சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!

தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

மிழ்நாட்டில் 2016 சட்டமன்றத் தேர்தல், இருவகையில் முக்கியமான ஒரு தேர்தல். முதலாவதாக, கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் கடைசியாகக் களம் கண்ட தேர்தலாக அது அமைந்துபோனது. இரண்டாவதாக, கார்ப்பரேட்டுகள் அதிகாரபூர்வமாகக் கட்சிகளுக்குப் பணிசெய்ய ஆரம்பித்த தேர்தலாகவும் அதுவே இருந்தது. அப்போது இரண்டு கட்சிகள், கார்ப்பரேட் பாணி அரசியலை முன்னெடுத்தன. ஒன்று தி.மு.க, மற்றொன்று பா.ம.க. ஸ்டாலினுக்கும் அன்புமணிக்கும் பின்னால் அரசியல் மேலாண்மையைத் தொழிலாகச் செய்யும் இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்தன.

`அரசியல் மேலாண்மை’க்கு,  ‘Professional Politics’ என்று விளக்கம் அளிக்கிறது விக்கிப்பீடியா. ஒபாமாவின் ‘Change’, ட்ரம்ப்பின் ‘Make america great again’ போன்ற பிரசாரங்கள் ‘அரசியல் மேலாண்மை’யின் வடிவங்களே. அங்கே, அதற்கென்று தனிப்படிப்புகளும் இருக்கின்றனவாம். இந்தியாவில் அதற்குப் பிள்ளையார்சுழி போட்டவரென்று பிரஷாந்த் கிஷோரைக் கைகாட்டுகிறார்கள். ‘ஆப் கி பார்’ முதல் `ஹமாரா தேஷ் மே’ வரை, நரேந்திர மோடியை நாடு முழுவதும் மார்க்கெட்டிங் செய்தவர், அவர். இப்போது ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமாகிவிட்டார்.

2014-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் அவர் பிரபலமாகிறார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் குழுவில் இருந்த பலர், அவரிடமிருந்து பிரிகிறார்கள். ஆங்காங்கே தனித்தனி நிறுவனம் ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் கீழேயும் குழுக்கள் உருவாகின்றன. அந்தக் குழுவில் திறன்மிகு இளைஞர்கள் இணைக்கப் படுகிறார்கள். தேர்தல்கள் வரும்போது, கட்சிகளுக்கு ‘புரப்போசல்’ அனுப்புகிறார்கள். கட்சிகளும் ‘இது புதுசா இருக்கே’ என்ற ஆச்சர்யத்தில், கார்ப்பரேட்டுகளுக்கு வாசல் திறக்கிறார்கள். அன்புமணியும், ஸ்டாலினும் அதில் முக்கியமானவர்கள்.

தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!

அம்மையப்பன் எனும் சொல்லுக்குள் அகிலத்தையே ஆனைமுகன் அடக்கியதைப் போல, புராஜெக்ட் எனும் சொல்லுக்குள் அனைத்தையும் அடக்கிவிடும் கார்ப்பரேட். அவர்களுக்கு ஸ்டாலின் ஒரு புராஜெக்ட். அன்புமணி ஒரு புராஜெக்ட். அவ்வளவே! சமூகநீதியோ, சுயாட்சியோ, சாதி ஒழிப்போ, மொழி மேம்பாடோ, அவர்களுக்கு அவசியமில்லை. தேர்தல் நேரத்தில், மக்கள் முன்னால் ஒரு நாயகனை உருவாக்கி நிறுத்துதல் மட்டுமே அவர்களின் பணி.

2016-க்குச் செல்வோம். `மாற்றம் முன்னேற்ற’த்தை மறக்க முடியுமா என்ன? இந்த நொடிகூட, மாற்றம் முன்னேற்றம் எனும் சொல், எங்கேனும் பதியப்பட்டுக்கொண்டு இருக்கலாம்.

மாற்றம் முன்னேற்றத்திற்குப் பின்னிருந்த குழுவுடன் சம்பந்தப்பட்ட ஒருவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவர் அடிக்கடி சொன்ன சொல்... ‘பொசிஷனிங்!’ அதென்ன பொசிஷனிங்?  “தலைவர்கள் இரண்டு வகை. `Vertical’ தலைவர்கள், ‘Horizontal’ தலைவர்கள். காந்தி, அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் முதல் வகையில் வருவார்கள். மோடி, அன்புமணி போன்றவர்கள் இரண்டாம் வகை” என்றார். அதை எளிதாக இப்படி விளங்கிக்கொள்ளலாம்... `vertical’ தலைவர்கள் என்பவர்கள் கனியைப்போல பூத்து, காய்த்து, பழுத்து உருவாகுபவர்கள். ஆனால், ‘Horizontal’ தலைவர்கள் என்பவர்கள், ஊதப்படும் பலூன்கள்.

