
“தலைவர் ஆசையில் தப்பில்லையே?”
காங்கிரஸ் கட்சிக்குத் தி.மு.க 10 தொகுதிகளை ஒதுக்கியிருக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ். அவருடன் ஓர் அரசியல் சந்திப்பு...
* ‘`காங்கிரஸ் கட்சிமீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி வரும் பி.ஜே.பி அரசுமீது, ரபேல் தவிர மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எதையும் நீங்கள் வைக்க முடியவில்லையே?’’
‘`பண மதிப்பிழப்பு நடவடிக்கையே மிகப்பெரிய ஊழல்தானே..! அந்தச் சமயத்தில் மட்டும் குஜராத்தில் பெரும் அளவில் பணம் மாற்றியவர்கள் யார், யார்... எந்த வங்கிகளின் மூலமாக அவை மாற்றப்பட்டன? ஊழல் செய்வதற்கான கதவுகளைத் திறந்துவிடுவதே ஊழல்தானே...?
தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு ஊழல் அரசுதானே? ஆக, அவர்களோடு பி.ஜே.பி கூட்டணி சேர்ந்திருப்பது, ‘தமிழகத்தில் மட்டும் அவுட்சோர்ஸ் ஊழல்’ என்ற அடிப்படையில்தானே?

கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ‘பிரதம மந்திரி கடன் வசதித் திட்டம்’ என்று அறிமுகப்படுத்தினார்கள். இதன்படி கடனாளிகளைத் தேர்வு செய்வதற்கான அனுமதியை குஜராத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கினார்கள். இந்த நிறுவனம் ஒரு மனுதாரரைத் தேர்வு செய்யும் கட்டணமாக 1500 ரூபாய் வீதம், இந்தியா முழுவதும் ஒரு கோடிப் பேரிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்த இந்த நிறுவனத்தின் மொத்த முதலீடு என்பதே வெறும் இரண்டு, மூன்று லட்ச ரூபாய் மட்டுமே. சரி... இப்போது இதில் எத்தனை பேருக்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது, திட்டத்தின் இப்போதைய நிலை என்ன என்ற கேள்விக்கெல்லாம் எந்தப் பதிலும் இல்லை.
இதுமட்டுமல்ல... ‘விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டம்’ என்ற பெயரில் தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனி களுக்கு உரிமையைக் கொடுத்துவிட்டார்கள். இதற்கான பிரிமீயத் தொகையாக ஒவ்வொரு மாநில அரசும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாயைச் செலுத்தி வருகின்றன. பங்கேற்பாளர் என்ற முறையில் விவசாயிகளும் பணம் செலுத்திவருகிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையோ... நூற்றில் ஒரு பங்குகூட இல்லை! இப்படி மோடியின் எல்லாத் திட்டங்களுமே மோசடித் திட்டங்கள்தான்!’’

* காவிரி, நீட், ஹைட்ரோ கார்பன்... எனத் தமிழக நலனுக்கெதிரான திட்டங்களில் பி.ஜே.பி-க்கும் காங்கிரஸுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்கிறபோது, தமிழர்கள் ஏன் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்?
“பிரச்னைகளை மேலோட்ட மாகப் பார்க்கக்கூடாது. நீட் தேர்வை எடுத்துக்கொ ண்டால்கூட, ‘மாநில அரசு விருப்பப்பட்டால் நீட் தேர்வினை அமல்படுத்தலாம்’ என்றுதான் காங்கிரஸ் அரசு சொல்கிறது. ஆனால், மாநில அரசுகளின் கருத்துகளுக்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல், அராஜகமாக நீட் தேர்வை அமல்படுத்தியது பி.ஜே.பி அரசு.
பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் என எல்லா இடங்களிலும் சம்ஸ்கி ருதத்தையும் இதிகாசத்தையும் புகுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் மாநாட்டில்கூட, ‘ராமாயணக் காலத்திலேயே இன்டர்நெட் இருந்தது, பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது’ என்று அறிவியலைப் புறந்தள்ளிப் பேசுபவர்க ளுக்குத்தான் வாய்ப்பளி க்கப்படுகிறது என்றால், நாடு எங்கே போகிறது?

