவிடலாம் எனக் களமாடுகிறார்.

கரைசேருமா கேப்டனின் கப்பல்?

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, ஓவியம்: ஹாசிப்கான்

பிரேமலதா போட்ட பிரேக்!

2016 சட்டசபைத் தேர்தலில் கலாநிதி மாறன் வீட்டில் தி.மு.க-வோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது தே.மு.தி.க. 50 தொகுதிகள் வரையில் தர ஒப்புக்கொண்டது தி.மு.க. 2011 தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த 41 தொகுதிகளைவிட இது அதிகம். ஆனால், பிரேமலதா பிரேக் போட்டார். ‘விஜயகாந்த் முதல்வர் ஆவார்’ என அரசியல் சூழல் தெரியாமல், தப்புக்கணக்கு போட்டார். மக்கள் நலக் கூட்டணியைச் சேர்த்துக்கொண்டு, அரசியல் களம் புகுந்தார். பிரேமலதாவின் அரசியல் அறிவை நம்பி விஜயகாந்தும் தேர்தலை எதிர்கொண்டார். படுதோல்விக்குப் பிறகு. “என்ன பிரேமா இப்படிப் பண்ணிட்ட...’’ என வருத்தப்பட்டார் கேப்டன்.

தேறுமா தே.மு.தி.க?

பண்ருட்டி ராமசந்திரன், சுந்தர்ராஜன், தமிழழகன், சாந்தி, பாண்டியராஜன், மைக்கல் ராயப்பன், அருண் சுப்ரமணியன், அருண் பாண்டியன், சுரேஷ் குமார் என தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ-க்களை அ.தி.மு.க வளைத்தது; அவர்களை வைத்தே விஜயகாந்தை விளாசியது; எதிர்க்கட்சித் தலைவர் அறையைச் சுருக்கியது; இப்படி தன்னைப் பழிவாங்கிய ஜெயலலிதாவுக்குத் தேர்தலில் கேப்டன் பாடம் புகட்டுவார் என நம்பிய தொண்டர்கள் ஆசையில் மண் விழுந்தது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதற்கே வழிகோலியது பிரேமலதா எடுத்த முடிவு. தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு தே.மு.தி.க-வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.