சட்டமன்றத்தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும்போது அன்புமணியைச் சந்திக்கிறது, அந்தக்குழு. `அன்புமணியை முதல்வராக்க வேண்டும்’ என்பதுதான், அவர்களுக்கு அளிக்கப்படும் அசைன்மென்ட்.

``மாற்றம் முன்னேற்றம் என்பதை நாங்கள் உருவாக்கவில்லை. 2014 தேர்தல் பிரசாரத்தில் ராமதாஸ் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். அதைக் கண்டெடுத்தோம். ராமதாஸிடம் காட்டினோம். அவரும் அதையே ‘டிக்’ செய்தார். அடுத்தடுத்த நாள்களில் அன்புமணியை வைத்து போட்டோஷூட் ஆரம்பித்தோம். மாற்றம் என்றால், மது, ஊழலை ஒழித்து மாற்றம் தருவோம் என்று அர்த்தம். முன்னேற்றம் என்றால், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு அளித்து முன்னேற்றுவோம் என்று அர்த்தம். அதையெல்லாம் அன்புமணி செய்வார் என்பதை உணர்த்துவதற்காக, ‘அன்புமணி’ என்ற வார்த்தையை அடியில் வைத்தோம்” என்று விவரித்தார் அவர்.

அதோடு நிற்கவில்லை அந்தக்குழு. ‘முதல்நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு’ என்று, அடுத்தடுத்து அஸ்திரங்களை எய்துகொண்டே இருந்தார்கள். `உங்கள் ஊர் உங்கள் அன்புமணி’ என்ற பெயரில் மாவட்டத் தலைநகரங்களில் ‘ஹைடெக்’ கலந்துரையாடல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. `அன்புமணி என்பவர், தமிழகம் முழுமைக்குமான ஒரு தலைவர்’ என்று முன்னிறுத்தப்பட்டார்.

அன்புமணியைத் தமிழகம் முழுக்கப் பரவலாகக் கொண்டு சென்றார்கள். ‘அன்புமணி’ எனும் பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். அதாவது, `பொசிஷனிங்’ செய்தார்கள்.

தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!

2016 தேர்தலில், பா.ம.க 25 லட்சம் வாக்குகளை வாங்கி, தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இப்போது, அந்த வாக்குவங்கியைக் காட்டிதான், அ.தி.மு.க-விடம் 7 சீட்டுகள் வரை வாங்கியிருக்கிறார்கள்.

தேர்தலுக்குச் சில மாதங்கள் இருக்கும்போது காவிரிப்பிரச்னை பற்றுகிறது. அப்போது கேப்டனுக்குப் படுகிராக்கி. பழம் நழுவிப் பாலில் விழுமா என்று பல கட்சிகள் தவம் கிடந்தன. அப்போதுதான் கேப்டன் ஓர் அறிவிப்பு விடுகிறார். ‘காவிரிப்பிரச்னைக்காக, கட்சித்தலைவர்களை அழைத்துக்கொண்டு என் தலைமையில் பிரதமரைச் சந்திக்கப்போகிறேன்’ என்று சொல்கிறார். ஒவ்வொரு கட்சி அலுவலகமாகச் சென்று தலைவர்களைச் சந்தித்து அழைப்பு விடுக்கிறார். அப்போது, அன்புமணியையும் தொடர்புகொள்ள முயல்கிறார்கள் முரசுக்கட்சிக்காரர்கள். ஆனால், அன்புமணி `நாட் ரீச்சபிள்’ ஆகிறார். அப்புறம், டெல்லிக்குச் சென்று கேப்டன் ‘தூக்கியடித்தது’ வேறு கதை. ஆனால், அன்புமணி அதிலிருந்து தப்பித்தார். அன்புமணி ‘அவுட் ஆப் ரீச்’ ஆவதற்கு ஆலோசனை கொடுத்தது, அந்தக்குழு. அப்புறம் சில நாள்களில், விவசாயிகளை அழைத்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு, தனியாக ஸ்கோர் செய்தார் அன்புமணி. அதுவும் அந்தக் குழுவின் ஆலோசனையே!

அப்படியே கர்நாடகத்துக்குச் செல்வோம். அங்கே கடந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சித்தராமையாவுக்கு வேலை செய்கிறது அதே குழு. தமிழகத் தேர்தல் களத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது கர்நாடகத் தேர்தல் களம். பல ஆண்டுகளாக, தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் மாநிலம். அங்கேயும் கிட்டத்தட்ட அதே பணிதான், அதே பாணிதான்... ‘சித்தராமையாவைத் தனிப்பெரும் தலைவராக நிலைநிறுத்துவது!’