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் இதுவரை இல்லாத அளவுக்குத் திட்டமிட்டு, வட இந்தியர்க ளைப் பணியில் அமர்த்தி வருவதும் பி.ஜே.பி அரசுதான். உயர் வேலைகளில் ஆரம்பித்து துப்புரவுத் தொழில் வரை அனைத்திலுமே ராஜஸ்தான், குஜராத் என வட மாநிலத்த வர்தான் பணியமர்த்தப்ப டுகிறார்கள்.
சமீபத்தில், ‘வந்தே மாதரம்’ என்ற பெயரில் நவீன உயர் ரக ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கியது சென்னையிலுள்ள நமது ஐ.சி.எப் தொழிற்சாலை நிறுவனம். ஆனால், சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு தனது ஒரே உத்தரவில், இந்தத் தொழில்நுட்பத்தை அப்படியே உத்தரப்பிர தேசத்துக்கு மாற்றியளித்து விட்டார்கள்.
இந்தி மொழி பேசாத மாநில மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக பாவிக்கும் பி.ஜே.பி-யின் இந்தப் போக்கு, இப்படியே நீடித்தால்... தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் பேசும் மக்களுக்கு இந்த நாட்டில் என்ன பங்களிப்பு இருந்துவிடப் போகிறது? இதையெல்லாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்!’’

* ‘`சபரிமலை விவகாரம், 10 சதவிகித இட ஒதுக்கீடு என காங்கிரஸும்கூட பி.ஜே.பி-யின் பாதையில்தானே பயணிக்கிறது...?’’
‘`இல்லை. மாநில உரிமைகளைப் போற்றுவது, அரசியல் சாசன சட்ட நிறுவனங்கள் மற்றும் சமூக நீதியை மதித்தல், எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் என அடிப்படையான விஷயங்களில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதன் அடிப்படையில்தான் தி.மு.க-வோடு நாங்கள் கூட்டணியும் அமைத்திருக்கிறோம். ஆனால், ‘நீட் தேர்வு, 10 விழுக்காடு ஒதுக்கீடு’ போன்ற சில விஷயங்களில் எங்களுக்கி டையிலும் சில அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். அதனால்தான் ‘பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டங்களை’ கூட்டணிக் கட்சிகளுக்கி டையே ஏற்படுத்திக்கொ ள்கிறோம்.

அடுத்த விஷயத்துக்கு வருகிறேன்... நான் ஒரு கிறிஸ்துவன். நான் தேவாலயத்துக்குச் செல்வதோ, என் மதம் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வதோ அல்லது கொண்டாடுவதோ என் உரிமை. அதை நீங்கள் தவறென்று சொல்லிவிட முடியாது. இதைப்போன்ற ஓர் உரிமை, ராகுல்காந்திக்கும் இருக்கிறதுதானே... அதனால், தன்னை ஓர் இந்து என்று அவர் சொல்லிக் கொள்வதற்கும், இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதற்கும், தன்னுடைய மத மரபுகள் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. ‘நான் ஓர் இந்து’ என்று ராகுல்காந்தி சொல்வதினாலேயே அவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டவர் ஆகிவிடமாட்டார்.”

* ‘`நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி கிடைக்காமல் போனதில் வருத்தம் உண்டா?’’
‘`1969-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவன் நான். 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். எனவே, தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி எனக்குக் கிடைக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில், தலைவர் பதவியில் யார் இருந்தால் சரியாக இருக்கும் என்று ஆய்ந்து முடிவெடுப்பது அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைமைதான். அந்த வகையில், இப்போது கே.எஸ்.அழகிரி தலைமைப் பொறுப்பு ஏற்பதுதான் சரி என்று முடிவெடுத்திருக்கிறார்கள். எனது 30 ஆண்டுக்கால நண்பரான அழகிரிக்கு எனது முழு ஒத்துழைப்பையும் தருவதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை!’’

* ‘`காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைப் பெறுவதற்கான முயற்சியாக, நீங்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உதவியை நாடியதாகவும், அவர் மறுத்து விட்டதாகவும் கராத்தே தியாகராஜன் கூறுவது உண்மைதானா?’’
‘`நீங்கள் குறிப்பிடுகிற நபருக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தி.மு.க-விடம் போய் ‘எனக்குப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு நான் விவரம்கெட்டவனும் அல்ல; அதைப் பரிந்துரை செய்யும் அளவுக்கு தி.மு.க-வினரும் அரசியல் நாகரிகம் தெரியாதவர்களும் அல்ல. எல்லாக் கட்சிகளுக்கும் என்ன லிமிட் என்று தி.மு.க-வுக்கும் தெரியும்; 50 ஆண்டுக்காலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரனான எனக்கும் தெரியும்!’’
- த.கதிரவன்