அப்போது, மராட்டியத்திலிருந்து பெங்களூருக்கு வரும் ஒரு எதிர்க்கட்சிப் பிரமுகர், ‘`பெங்களூரு குப்பைமேடுபோல இருக்கிறது” என்று ஆதாரங்களை அடுக்குகிறார். சித்தராமையா ஆடிப்போகிறார். உடனே, ‘நம்ம பெங்களூரு நம்ம ஹெம்மா’ (நமது பெங்களூரு நமது பெருமை) என்ற பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பிரசாரம் ஆரம்பித்த சில நாள்களில், ‘பெருமைமிகு பெங்களூருவை அவமதிக்கிறார்கள்’ என்பதாக விவகாரம் திசை திரும்புகிறது. குறைகூறிய குரூப், இப்போது கப்சிப்!

இன்னொரு சிக்கலும் எழுகிறது. எடியூரப்பா, குமாரசாமி போன்ற தலைவர்களை சித்தராமையாவுக்கு நிகரான இடத்தில் வைத்திருக்கிறார்கள் கர்நாடக மக்கள். அவர்களிடமிருந்து இவரை எப்படி வேறுபடுத்துவது என்று சிந்திக்கிறார்கள். சித்தராமையாவுக்கு ‘தெற்கின் தலைவன்’ எனும் பிம்பத்தை ஏற்படுத்தலாம் என்ற திட்டம் உருவாகிறது. சில நாள்களில், ‘`தென்னக மாநிலங்கள் வட மாநிலங்களைவிட அதிகளவில் வரி கட்டுகின்றன. ஆனால், கட்டும் வரித்தொகைக்கு ஏற்ற நிதி திரும்ப அளிக்கப்படுவதில்லை” என்று ஓர் அறிக்கை வெளியிடுகிறார் சித்தராமையா.

தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!

அதற்கு முன்னால், கர்நாடகத்திற்கென்று ஒரு கொடியும் அறிமுகப்படுத்தினார் சித்தராமையா. அதுவும், அந்த பிம்பக் கட்டமைப்புக்கு உதவுகிறது.

சிவசேனாவுக்கும் பணி செய்திருக்கிறது அதே குழு. பால்தாக்கரே மறைந்தபிறகு, ராஜ்தாக்கரேவை ஓரங்கட்டி உத்தவ் தாக்கரேவை சிவசேனாவின் தலைவராகக் கொண்டுவந்து நிறுத்தியதில் அந்தக் குழுவுக்குப் பெரிய பங்கு இருந்திருக்கிறது. அடிப்படையில் உத்தவ் சாதுவானவர். ஆனால், இப்போது உத்தவின் முகமென்ன? ‘ராமர் கோயிலை பா.ஜ.க கட்டாவிட்டால் சிவசேனா கட்டும்’ என்று முழங்கும் அளவுக்கு உக்கிரமானவராக மாறியிருக்கிறார். `ஹிந்து ஹ்ருதய் சாம்ராட்’ பட்டத்துக்கு மோடியிடம் மோதும் அளவுக்கு உருவாகியிருக்கிறார். இவையெல்லாமே, அந்தக்குழுவினரின் ‘ஸ்ட்ரேட்டஜி’யின் மூலம் சாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆக, நாம் பார்த்தது அவர்களின் அன்புமணியை. நாம் பாராட்டியது அவர்களின் சித்தராமையாவை. நாம் பயப்பட்டது அவர்களின் உத்தவ் தாக்கரேவுக்கு.

கட்சிகளுக்குள் கார்ப்பரேட்டுகள் வருவது, ஒன்றை நன்றாக உணர்த்துகிறது. இனிமேல், தலைவர்கள் உருவாகப்போவதில்லை, உருவாக்கப்படுவார்கள். கட்சிகளின் இலக்கு தேர்தல் மட்டுமானதாக மாறும். அந்தத் தேர்தலும், ஐபிஎல் போட்டிகளைப் போலவே நடத்தப்படும். மோதும் அணிகளுக்குத் தனித்தனி ஆலோசகர் குழு செயல்படும். வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் ஏலத்தில் எடுக்கப் படுவார்கள். இரண்டு கட்சிகளும் இரு விதமான பெயர்களில் மோதுவார்கள். இதோ இப்போதே... ஆளும் கட்சியின் ‘நமோ வாரியர்ஸ்’ கிளம்பிவிட்டார்கள். அதற்குப் போட்டியாக, `ராகுல் ராக்கர்ஸ்’ என்ற அணியை உருவாக்கவேண்டிய தேவையையும் உருவாக்கிவிட்டார்கள்.கொள்கை, லட்சியம், தியாகம் எல்லாம் இப்போது அரசியலுக்கு சம்பந்தமில்லாத வஸ்துகளாகிவிட்டன.